‘இயற்கைப் பொருட்களே எங்க தயாரிப்பின் ஹீரோ’ – ரூ.4.20 கோடி வருவாய் ஈட்டும் கோவை நிறுவனம்!

ரசாயனங்கள் நிறைந்த சரும பராமரிப்பு தயாரிப்புகளை வழங்கும் சந்தையில் மேகா ஆஷர், பிரிதேஷ் ஆஷர் தம்பதி முற்றிலும் இயற்கையான மூலப்பொருட்கள் கொண்டு Juicy Chemistry என்கிற பிராண்ட் தொடங்கி கொரோனா சமயத்தில் 44% வளர்ச்சி கண்டுள்ளனர்.
0 CLAPS
0

'தேவையே கண்டுபிடிப்புகளின் தாய்’ என்று கேள்விப்பட்டிருப்போம். இது நூறு சதவீதம் உண்மை. இந்த தேவைதான் எத்தனையோ தொழில்முனைவோர்களை உருவாக்கியிருக்கிறது.

மேகா ஆஷர், பிரிதேஷ் ஆஷர் தம்பதியும் அப்படித்தான். மேகா ஆஷருக்கு முகப்பரு வந்தது. என்னென்னவோ போட்டுப் பார்த்தார். டெர்மடாலஜிஸ்டை சந்தித்தார். மாத்திரை எடுத்துக்கொண்டார். எந்த ஒரு பலனும் கிடைக்கவில்லை.

கடைசியாக நல்ல கிரீம் வாங்கிப் பயன்படுத்திப் பார்க்கலாம் என்கிற முடிவிற்கு வந்தார். ஸ்டோருக்கு சென்றார். செம்பருத்தி எண்ணெய், தாவரங்கள், மூலிகைகள் என இயற்கையான பெயர்கள் போடப்பட்ட கிரீம் ஒன்றைப் பார்த்தார், வாங்கலாம் என்கிற முடிவிற்கும் வந்தார்.

தற்செயலாக மேகாவின் கணவர் பிரிதேஷ் அந்தத் தயாரிப்பிற்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் என்ன என்பதை கவனித்தார். 'ப்ரொபிலீன் க்ளைசால்’ என எழுதப்பட்டிருந்தது. இதைப் பார்த்த பிரிதேஷ் அதிர்த்து போனார்.

காரணம் பிரிதேஷ் பெட்ரோகெமிக்கல்ஸ் பின்னணி கொண்டவர். ப்ரொபிலீன் க்ளைசால் ரேடியேடர் கூலிங் ஃப்ளூயிட் தயாரிப்பிற்குப் பயன்படுத்தப்படும் மூலப்பொருள் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும்.

சருமத்திற்குப் பயன்படுத்தும் தயாரிப்பில் எதற்கான இத்தனை செயற்கைப் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன என இருவரும் யோசித்தனர். இயற்கையான பொருட்களைக் கொண்டு நம் சமையலைறையில் நாமே தயாரிக்கலாமே என்று இருவருக்கும் தோன்றியிருக்கிறது. இதுதான் Juicy Chemistry ஆரம்பப்புள்ளி.

இன்று சமூக வலைதளங்களில் எங்கு பார்த்தாலும் இயற்கை, ஆர்கானிக், ரசாயனங்களில்லாத, இப்படிப்பட்ட வார்த்தைகளே தென்படுகின்றன. சருமப் பராமரிப்பு தொடர்பான எத்தனையோ ஆலோசனைகள் ட்ரெண்டாகி வருகின்றன.

இயற்கையான தயாரிப்புகளையே பயன்படுத்தினாலும் பலனில்லை என பலர் குறைகூறுகிறார்களே? பதிலளிக்கிறார் மேகா.

பிரிதேஷ் மற்றும் மேகா ஆஷர்

“எந்த ஒரு தயாரிப்பைப் பயன்படுத்தினாலும் அது வேலை செய்ய கொஞ்சம் அவகாசம் கொடுக்கணும். பல வருஷமா இருக்கற பிரச்சனைகள் ஒரு சில நாள்லயே சரியாகணும்னு எதிர்பார்த்தா எப்படி சொல்லுங்க?” என்று மற்றொரு கேள்வியையே பதிலாக முன்வைக்கிறார் மேகா.

பிராண்ட் நம்பகத்தன்மை

Juicy Chemistry 2014-ம் ஆண்டு கோவையில் நிறுவப்பட்டது. இது முற்றிலும் இயற்கையான மூலப்பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படும் சருமப் பராமரிப்பு பிராண்ட். சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் மூலப்பொருட்களை வாங்குகின்றனர் இந்நிறுவனர். இந்த பிராண்டின் தயாரிப்பின்போது விலங்குகள் எதுவும் துன்புறுத்தப்படுவதில்லை. செயற்கை நிறம் அல்லது மணம் சேர்க்கப்படுவதில்லை. இவையெல்லாம் இந்த பிராண்டின் தனிச்சிறப்பு.

ரசாயன தயாரிப்புகள் நிறைந்த சந்தையில் முழுமையாக இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட தயாரிப்புகளை இந்த பிராண்ட் வழங்குகிறது. இப்படிப்பட்ட சந்தையில் போட்டியிட்டு நுகர்வோரைச் சென்றடைவது சவாலாகவே இருப்பதாக மேகாவும் பிரிதேஷும் கூறுகிறார்கள்.

