'எதுவும் மாறப் போவதில்லை; கையாளப் பழகிக் கொண்டேன்’ – விபத்தில் உடல் செயலிழந்த பாரா தடகள வீரர்!
false
true
சச்சின் சமாரியா டெல்லியைச் சேர்ந்தவர். 2008-ம் ஆண்டு விடுமுறையைக் கொண்டாட கொல்கத்தா சென்றிருந்தார். அப்போது அவருக்கு 17 வயதிருக்கும். பயங்கர சாலை விபத்து ஒன்றில் சிக்கிக்கொண்டார். கை, கால்கள் செயலிழந்து போயின. கழுத்துக்குக் கீழே உடல் முடங்கிப்போனது.
விபத்துக்குப் பிறகு இயல்பு வாழ்க்கை பாதித்தது. எங்கும் நகர்ந்து செல்ல முடியாது. நடக்க முடியாது. சாதாரண வேலைகளைக்கூட செய்துகொள்ள முடியாது. பரந்து விரிந்த அவரது உலகம் ஒரே இடத்தில் சுருங்கிவிட்டது.
ஆனால், இந்த விபத்து அவரது கனவுகளையும் லட்சியத்தையும் அடைய எந்த வகையிலும் தடையாக இருக்கவில்லை.
”யதார்த்தத்தை நாம் ஏற்றுக்கொள்ள பழகவேண்டும். திடீரென்று ஒரு பிரச்சனை முளைக்கிறது. நாம் அதை ஏற்றுக்கொண்டால் மட்டுமே அதற்கான தீர்வுகாண முடியும். அதைத்தான் நானும் செய்தேன். எனக்கு நடந்ததை ஏற்றுக்கொண்டேன். எதுவும் மாறப்போவதில்லை என்பதை புரிந்துகொண்டேன். அதன் பிறகுதான் அதை எப்படிக் கையாள்வது என்கிற தெளிவு கிடைத்தது,” என்கிறார் சச்சின்.
சில ஆண்டுகளுக்குப் பிறகு மூட்டுகளுக்கு பயிற்சியளிக்க உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்தார்.
14 ஆண்டுகளாக சக்கர நாற்காலியில் முடங்கியிருக்கிறார். ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்லவும் அன்றாட வேலைகளை செய்துகொள்ளவும் இன்னொருவரை நம்பியிருக்கவேண்டிய நிலை.
இப்படிப்பட்ட சூழலிலும் 31 வயது சச்சின் மாற்றுத்திறனாளிகளின் விளையாட்டுப் போட்டியான போசியாவில் (Boccia) இந்தியா சார்பாக பங்கேற்றிருக்கிறார். பங்குச் சந்தை தொடர்பாக செயல்படும் Growwealth Capital என்கிற நிறுவனத்தையும் சொந்தமாக நடத்தி வருகிறார்.
விளையாட்டு மீது ஆர்வம்
சச்சினுக்கு சிறு வயது முதலே விளையாட்டுகளில் ஆர்வம் அதிகம். விபத்து நடப்பதற்கு முன்பு டேக்வாண்டோ தற்காப்புக் கலையில் பயிற்சி பெற்று வந்தார். கிரிக்கெட், கால்பந்து போன்ற விளையாட்டுகளிலும் ஆர்வமிருந்தன. டேக்வாண்டோ போட்டியில் சர்வதேச அளவில் நடைபெற்ற போட்டிகளில் இந்தியா சார்பாக போட்டியிட்டு தேசிய அளவில் சாம்பியன் பட்டம் பெற்றிருக்கிறார்.
விபத்தினால் அவரது விளையாட்டு மாறியதே தவிர கனவு மாறவில்லை. கிரிக்கெட், கால்பந்து என ஆர்வம் காட்டியவர் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுகளின் பக்கம் கவனத்தை திசை திருப்பினார்.
2015, 2016ஆம் ஆண்டுகளில் கிளப் த்ரோ, வட்டு எறிதல் (discus throw) போன்ற விளையாட்டுகளை விளையாடினார்.
