ஆன்லைனில் கைவினைப் பொருட்கள் விற்பனை: கடந்த ஆண்டு 12 கோடி ரூபாய் விற்பனையை எட்டிய பிராண்ட்!

- +0
- +0
ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர் திலீப் பெய்ட். இவர், ‘திலீப் இண்டஸ்ட்ரீஸ்’ என்கிற வணிகத்தின் மூலம் இந்திய கைவினைப் பொருட்களை ஏற்றுமதி செய்கிறார். இந்நிறுவனம் 175 கோடி ரூபாய் டர்ன்ஓவர் கொண்டுள்ளது.
உலகமே இயந்திரமயமானாலும் கைகளால் தயாரிக்கப்படும் கைவினைப் பொருட்களுக்கு என்றுமே மவுசு குறைவதில்லை என்பதை இந்த விற்பனை அளவு உணர்த்துகிறது.

திலீப்பின் மகன் ஆயுஷ் பெய்ட். ஆயுஷிற்கு 24 வயதாகிறது. அப்பாவின் வணிகத்தைப் பார்த்து வளர்ந்ததாலோ என்னவோ கைவினைப் பொருட்கள் மீது ஆயுஷிற்கு ஈர்ப்பு இருந்தது. இந்தியாவின் கலை மற்றும் கலாச்சாரம், கைவினைப் பொருட்கள் வாயிலாக வெளிப்படுவதை ஆயுஷ் கவனித்தார். கைவினைப் பொருட்களுக்கான உள்நாட்டு தேவைகளைப் பூர்த்தி செய்யவும் விரும்பினார். இதுவே Ellementary என்கிற லைஃப்ஸ்டைல் பிராண்ட் தொடங்க ஊக்குவித்துள்ளது.
திலீப் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சில்லறை வர்த்தக பிராண்டாக 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்ட Ellementary 2019-20 ஆண்டுகளில் 12 கோடி ரூபாய் அளவிற்கு விற்பனை செய்துள்ளது.
சமையலறைப் பொருட்கள் உள்ளிட்ட கைவினைப் பொருட்களைத் தயாரிக்க இந்நிறுவனம் கைவினைஞர்களைப் பணியமர்த்துகிறது.
ஆயுஷின் முயற்சிக்கான ஆரம்பப்புள்ளி
ஆயுஷ் தனது அப்பாவின் வணிக செயல்பாடுகளில் உதவி வந்தார். வணிகத்தின் தரவுகளை ஆய்வு செய்தபோது இந்திய கைவினைப் பொருட்களுக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பும் அங்கீகாரமும் கிடைப்பதைத் தெரிந்துகொண்டார்.
அதேசமயம் உள்நாட்டு சந்தையில் கைவினைப் பொருட்களுக்கு, குறிப்பாக மார்பிள்-கிளாஸ், டெரக்கோட்டா சமையலறைப் பொருட்கள் பிரிவில் வணிக வாய்ப்பு இருப்பதையும் அவர் கவனிக்கத் தவறவில்லை.
இந்தியாவின் கலாச்சாரம் இந்திய நுகர்வோரைச் சென்றடையவேண்டும் என்று விரும்பினார்.
உடனே இதுகுறித்த ஆய்வில் இறங்கினார். நுகர்வோரின் தேவைகளைப் புரிந்துகொள்ள முயற்சி செய்தார். இது குறித்து உள்ளூர் கைவினைஞர்களுடன் கலந்துரையாடினார்.
“மின்வணிகம் மற்றும் தரவு பகுப்பாய்வு குறித்து நான் கற்றறிந்திருந்தேன். சந்தையை ஆழமாக ஆய்வு செய்தேன். என் அப்பாவின் கைவினைப் பொருட்களை மின்வணிக வலைதளம் மூலம் சில்லறை வர்த்தகம் செய்யும் யோசனை பிறந்தது,” என்கிறார்.

