ஆஸ்கர் விருது சிலையின் மதிப்பு வெறும் ஒரு டாலரா? - ஆச்சர்யமூட்டும் ‘ஆஸ்கர்’ பின்புலத் தகவல்கள்

ஆஸ்கர் விருது வடிவமைப்பு வரலாறு முதல் விருது சிலைகளின் விலை மதிப்பு வரையில் ‘ஆஸ்கர்’ குறித்த ஆச்சரியமான தகவல்களை அறிவோம்.

ஆஸ்கர் விருது சிலையின் மதிப்பு வெறும் ஒரு டாலரா? - ஆச்சர்யமூட்டும் ‘ஆஸ்கர்’ பின்புலத் தகவல்கள்

Thursday March 16, 2023,

6 min Read

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு இசையமைப்பாளர் கீரவாணி ஆஸ்கரை வென்றுள்ளார். அதேபோல், சிறந்த ஆவணக் குறும்பட பிரிவில், தமிழ் ஆவணப் படமான 'தி எலிஃபன் விஸ்பரர்ஸ்' ஆஸ்கர் விருதைப் பெற்றிருக்கிறது. இந்த இரட்டிப்பு மகிழ்ச்சிக் கொண்டாட்டங்களும் வாழ்த்துகளும் சற்றே ஓய்ந்திருக்கும் வேளையில், திரையுலகில் முக்கியத்துவம் வாய்ந்த ‘ஆஸ்கர்’ விருது குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை நினைவுகூர்வோம் வாருங்கள்.

ஹாலிவுட் சினிமா கலைஞர்கள் பெரும்பாலானோரின் கனவு, ‘ஆஸ்கர் விருது’ வாங்குவதுதான். அந்தளவிற்கு மிகவும் மதிப்புமிக்க விருதுகளில் ஒன்றாக ஆஸ்கர் எனப்படும் அகாடமி விருது உள்ளது. 13.5 இன்ச் உயரமுள்ள (34.3 செ மீ) அந்தச் சிலையைக் கையில் ஏந்தியபடி, புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பதுதான்,ஹாலிவுட் திரைக் கலைஞர்களின் வாழ்நாள் லட்சியமாகவே உள்ளது.

வாழ்நாள் சாதனையாளர் விருது, சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படம் முதலான பிரிவுகள்தான் ஹாலிவுட்டை தவிர்த்த மற்ற திரைத் துறையினர் கவனிக்கும் அம்சங்களாக இருந்தன. சமீப ஆண்டுகளாக தனிப்பட்ட முறையிலும் ஆஸ்கர் பரிந்துரைக்கு விண்ணப்பிப்பது நடப்பதால், ஆஸ்கர் விருதின் வீச்சு இன்னும் பரவலாகியுள்ளது.

விருது பெற்றவர்கள் ஆஸ்கர் விருது சிலையைக் கையில் ஏந்தியபடி, மகிழ்ச்சியின் மிகுதியால் அதற்கு முத்தம் கொடுப்பதை நாம் பார்த்திருப்போம். திரையுலகின் மிகவும் மதிப்புமிக்க விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும், ‘அந்தச் சிலைகளின் உண்மையான விலை மதிப்பு எவ்வளவு இருக்கும்? அந்த விருதின் சிலை உண்மையில் தங்கமா?’ என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? - இதுபற்றியும் பார்ப்போம்.

யார் வடிவமைத்த சிலை இது?

ஆஸ்கர் விழாவை அகாடெமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் & சயின்ஸ் (Academy of Motion Picture Arts and Sciences ) என்ற அமைப்பு ஒருங்கிணைக்கிறது. 1927-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த அமைப்பில் அப்போது 36 பேர் உறுப்பினர்களாக இருந்தனர். தற்போது இதில், சுமார் 6000-க்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர். 1928-ம் ஆண்டில், அந்தக் குழு தனது அகாடமி விருதுகளை முதன்முறையாக வழங்கியது.

முதன்முதலில், மெட்ரோ கோல்டன் மேயர் தயாரிப்பு (MGM) நிறுவனத்தின் கலை இயக்குநர் செட்ரிக் கிபான்ஸ், வாள் ஏந்திய பெண் ஒருவர் பிலிம் சுருளின் மீது நிற்பது போல் ஒரு லினன் துணியில் இந்த விருது வடிவத்தை வரைந்தார். பின்னர், அதற்கு முப்பரிமாண வடிவத்தை அமெரிக்க சிற்பி ஜார்ஜ் மேலேண்ட் ஸ்டான்லி உருவாக்கினார். ஒரு திரைப்படத்தை உருவாக்கும் ஐந்து முக்கிய தூண்களான நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் ஆகியோரைக் குறிப்பிடும் வகையில் அந்த சிலையில், ஐந்து ஸ்போக்குகள் இருப்பதுபோல் அந்த சிலையை அவர் வடிவமைத்தார்.

