டோக்கியோ பாராலிம்பிக்: இந்தியாவின் முதல் பதக்கத்தை உறுதி செய்த யார் இந்த பவினா படேல்?

அன்று நிராகரிக்கப்பட்டவர் இன்று தடம் பதித்து சாதனை!
1 CLAP
0

டோக்கியோவில் நடந்து வரும் பாராலிம்பிக்கில் இந்தியாவின் முதல் பதக்கத்தை உறுதி செய்திருக்கிறார் டேபிள் டென்னிஸ் வீராங்கனை பவினா படேல்.

நேற்று நடந்த டேபில் டென்னிஸ் போட்டியில் 3-2 என்ற செட் கணக்கில் சீனாவின் மியாவோ ஜாங்கை வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி ஆனதன் மூலம் முதல் பதக்கக் கனவை உறுதி செய்திருக்கிறார். சீன வீராங்கனைக்கு எதிராக முதல் செட்டை இழந்தாலும், அடுத்தடுத்த செட்களில் போராடி அவருக்கு நெருக்கடி கொடுத்தார்.

பாராலிம்பிக்ஸ் இறுதிப்போட்டியில் நுழைந்த முதல் பாரா-டேபிள் டென்னிஸ் வீராங்கனை என்ற பெருமையை வரலாற்றில் பதிவு செய்துள்ள பவினா படேலுக்கு இந்த பயணம் அவ்வளவு எளிதாக அமைந்துவிடவில்லை.

பவினா படேல் பிறக்கும்போதே குறைபாடு உடன் பிறக்கவில்லை. பிறந்து 12 மாதக் குழந்தையாக இருந்தபோது போலியோமைலிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டார். இதனை அவரின் குடும்பத்தினர் தாமதாகவே கண்டுபிடித்தனர்.

பின்னர், பெரிய பெண்ணாக வளர, கிராமத்திலேயே ஒரு சாதாரண பள்ளியில் தனது படிப்பை மேற்கொண்டு வந்தார் பவினா. பெற்றோர்கள் அவர் கல்வி கற்க உதவினார்கள். நான்காம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் போது பவினாவை ஆந்திராவின் விசாகப்பட்டினத்திற்கு அறுவை சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

அறுவை சிகிச்சை செய்யப்பட்டாலும், பவினா படேல் அலட்சியமாக இருந்தார் மற்றும் சரியான மறுவாழ்வு உடற்பயிற்சிகளை செய்யவில்லை. இதனால் பழைய நிலையையே அவர் தொடர வேண்டி இருந்தது. 12ம், வகுப்பு வரை தனது சொந்த கிராமத்தில் பயின்ற பவினா ஒரு ஆசிரியராக விரும்பினார். ஆனால் உடல் ஊனம் காரணமாக அதற்கான ஒரு நேர்காணலில் நிராகரிக்கப்பட்டாள்.

இந்த தருணத்தில் பவினா பட்டேலின் தந்தை ஹஸ்முக்பாய் படேல், பார்வையற்ற மக்கள் சங்கத்தின் (பிபிஏ) விளம்பரத்தை 2004இல் பார்த்தபோது, ​​குஜராத், அகமதாபாத்தில் உள்ள சிறப்புத் திறனாளிகளுக்கான விருது பெற்ற நிறுவனத்தில் ஐடிஐ படிப்புக்காக அவரை சேர்த்துவிட்டார்.

அங்கு தேஜல்பன் லக்கியா என்பவரின் மேற்பார்வையில் படிப்பை தொடர்ந்தவர், பின்னர், தொலைதூர கல்வி மூலம் குஜராத் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பைத் தொடர்ந்தார். இந்த நேரத்தில், தனது உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக விளையாட்டுகளின் மீது ஆர்வம் காட்டி வந்ததை கண்ட லக்கியா, பவினாவை லலன் தோஷியுடன் என்பவருடன் இணைத்துவிட்ட்டார்.லக்கியா மற்றும் தோஷி தான் உடற்தகுதிக்கான உடல் செயல்பாடுகளில் பவினா ஆர்வம் காட்ட தூண்டியிருக்கின்றனர்.

இதுவே பின்னாளில் விளையாட்டில் தீவிரமாக ஈடுபட வழிவகை செய்தது. அவர் தொழில் ரீதியாக டேபிள் டென்னிஸ் விளையாடத் தொடங்கி, பின்னர் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினார்.

பெங்களூருவில் நடந்த முதல் பாரா-டேபிள் டென்னிஸ் தங்கப் பதக்கத்தை வென்றார். தேசிய அளவில் பெயர் பெற்ற பிறகு, சர்வதேச அளவில் தனது பெயரை உருவாக்கத் தொடங்கினார். பவினா படேலின் முதல் வெளிநாட்டு போட்டி ஜோர்டானில் நடந்தது, அங்கு அவர் பதக்கம் எதுவும் வெல்லவில்லை. ஆனால் அது அவரை ஏமாற்றவில்லை. மாறாக, கடினமாக உழைத்து அனுபவத்தைப் பெற போராடினார்.

2011 ஆம் ஆண்டில், தாய்லாந்து ஓபனில் தனது முதல் சர்வதேச பதக்கத்தை (வெள்ளி) வென்றார். பின்னர் 2013ல் ஆசிய பிராந்திய சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்றதன் மூலம் புதிய வரலாறு படைத்தார்.

அதன்பிறகு 2019ல் பாங்காக்கில் தனது முதல் தங்கத்தை வென்றார். தேசிய அளவிலான கிரிக்கெட் வீரர் நிகுல் பட்டேலை 2017-ல் திருமணம் முடித்தவர் தற்போது ஒலிம்பிக்கில் இந்தியாவின் பதக்கக் கனவை நிறைவேற்றுள்ளார்.

Latest

Updates from around the world