Ellementary பிராண்ட்
சிறந்த தரமான கைவினைத் தயாரிப்புகளை மட்டுமே விற்பனை செய்யவேண்டும் என்கிற நோக்கத்துடன் இந்நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.
சந்தையைத் தீவிரமாக ஆய்வு செய்து தகுந்த முன்னேற்பாடுகளுடன் பிசிசிஎல் நிறுவனத்தை இவர் அணுகியுள்ளார். இந்த முயற்சி பிடித்திருந்ததால் பிசிசிஎல் இந்நிறுவனத்திற்காக 250 கோடி ரூபாய் முதலீடு செய்தது. கூடுதலாக குடும்பத்தினரிடமும் நிதி திரட்டியுள்ளார்.
இந்திய கைவினைத் துறையைப் பொருத்தவரை இடைத்தரகர்கள் தலையீடின்றி வணிகம் நடப்பதில்லை. ஆனால் இடைத்தரகர்களை முற்றிலுமாக தவிர்த்துவிட்டு தயாரிப்பாளர்களை நேரடியாக வாடிக்கையாளர்களுடன் இணைக்கும் முதல் பிராண்டாக Ellementary உருவெடுத்தது.
Ellementary இந்திய சந்தையில் காணப்படும் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது. அதேபோல் திலீப் இண்டஸ்ட்ரீஸ் ஏற்றுமதியில் கவனம் செலுத்துகிறது. இது தொடங்கப்பட்டு 2019-20 ஆண்டிலேயே 12 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆஃப்லைன் ஸ்டோர்
கைவினைப் பொருட்கள் கைகளால் தயாரிக்கப்படும் நிலையில் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து வாடிக்கையாளர்கள் வாங்குவதால் கைகளால் தொட்டுணர முடியாமல் போவது இந்தத் துறையில் காணப்படும் மிகப்பெரிய சிக்கலாக இருந்தது.
”வாடிக்கையாளர்கள் சமையலறைப் பொருட்களை தங்கள் கைகளால் தொட்டு, உணர்ந்து அதன் பின்னரே வாங்க விரும்புகிறார்கள். இதனால் ஆன்லைனில் வாங்குவதில் அவர்களிடம் தயக்கம் இருப்பதை உணரமுடிந்தது,” என்கிறார் ஆயுஷ்.
ஆஃப்லைன் ஸ்டோர் ஒன்றே இதற்கான தீர்வாக இருந்தது. எனவே இந்த பிராண்ட் டெல்லி, ஜெய்ப்பூர், மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் ஆஃப்லைன் ஸ்டோர் தொடங்கி விரிவடைந்தது.
வணிக மாதிரி
Ellementary பி2சி வணிக மாதிரியில் செயல்படுகிறது. சொந்த வலைதளம் மூலமாகவும் அமேசான், மிந்த்ரா போன்ற மின்வணிக தளங்கள் மூலமாகவும் கைவினைத் தயாரிப்புகளை விற்பனை செய்கிறது.
திலீப் இண்டஸ்ட்ரீல் நிறுவனத்தில் இருந்து Ellementary உருவானது என்பதால் சர்வதேச உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் பின்பற்றப்படுகின்றன.

”எங்கள் நிறுவனம் 4,000-க்கும் அதிகமான இந்திய கைவினைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது,” என்கிறார் ஆயுஷ்.
தேவை அடிப்படையில் நிறுவனத்திலேயே தயாரிக்கப்படுவதால் கூடுதல் இருப்பை நிர்வகிக்கும் அவசியம் இருப்பதில்லை.
“கொரோனா பெருந்தொற்று சமயத்தில் ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்யத் தொடங்கியுள்ளார்கள். எனவே அதற்கேற்ற தயாரிப்புகளுக்கான தேவை இருப்பதை உணர்ந்தோம். விரைவில் ‘வொர்க் ஃப்ரம் ஹோம் கலெக்ஷன்’ அறிமுகப்படுத்துகிறோம்,” என்கிறார் ஆயுஷ்.
Ellementary தயாரிப்புகள் இயந்திர பயன்பாடு இல்லாமல் முழுக்க கைவினைக்கலைஞர்களின் கைகளாலேயே தயாரிப்பதால் அதற்காக அவகாசம் தேவைப்படுகிறது என்கிறார் ஆயுஷ். இந்தத் தயாரிப்புகளின் ஆரம்ப விலை 290 ரூபாய்.
வருங்காலத் திட்டம்
கொரோனா பெருந்தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு Ellementary நிறுவனத்திற்கு மிகப்பெரிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. உணவகங்கள் மூடப்பட்டிருந்த நிலையில் மக்கள் வீட்டிலேயே பொழுதுபோக்காக அதிகம் சமைக்கத் தொடங்கினார்கள். இதனால் கண்களைக் கவரும் வகையில் உள்ள குக்வேர் தயாரிப்புகளுக்கான தேவை அதிகரித்துள்ளது.
“எங்கள் தயாரிப்புகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. ஏற்கெனவே இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு சேவையளிப்பதுடன் புதிய தேவைகளையும் சிறப்பாக பூர்த்தி செய்து வருகிறோம்,” என்கிறார் மகிழ்ச்சியுடன்.
வரும் நாட்களில் ஃப்ரான்சைஸ் முறையில் லக்னோ, கொச்சின், குருகிராம், பெங்களூரு போன்ற நகரங்களில் கூடுதல் ஸ்டோர்கள் திறந்து செயல்படவும் கூடுதல் தயாரிப்புகளை இணைத்துக்கொள்ளவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஆங்கில கட்டுரையாளர்: ரிஷப் மன்சூர் | தமிழில்: ஸ்ரீவித்யா
- Handicrafts
- கைவினைஞர்கள்
- ஜெய்ப்பூர்
- Succes story
- handcrafted products
- கைவினைப் பொருட்கள் விற்பனை
- Successful business
- சமையலறைப் பொருட்கள்
- மின்வணிகம்
- Ellementary
- +0
- +0