ஆனால், இந்தத் தகவலை ஆஸ்கர் விருது கமிட்டி அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கவில்லை. பிரபல மெக்சிகன் நடிகரும், படத் தயாரிப்பாளருமான எமிலியோ பெர்னாண்டஸ், கடந்த 1920-களில் தான் ஹாலிவுட்டில் இருந்தபோது, தானே அந்தச் சிலையை வடிவமைத்ததாக கூறி வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

சிலையின் அமைப்பு

நிற்பது போன்ற அமைப்புடைய இந்த தங்கச் சிலையானது, 13.5 இன்ச் (34.3 செ மீ) உயரம் கொண்டது. அதன் எடை 3.856 கிலோ ஆகும். ஆரம்பத்தில் ஆஸ்கர் சிலைகள் வெண்கலத்தால் செய்யப்பட்டு தங்க முலாம் பூசப்பட்டு வழங்கப்பட்டது. இவை இல்லினாய்ஸ், படேவியாவில் உள்ள CW Shumway & Sons Foundryல் தயார் செய்யப்பட்டன. பின்னர் 1930-களில் இந்தச் சிலைகள் வெண்கலம் மற்றும் பிரிட்டிஷ் உலோகம் எனக் குறிப்பிடப்படும் தகரம், தாமிரம் மற்றும் ஆண்டிமனி ஆகியவற்றில் கலவையால் உருவாக்கப்பட்டது. அதற்கு தூய்மையான 24 கேரட் தங்க முலாம் பூசப்பட்டது.

இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற சமயத்தில் உலோகங்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவியதைத் தொடர்ந்து, மூன்று ஆண்டுகள் பிளாஸ்டர் கலவைக்கு வண்ணம் பூசி, அந்தச் சிலை விருதாக அளிக்கப்பட்டது. விருது பெற்றவர்கள் போருக்குப் பின்னர் அதற்கு தங்க முலாம் பூசிக் கொண்டது தனிக்கதை.
oscar

‘ஆஸ்கர்’ பெயர் வரக் காரணம்

அதிகாரபபூர்வமாக ‘அகாடமி அவார்டு ஆஃப் மெரிட்’ (Academy Award of Merit) என்று பெயரிடப்பட்ட போதிலும், இந்த விருது சிலை ஆரம்பம் முதலே ஆஸ்கர் விருது சிலை என்றே பிரபலமாக அழைக்கப்படுகிறது. வேறு வழியின்றி, கடந்த 1939-ம் ஆண்டு இந்தப் புனைப்பெயரையே அதிகாரபூர்வமான பெயராக அகாடமி ஏற்றுக் கொண்டது.

ஆஸ்கர் என்ற பெயர் எப்படி இந்தச் சிலையுடன் வந்து ஒட்டிக் கொண்டது என்பது பற்றி தெளிவாக விளக்கம் எதுவும் இல்லை. ஆனால், அதைச் சார்ந்து பல கதைகள் உலா வருகின்றன. அதில் மிகவும் பிரபலமானது, திரைப்பட அகாடமி நூலகர் மார்கரெட் ஹெரிக் பற்றியது. முதன்முதலில் மார்கரெட் அந்தச் சிலையைப் பார்த்தபோது, அந்தச் சிலை தனது மாமா ஆஸ்கர் போலவே இருந்ததாகக் கூறினார். அப்போதிருந்து அச்சிலை ஆஸ்கர் எனக் குறிப்பிடப்படுவதாகக் கூறப்படுகிறது.

இதேபோல், பெட்டி டேவிஸ் தனது முதல் கணவரான ஹெர்மன் ஆஸ்கர் நெல்சனின் பெயரால் இந்த விருதுக்கு ஆஸ்கர் விருது சிலைக்கு எனப் அவருக்குப் பெயரிட்டது போன்ற பிற வதந்திகள் உள்ளன, ஆனால், அது எங்கிருந்து வந்தாலும், அது விருதுடன் ஒட்டிக்கொண்டது.

1934-ம் ஆண்டில் அகாடமி விருதை வென்ற கேத்தரின் ஹெப்பர்னைப் பற்றிய ஒரு கட்டுரையில், ஆஸ்கர் என்ற பெயரை முதன்முதலில் பயன்படுத்தினார் பத்திரிகையாளர் சிட்னி ஸ்கோல்ஸ்கி. அதே ஆண்டு 1934 விருது வழங்கும் விழாவில், வால்ட் டிஸ்னி முதலில் "ஆஸ்கர்" என்ற வார்த்தையைப் பகிரங்கமாக உச்சரித்தார் என்றும் வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

oscar

எங்கே, எப்படி தயாரிக்கப்படுகிறது?

