'மகளுக்காக 4 ஆண்டுகள் டிவி பார்க்காத பெற்றோர்' - ஐஏஎஸ் தேர்வில் 2ம் பிடித்த ஜக்ராதி அவஸ்தி!

சிறுவயது கனவை நிறைவேற்றிய லட்சிய பெண்!
400 CLAPS
0

2020ம் ஆண்டு யுபிஎஸ்சி நடத்திய சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 761 பேர் தேர்வு பெற்றுள்ளனர். பீகாரைச் சேர்ந்த சுபம் குமார் என்பவர் தேசிய அளவில் முதலிடம் பிடிக்க, மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஜக்ராதி அவஸ்தி என்ற மாணவி இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.

"ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்பது எனது சிறுவயது கனவு, ஆனால் கடின உழைப்பு மற்றும் புத்திசாலித்தனமான உழைப்பால் நான் அதை சாத்தியப்படுத்தி இருக்கிறேன்," என்றுள்ளார் ஜக்ராதி அவஸ்தி.

யார் இந்த ஜக்ராதி அவஸ்தி?

மத்திய பிரதேச தலைநகர் போபாலில் வசித்து வருகிறார் 24 வயதாகும் இந்த ஜக்ரதி அவஸ்தி. இவர் போபாலின் மவுலானா ஆசாத் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (MANIT)-ல் எலெக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் முடித்திருக்கிறார். தனது இன்ஜினியரிங் படிப்புக்கு பின் GATE தேர்வில் தேர்ச்சி பெற்று பெல் நிறுவனத்தில் அதிகாரியாக இணைந்தார்.

சிறுவயது முதலே ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்ற கனவுடன் இருந்த அவஸ்தி, தனது குழந்தை பருவ கனவை நிறைவேற்ற முடிவு செய்தவர் அதற்காக பெல் நிறுவன பணியை ராஜினாமா செய்துவிட்டு படிக்கத் தொடங்கினார். டெல்லியில் ஒரு பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து தனது படிப்பை மேற்கொண்டு வந்தார்.

இடையில் கொரோனா தொற்றுநோய் பரவ டெல்லியை விட்டு இடம்பெற நேர்ந்தது. டெல்லியில் இருந்து மீண்டும் போபாலுக்கு வந்தவர், ஆன்லைன் மூலமாக படித்து வந்தார். அவஸ்தியின் தந்தை ஒரு ஹோமியோபதி மருத்துவர், அதேபோல் அவரின் சகோதரரும் சுயாஷம் ஒரு மருத்துவர். இவர்கள் இருவரும் தான் அவஸ்தி லாக்டவுன் காலகட்டத்தில் படிக்க உதவி புரிந்துள்ளனர். மேலும், அவரின் தாயும் அவஸ்திக்கு படிப்பிறகு உதவுவதற்காக தான் பணிபுரிந்த வேலையை விட்டு நின்றுள்ளார்.

”நான் படிக்கத் தொடங்கிய காலத்தில் தினமும் 8-10 மணி நேரம் படித்தேன். 2019 ஆம் ஆண்டில், நான் முதன்முறையாக ஐஏஎஸ் தேர்வு எழுதினேன். அப்போது என்னால் முதன்மைத் தேர்வைக்கூட கடக்க முடியவில்லை. தோற்றபோது, ஐஏஎஸ் ஆக கடின உழைப்புடன் புத்திசாலித்தனம் தேவை என்பதை உணர்ந்துகொண்டேன். நான் நிறைய படித்தேன். இதனால் இரண்டாவது முயற்சியில் தேர்வுபெற முடிந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்,” என்கிறார்.
கடந்த நான்கு வருடங்களாக என் பெற்றோர் டிவி பார்க்கவில்லை, முதலில் என் பெற்றோர் என் சகோதரர் நீட் தேர்ச்சி பெற வேண்டும் என்று விரும்பி டிவி பார்க்கவில்லை. பின்னர் எனது படிப்புக்காக அதனைத் தொடர்ந்தனர். என் அம்மா பள்ளி ஆசிரியராக இருந்தார், ஆனால் படிப்பில் எங்களுக்கு உதவியதற்காக அவர் தனது வேலையை விட்டுவிட்டார்.

எனது முதல் முயற்சியில் நான் தேர்வு செய்யப்படாதபோது, ​​நான் கொஞ்சம் மன உளைச்சலுக்கு ஆளானேன் ஆனால் என் அம்மா தான் கடினமாக உழைக்க வேண்டும் என்பதை உணர வைத்தார். அவர் சொன்னதுபோல் கடின உழைப்பை மேற்கொண்ட எனக்கு இறுதியாக வெற்றி கிடைத்தது. இப்போது ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக கிராமப்புற வளர்ச்சிக்கு வேலை செய்ய விரும்புகிறேன். கிராமப்புற மேம்பாடு அவசியம்," என்றுள்ளார்.

தொகுப்பு: மலையரசு