”கிட்டத்தட்ட ஒன்றரை அண்டுகள் கடந்தது. இந்த நிலை நீடித்தால் பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்கேற்க முடியாமல் போய்விடும் என்பதை உணர்ந்தேன்,” என்று அந்த நாட்களை நினைவுகூர்ந்தார்.
2021ம் ஆண்டு சச்சினின் பிசியோதெரபிஸ்டுகளில் ஒருவர் அவருக்கு போசியா விளையாட்டை அறிமுகம் செய்து வைத்தார்.
“போசியா விளையாட்டு பற்றி தெரிந்துகொண்டதும் அதுவே என் வாழ்க்கையின் நோக்கமாக மாறிப்போனது,” என்கிறார்.
அம்மா, அப்பா, சகோதரர், சகோதரரின் மனைவி என ஒட்டுமொத்த குடும்பத்தினரும் சச்சினுக்கு ஊக்கமளித்து ஆதரவளித்து வருகின்றனர். அவரது அடுத்தடுத்தகட்ட சாதனைகளுக்கு இவர்களது ஆதரவே முக்கியக் காரணமாக இருந்துள்ளது.
போசியா விளையாட்டு
1984ம் ஆண்டு போசியா பாராலிம்பிக் விளையாட்டு ஆனது. அப்போதிருந்து 80க்கும் மேற்பட்ட நாடுகளில் இது விளையாடப்பட்டு வருகின்றன. இந்தியாவில் சுமார் ஆறாண்டுகளுக்கு முன்பு அறிமுகமானது.
இந்தியாவில் 95 சதவீத மக்களுக்கு இந்த விளையாட்டு பற்றிய விவரங்கள் தெரிவதில்லை. இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த விரும்பிய சச்சின் 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூரை சந்தித்தார்.
“போசியா பற்றிய விழிப்புணர்வை எப்படி ஏற்படுத்துவது என்பது பற்றி கலந்து பேசினோம். அதற்கு போதிய கட்டமைப்பு வசதி இல்லாததைப் பற்றியும் பேசினோம். அனைத்து பிரிவுகளிலும் 12 தங்க பதக்கங்கள் வழங்கப்படுகின்றன. இந்தியா பங்கேற்காமல் போனால் 45 பதக்கங்களை இழக்க நேரிடும்,” என்று குறிப்பிட்டார்.
2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் போசியா பயிற்சியைத் தொடங்கினார் சச்சின். விளையாட்டு வீரர்களைப் பொருத்து இந்த விளையாட்டில் நான்கு பிரிவுகள் இருக்கின்றன. சச்சினுக்கு பிடித்துக்கொள்ளும் திறன் இல்லை என்பதால் அவர் BC3 பிரிவின்கீழ் வருவார். இதனால் அவருக்கு ஒரு ரேம்ப் மற்றும் ரேம்ப் ஆப்பரேட் இருக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
சச்சின் கடந்த இரண்டாண்டுகளாக போசியா போட்டிகளில் பங்கேற்று வருகிறார். ஐந்தாவது மற்றும் ஆறாவது போசியா தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றிருக்கிறார். BC3 கலப்பு போட்டிகளில் வெள்ளி பதக்கம் வென்றிருக்கிறார்.
கடந்த ஆண்டு சர்வதேச அளவில் நடைபெற்ற Fazza Dubai 2021 World Boccia Asia-Oceania Regional Championship போட்டியில் சச்சின் முதல் முறையாக இந்தியா சார்பாக பங்கேற்றிருக்கிறார்.
“நான் தொடர்ந்து விளையாடுவேன். தொடர்ந்து என்னை மேம்படுத்திக் கொண்டே இருப்பேன். பாராலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியா சார்பில் விளையாடி தங்கப் பதக்கம் வெல்லவேண்டும் என்பதே என்னுடைய லட்சியம்,” என்கிறார்.
ஆங்கில கட்டுரையாளர்: அபூர்வா பி | தமிழில்: ஸ்ரீவித்யா