கடந்த 1982-ம் ஆண்டு வரை இலினாய்ஸ் மாகாணத்தில் உள்ள பட்டாவியாவில் செயல்பட்டு வரும் சி டபிள்யூ சம்வே அண்ட் சன்ஸ் பவுண்டரி (CW Shumway & Sons Foundry ) எனும் நிறுவனம் தான் இந்த ஆஸ்கர் விருது சிலையை தயாரித்து வந்தது. அதன்பிறகு, சிகாகோவைச் சேர்ந்த ஆர் எஸ் ஓவன்ஸ் அண்ட் கம்பெனி (RS Owens & Company) ஆஸ்கர் விருது சிலைகளை தயாரிக்கும் பணியைக் கையில் எடுத்தது.

அதன் தொடர்ச்சியாக, 2016 முதல் ஆஸ்கர் விருது சிலையைத் தயாரிக்கும் பணி, நியூயார்க்கில் உள்ள போலிச் டலிக்ஸ் பைன் ஆர்ட் பவுண்டரி எனும் நிறுவனத்தின் வசம் சென்றது. முப்பரிமாண அச்சக இயந்திரத்தின் மூலம் தயாரிக்கப்படும் இச்சிலை உருவாக, சுமார் மூன்று மாதங்கள் ஆகிறது.

முதலில் மெழுகால் உருவாக்கப்படும் இச்சிலையை நன்கு குளிர்வித்து, பின்னர் அதன்மீது பீங்கான் ஓடுகள் ஒட்டப்படுகின்றன. பல வாரங்கள் காயவைக்கப்படும் அவை, 1,600 ஃபாரன்ஹீட் வெப்பத்தில் சுட்டெடுக்கப்படுகிறது. பின்னர் அதன் மீது பித்தளை உலோகக் கலவை பூசப்பட்டு, நன்கு பாலீஷ் செய்யப்பட்டு மெருகேற்றப்படுகிறது.

ப்ரூக்ளின் கொண்டு செல்லப்படும் இந்தச் சிலைகளின் மீது, எப்னர் தொழில்நுட்பத்தின் மூலம் 24 கேரட் சுத்தத் தங்க முலாம் பூசப்படுகிறது. மொத்தமாக 24 பிரிவுகளின் கீழ், ஒவ்வொரு வருடமும் விருதுகள் வழங்கப்பட்டு வருவது வழக்கமாக இருந்தாலும், ஒவ்வொரு வருடமும் சுமார் 50 சிலைகள் தயாரிக்கப்படுகின்றன. ஏனென்றால், கடைசி நேரத்தில் அதிகப்படியான வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில், விருது பற்றாக்குறை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

விலை மதிப்பு எவ்வளவு?

ஒவ்வொரு சிலை தயாரிப்பதற்கு அமெரிக்க டாலரில் 400 டாலர் செலவாகிறது. இந்தச் சிலையை சந்தையில் வேறு யாரும் விற்கவோ, தயாரிக்கவோ கூடாது என்பது ஆஸ்கர் அகாடமியின் அதிகாரபூர்வ உத்தரவு ஆகும்.

ஒருவேளை விருதைப் பெற்றவர்கள், தங்களது விருதை விற்க விரும்பினால், முதலில் ஆஸ்கர் அகாடமியிடம்தான் அவர்கள் விற்க முடியும். அதன் விலை வெறும் ஒரு டாலர் மட்டுமே எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது மற்றொரு ஆச்சரிய தகவல்.

முதல் ஆஸ்கர் விருது விழா 1929-ம் ஆண்டு நடைபெற்றது. இந்த நிகழ்வில் ‘ரின் டின் டின்: தி லைப் அன்ட் தி லெஜண்ட்’ படத்தில் நடித்த ஜெர்மன் ஷெப்பர்டு வகையைச் சேர்ந்த ரின் டின் டின் எனும் நாய் தான், சிறந்த நடிகருக்கான அதிகப்படியான வாக்குகளைப் பெற்றது. இந்த நாயானது 20-30-களில் ஹாலிவுட்டில் பிரபல நட்சத்திரமாக விளங்கி வந்தது. இந்த நாயானது, முதல் உலகப் போரின் போது, போர்க்களத்தில் இருந்து அமெரிக்க ராணுவ வீரர் ஒருவர் மீட்டுக் கொண்டு வந்தார்.

