பெற்றோரின் ஆசையை நிறைவேற்றிய ஒலிம்பிக் நாயகன் நீரஜ் சோப்ரா: வைரல் புகைப்படம்!

சிறிய கனவு நனவானது!
1 CLAP
0

பல வருடங்களுக்குப் பிறகு டோக்கியோ ஒலிம்பிக் மூலம் இந்தியாவின் தங்கப் பதக்க ஏக்கத்தை தீர்த்தவர் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா. இந்த சாதனையால் இந்தியாவின் ஹீரோவாக மாறியிருக்கும் நீரஜ் சோப்ராவுக்கு ஒருபுறம் வாழ்த்து மழையும், பரிசு மழையும் குவிந்து கொண்டிருக்கிறது.

சில நாட்கள் முன் இந்தியா திரும்பிய அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. தொடர்ந்து சுதந்திர தின விழாவில் மற்ற வீரர்களுடன் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார் நீரஜ்.

தொடர்ந்து, இந்தியாவில் கவனிக்கப்படும் நபராக மாறியிருக்கும் நீரஜ் சோப்ராவின் இன்றைய இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்று வைரலாகி இருக்கிறது. தனது பெற்றோர் மற்றும் குடும்பத்தினரை முதல்முறையாக விமானத்தில் கூட்டிச் சென்றுள்ளார் நீரஜ் சோப்ரா. இந்தப் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

"எனது பெற்றோரின் முதல் விமான பயணம் இது. முதல்முறையாக விமானத்தில் அவர்களை அழைத்துச் செல்ல முடிந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். என்னுடைய ஒரு சிறிய கனவு இன்று நனவாகி இருக்கிறது," என்று தனது பெற்றோரின் முதல் விமான பயணத்தின் புகைப்படங்களை பதிவிட்டு நெகிழ்ந்திருக்கிறார் நீரஜ்.

தனது பெற்றோர்களான சதீஷ்குமார் மற்றும் சரோஜ் தேவி உடன் தனது உறவினர்களையும் விமானத்தில் அழைத்துச் சென்றுள்ளார் நீரஜ். இவர் ஹரியானாவில் பானிபட் பகுதியில் உள்ள கந்த்ரா என்ற சிறிய கிராமத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார்.

அவரது தந்தை சதீஷ்குமார் ஒரு விவசாயி, அவரது தாயார் சரோஜ் தேவி ஒரு இல்லத்தரசி என்பது குறிப்பிடத்தக்கது. மிகவும் தாழ்மையான பின்னணியில் இருந்து இந்தியாவின் நட்சத்திரமாக உயர்ந்துள்ள நீரஜ், தற்போது தனது பெற்றோர்களின் ஆசையை நிறைவேற்றும் வகையில் விமானப் பயணம் செய்துள்ள இந்தப் புகைப்படம் வைரலாகி வருகிறது. பலரும் நீரஜுக்கு வாழ்த்துக்கள் சொன்ன வண்ணம் உள்ளனர்.

அவர்கள் எங்கு பயணம் செய்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் சோப்ராவின் பெற்றோர் தங்கள் முதல் விமானப் பயணத்தை மேற்கொள்வதால் அவர்கள் மூவரின் முகத்திலும் பெரும் புன்னகை இருந்தது.