“ஒரு பிராண்ட்லேர்ந்து அடுத்த பிராண்டுக்கு மக்கள் ஈஸியா மாறிடறாங்க. உடனடியா ரிசல்ட் கிடைக்கணும் அப்படிங்கற எதிர்பார்ப்புதான் இதுக்குக் காரணம். இயற்கையான மூலப்பொருட்களை யூஸ் பண்ணி ஒரு பிராடக்டை பண்ணும்போது அதுக்கே உரிய அவகாசம் தேவைப்படும், “ என்கிறார் பிரிதேஷ்.

இத்தனை மெனக்கெட்டு செயற்கையான பொருட்களை எதையும் சேர்க்காமல் இயற்கையான மூலப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கும் தயாரிப்புகள் நீண்ட கால அடிப்படையில் சிறந்த பலனளிக்கும். இதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்கிறனர் இந்நிறுவனர்கள்.

எனவே வாடிக்கையாளர்கள் வட்டத்தை அதிகப்படுத்துவதைக் காட்டிலும் வாடிக்கையாளர்களிடையே நம்பகத்தன்மையை ஏற்படுத்துவதில் இந்த பிராண்ட் அதிக கவனம் செலுத்தி வருகிறது.

“எங்கள் தயாரிப்பை ரொம்ப நாள் பயன்படுத்தினவங்க அதோட மகிமை புரியுது. இந்த மாதிரி வாடிக்கையாளர்கள் சருமப் பிரச்சனைக்கு முழுமையான தீர்வு கிடைக்க அவகாசம் கொடுக்கணும்னு புரிஞ்சுக்கறாங்க. திரும்ப திரும்ப வாங்கறாங்க. இவங்களுக்கெல்லாம் நான் நன்றி சொல்லிக்கறேன்,” என்கிறார் மேகா.

2019-ம் ஆண்டு Juicy Chemistry பிராண்டுக்கு 25,000 வாடிக்கையாளர்கள் இருந்தனர். பெருந்தொற்று சமயத்தில் ஆன்லைனில் பலர் வாங்கியதால் இந்த எண்ணிக்கை 80 சதவீதம் அதிகரித்து 45,000 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், 2019-ம் ஆண்டில் 2.9 கோடி ரூபாயாக இருந்த வருவாய் 2020-ம் ஆண்டில் 44.8 சதவீதம் அதிகரித்து 4.20 கோடி ரூபாய் ஆனது. இதே ஆண்டுகளில் 20 லட்ச ரூபாயாக இருந்த லாபத்தொகை 22 லட்ச ரூபாயாக உயர்ந்துள்ளது.

Juicy Chemistry பிராண்டின் வெற்றிக்கு முக்கியக் காரணம் அதன் மூலப்பொருட்கள்.

”எங்க பிராண்டோட ஹீரோ மூலப்பொருட்கள்தான். தரமான மூலப்பொருட்களைத் தேடித்தேடி வாங்கறோம்,” என்கிறார் மேகா.

இவர்களது சமையலறையில் மிகுந்த அக்கறையுடன் எளிமையாக தொடங்கப்பட்ட இந்த முயற்சி தரமான, நம்பகமான தயாரிப்பைக் கொடுத்ததால் இன்று உயர்ந்து நிற்கிறது.

தயாரிப்பு வேலைகளை கவனித்துக்கொள்ள இன்று நிபுணர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இருந்தாலும்கூட பிரிதேஷ் தினமும் ஒருமுறையாவது தொழிற்சாலைக்கு சென்று தர பரிசோதனை செய்யத் தவறுவதில்லை.

வருங்காலத் திட்டங்கள்

சருமப் பராமரிப்பு, கூந்தல் பராமரிப்பு போன்றவை மட்டுமல்லாது ஊட்டச்சத்து நிறைந்த உணவுப் பொருட்கள், சப்ளிமெண்ட், பானங்கள் போன்ற தயாரிப்புகளில் கவனம் செலுத்தவும் Juicy Chemistry திட்டமிட்டுள்ளது.

“நாம சாப்படற உணவுப்பொருட்களும் நம்மளோட வெளித்தோற்றத்துக்கு காரணமா இருக்கு. அதனால் ஊட்டச்சத்துகள் அதிகமிருக்கற உணவுப் பொருட்களையும் தயாரிக்கறது சரியா இருக்கும்னு நினைக்கறோம்,” என்கிறார் பிரிதேஷ்.

தரமான, இயற்கையான மூலப்பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படுவதால் மிகக்குறைந்த விலையில் வழங்குவது கடினம் என்று கூறுகிறார் பிரிதேஷ். இருப்பினும் தரத்தில் சமரசம் செய்துகொள்ளாமல் விலையைக் குறைக்க முயற்சி செய்து வருவதாகவும் தெரிவிக்கிறார்.

இந்திய விவசாயிகளிடமிருந்தும் ஆர்கானிக் விற்பனையாளர்களிடமிருந்தும் தரமான பொருட்களை அதிகளவில் வாங்குகிறது இந்நிறுவனம்.

“அஸ்வகந்தா, வேம்பு மாதிரியான இந்திய ஆயுர்வேத மூலிகைகளை பயன்படுத்தி குறைந்த விலையில தயாரிப்புகளை கொடுக்க இருக்கோம்,” என்கிறார்.

இந்நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்டோர் கொச்சியிலும் சென்னையிலும் செயல்பட்டு வருகின்றன. மூன்றாவது ஸ்டோரை திறக்கவும் இந்நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.

ஆங்கில கட்டுரையாளர்: அபராஜிதா சக்சேனா | தமிழில்: ஸ்ரீவித்யா

Latest

Updates from around the world