இந்த நாய்க்குத்தான் அதிகப்படியான வாக்குகள் பெற்றதால், முறைப்படி அதற்குத்தான் முதல் சிறந்த நாயகனுக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், முதல் சிறந்த நடிகருக்கான விருதையே ஒரு நாய்க்கு வழங்குவதா என விவாதங்கள் ஏற்பட்டதால், மனிதர்களுக்கு மட்டுமே இந்த விருதை வழங்க வேண்டும் முடிவு செய்யப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக மீண்டும் வாக்கெடுப்புகள் நடத்தப்பட்டு, பிரபல ஜெர்மானிய நடிகர் எமில் ஜென்னிங்ஸ் என்பவருக்கு வழங்கப்பட்டது. ஆனால். இந்த விருதைப் பெற்ற எமில், 1930-களுக்குப் பிறகு ஹிட்லரின் நாஜிக்களுக்கு ஆதரவான பிரச்சாரப் படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்கர் வரலாற்றில் இதுவரை அதிகப்படியாக 26 விருதுகளை வென்றது வால்ட் டிஸ்னிதான். அதேபோல், பெண்களில் அதிக முறை ஆஸ்கர் விருது பெற்றவர் என்ற பெருமைக்குரியவர், அமெரிக்க ஆடை வடிவமைப்பாளர் எடித் ஹெட் ஆகும். இவர் இதுவரை எட்டு முறை சிறந்த ஆடை வடிவமைப்புக்காக ஆஸ்கர் விருதை வென்றுள்ளார்.

சிறப்பு பரிசுத் தொகுப்பு

ஆஸ்கர் விருது பெறுவோருக்கு மட்டுமின்றி முக்கியப் பிரிவுகளில் பரிந்துரை பட்டியலில் இடம்பெற்ற அனைவருக்குமே, கடந்த 2002-ம் ஆண்டு முதல் தனியார் மார்க்கெட்டிங் நிறுவனம் ஒன்று, ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு பரிசுத் தொகுப்பு ஒன்றை வழங்கி கௌரவித்து வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு வழங்கப்பட்ட பரிசுத் தொகுப்பில், இந்திய மதிப்பில் ரூ 1 கோடி மதிப்பிலான பரிசு பொருட்கள் இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

gift bag

சிறந்த இயக்குநர், சிறந்த நடிகை, நடிகர், துணை நடிகை, நடிகர் உள்ளிட்ட பிரிவுகளில் பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ளோருக்கும் இந்தப் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தொகுப்பில் சுமார் 60 பொருட்கள் இடம்பெற்றுள்ளது. அவற்றில் கனடாவில் 4 ஆயிரம் டாலர் மதிப்பில் லைஃப்ஸ்டைல் எஸ்டேட்டில் வசிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதோடு, இத்தாலியில் உள்ள லைட் ஹவுஸில் 8 பேர் வரை விடுமுறை பார்ட்டிக்கான வாய்ப்பு, ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்தில் 79.59 டாலருக்கு ஒரு சதுரமீட்டர் நிலமும் வழங்கப்படுகிறது.

இதில் குயின்ஸ்லாந்தில் வழங்கப்படும் இடத்தில், ஆஸ்கர் நாயகர்கள் மரங்களை மட்டுமே நடமுடியும். இதன்மூலம் எதிர்காலத்தில் மரங்களின் எண்ணிக்கை அதிகரித்து, குயின்ஸ்லாந்து செழிப்பாகவும் பசுமையாகவும் இருக்கும் என்பதால் அந்த நிறுவனம் இப்படி ஒரு ஏற்பாட்டைச் செய்துள்ளது.

இது தவிர, ஆஸ்கர் பிரபலங்கள் தங்கள் வீடுகளை மறுசீரமைக்க 25 ஆயிரம் டாலர் மதிப்பிலான கூப்பன், இலவச ஃபேஷியல் சிகிச்சை, பீட்டாவின் தலையணைகள், பட்டுத்துணி விரிப்பு, வெள்ளை சாக்லேட்டால் செய்யப்பட்ட பிஸ்கெட்டுகள், ஜப்பானின் ஜின்சா நிஷிகவா ஃபிரெட், மசாஜ் எண்ணெய், ஒயின், பல்வேறு பிராண்டுகளில் அழகு சாதன பொருட்கள் ஆகியவை இந்த பரிசுத் தொகுப்பில் அடக்கம்.

கடந்த 2016-ஆம் ஆண்டு பரிசுத் தொகுப்பில் இஸ்ரேலுக்கு சுற்றுலா செல்வதற்கான கூப்பன் வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுபோல் 24 காரட் தங்க முலாம் பூசப்பட்ட சோப்பு கட்டிகள், இ-சிகரெட் ஆகியவை கடந்த 2020-ஆம் ஆண்டு விலைமதிப்புள்ள பரிசுகளாக சொல்லப்படுகின்றன. இவையனைத்தும் ஆஸ்கர் குழுவின் அதிகாரபூர்வ பரிசு பொருட்கள் இல்லை. எனவே, இவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் விருதைப் பெறுபவர்களுக்கு இல்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Daily Capsule
Freshworks' back-to-office call
Read the full story