பாதுகாவலருக்கு ரூ.25 லட்சம்; தன் வாழ்க்கையை மாற்றி அமைத்தவர்களை நெகிழவைத்த பாரா வீரர்!

பாராட்டு விழாவில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்!
26 CLAPS
0

அமித் குமார் சரோஹா- இந்திய பாரா விளையாட்டு வீரர்களில் குறிப்பிடத்தக்கவர். மூன்று முறை பாராலிம்பியன் மற்றும் பல முறை உலக பாரா-தடகள சாம்பியன்ஷிப் மற்றும் பாரா ஆசிய விளையாட்டுப் பதக்கம் வென்ற பெருமைக்குரியவர்.

2007 ஆம் ஆண்டில் நடந்த ஒரு விபத்தைத் தொடர்ந்து வீல்சேர் மட்டுமே அவரது வாழ்க்கையாகிப் போனது. என்றாலும், தன்னம்பிக்கையுடன் போராடி டிஸ்கஸ் த்ரோ மற்றும் கிளப் த்ரோ விளையாட்டு வீரராக தனது வாழ்க்கைப் பாதையை மாற்றியமைத்தார்.

ஹரியானவைப் பூர்வீகமாகக் கொண்ட அமித், தனது 22 வயதில் எதிர்பாராத விபத்தில் சிக்க, முதுகு தண்டுவடத்தில் அடிபட்டு நடக்க முடியாமல் போனது. இந்த விபத்து ஏற்படும் முன், அமித், ஹரியானா மாநில அணியில் முக்கிய ஹாக்கி வீரர். விபத்து அவரை சிதைத்துவிட்டது.

இந்தத் தருணத்தில் பாரா விளையாட்டுகளை ஊக்குவிப்பதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்திருந்த அமெரிக்க சக்கர நாற்காலி ரக்பி வீரரான ஜொனாதன் சிக்வொர்த் உடனான அமித்தின் சந்திப்பு அவரின் வாழ்க்கையை மாற்றியது. அதன்பின்னே அமித்தும் வெற்றிகரமான பாரா விளையாட்டு வீரராக உருவெடுத்தார்.

இதனிடையே, நாட்டின் மிகச்சிறந்த பாரா விளையாட்டு வீரர்களில் ஒருவராக அமித் குமார் சரோஹா உயர்ந்ததில் முக்கியப் பங்கு வகித்த மற்றவர்களை கௌரவப்படுத்தும் வகையில் சோனிபட்டில் உள்ள ஒரு ஹோட்டலில் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

பாரா விளையாட்டில் அமித் இந்த இடத்தை அடைவதற்கு முக்கியக் காரணியாக இருந்தவர்கள் தலைமை பயிற்சியாளர் வஜீர் (SAI), லலிதா சர்மா (பிராந்திய இயக்குனர், SAI Sonepat), குர்ஷரன் சிங் (இந்திய பொது செயலாளர் பாரா ஒலிம்பிக் கமிட்டி), பிசியோ அங்குர், பாராலிம்பியன்கள் தரம்பீர் நைன் மற்றும் ரிங்கு ஹூடா ஆகியோர்.

இவர்களைவிட முக்கியமானவர்கள் இருவர். அவர்கள் பெயர் தேவேந்தர் சரோஹா மற்றும் தேவேந்தர். இவர்கள் இருவர் தான் அமித் விபத்தில் சிக்கியதில் இருந்து அவர் உடன் பயணித்து வருகின்றனர்.

மேலும், பாரா விளையாட்டு வீரராக மாற முடிவெடுத்த போது இவர்கள் இருவரும் அதற்கு உறுதுணையாக இருந்து பயிற்சி அளித்துள்ளனர். அதிகாரப்பூர்வ பயிற்சியாளர் இல்லை என்றாலும் அமித்திற்காக பயிற்சியாளருக்கான லெவல் 2 படிப்பை முடித்த தேவேந்தர், அதன்மூலம் அவருக்கு நுணுக்கங்களை கற்றுக்கொடுத்துள்ளார். மற்றொருவர் அமித்துக்கு பாதுகாவலராக அவர் உடன் எப்போதும் இருந்துள்ளார்.

தனக்கு ஒரு நிழலாக இருந்த இந்த இருவரையும் பாரா விளையாட்டு வீரர் அமித் இப்போது கௌரப்படுத்தி இருக்கிறார். இதுவரை அவருக்குக் கிடைத்த ரொக்க பரிசில் இந்த இருவருக்கும் தலா 25 லட்ச ரூபாயை அந்த விழாவில் அளித்து நெகிழ்வைத்தார். 

“அவர்கள் விளையாட்டு வீரர்கள் அல்ல, ஆனால் நான் ஒரு பாரா தடகள வீரராக விளையாடத் தொடங்கிய அன்றிலிருந்து அவர்கள்தான் என் நிழல். அதனால் அவர்களுக்கு இந்த கௌரவத்தை அளிப்பதில் பெருமை கொள்கிறேன்," என்று கூறியுள்ளனர். அமித்தின் இந்த செயல் பாராட்டுகளை குவித்து வருகிறது. 

தொகுப்பு: மலையரசு