தன் கிராமப் பெண்கள் நிதிச் சுதந்திரம் பெற உதவிடும் மொகமத் பீர் பானு!

350-க்கும் அதிகமான பெண்கள் வருவாய் ஈட்டி நிதிச்சுதந்திரம் பெற திறன் பயிற்சி அளித்துள்ளார் மொகமத் பீர் பானு.
3 CLAPS
0

மொகமத் பீர் பானுவின் குடும்பத்தினர் தையல் வேலையில் ஈடுபட்டிருந்தார்கள். மொகமத் பீர் பள்ளியில் படித்த நாட்களிலேயே அவரது சகோதரர் அவருக்கு தையல் வேலையில் அடிப்படைகளைக் கற்றுக்கொடுத்தார்.

இவருக்குத் திருமணம் முடிந்தது. புகுந்த வீட்டினரின் வசித்த ஏர்வாடி கிராமத்திற்குச் சென்றபோது தையல் இயந்திரத்தைக் கொண்டு சென்றார். மூன்று குழந்தைகள் பிறந்தன. குழந்தைகளின் படிப்பு செலவு அதிகரிக்கவே வருவாய் ஈட்டுவதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்தார்.

ஸ்ரீனிவாசன் சர்வீஸ் ட்ரஸ்ட் (SST) நடத்தும் கூடைத் தயாரிப்பு பயிற்சி குறித்து இவருக்குத் தெரிய வந்தது. இதன் மூலம் வருவாய் ஈட்டலாம் என நினைத்தார்.

“SST அதிகாரிகள் கூடை தயாரிப்பு உள்ளிட்ட புதிய திறன்களைக் கற்றுக் கொடுத்தார்கள். இதைக் கொண்டு எப்படி வணிகத்தைச் செய்யலாம் என்றும் வருவாயை அதிகரிக்கலாம் என்றும் விவரித்தனர்,” என்கிறார் மொகமத் பீர் பானு. இன்று இவர் பிஸ்மி சுய உதவிக் குழுவின் தலைவர்.

இந்த மகளர் சுய உதவிக் குழுவில் இன்று 15 பேர் பணியாற்றுகிறார்கள். இவர்கள் ஆடைகள், வாழை நார் கொண்டு தயாரிக்கப்படும் கூடைகள் ஆகியவற்றைத் தயாரித்து விற்பனை செய்கிறார்கள்.

”பயிற்சியில் விரிவாகக் கற்றுக்கொடுத்தார்கள். இழைகள் 40 செ.மீ நீளமும் 5 செ.மீ அகலமும் இருக்கவேண்டும். வாழை பட்டையை அரை மணி நேரம் ஊறவைத்து உலர வைக்கவேண்டும். அதன் பிறகே தேவையான வடிவங்களில் வளைத்து வார்னிஷ் செய்யமுடியும்,” என்கிறார்.

சுய உதவிக் குழுவில் உள்ள பெண்கள் லோன் பெற்று தையல் இயந்திரம் வாங்கியுள்ளனர். பள்ளிச் சீருடை, நைட்வேர், பிளவுஸ் போன்றவற்றை தைக்க பீர் பானு கற்றுக்கொடுத்தார்.

“350-க்கும் மேற்பட்ட பெண்கள் சொந்தமாக தொழில் தொடங்கி நிதிச் சுதந்தரம் பெற உதவியுள்ளேன். ஏழைப் பெண்களுக்கும்  கணவனை இழந்த பெண்களுக்கும் இலவசமாகவே பயிற்சியளிக்கிறேன்,” என்று தெரிவிக்கிறார்.

சமூக நலன்

மொகமத் பீர் பானு மாதம் 6,000 ரூபாய் சம்பாதிக்கிறார். இதில் தனது தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதுடன் சுய உதவிக் குழுவின் மற்ற பெண்களுடன் சேர்ந்து வழிபாட்டுத் தலங்கள், அங்கன்வாடி போன்ற பகுதிகளையும் தூய்மைப்படுத்துகிறார்.

“உள்ளூர் அங்கன்வாடி சென்று பார்த்தபோது பல குழந்தைகள் நாற்காலி இல்லாததால் தரையில் உட்காந்திருப்பதைக் கவனித்தோம்,” என்றார்.

சுய உதவிக் குழு பெண்கள் பணம் திரட்டி அங்கன்வாடி குழந்தைகளுக்காக நாற்காலி, ஃபேன் ஆகியவற்றை வாங்கிக்கொடுத்துள்ளனர். அங்கன்வாடி மையத்தை தூய்மைப் படுத்தியுள்ளனர்.

“என் மூத்த மகன் மும்பை வாட்டர் போர்ட் இன்ஸ்பெக்டராக வேலை செய்கிறார். இரண்டாவது மகன் மெக்கானிக்கல் என்ஜினியரிங் முடித்துவிட்டு இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் வேலை பார்க்கிறார். இளைய மகன் மின்வணிக நிறுவனம் வைத்துள்ளார். என் தயாரிப்புகளை விற்பனை செய்ய உதவுகிறார்,” என்றார்.

கோவிட் தொற்று

கொரோனா பரவலுக்கு முன்பு சுய உதவிக் குழு உறுப்பினர்கள் கோயில், மசூதி, தேவாலயம் என வழிபாட்டுத் தலங்களைத் தூய்மைப்படுத்தும் பணியில் தன்னார்வலர்களாக ஈடுபட்டனர்.

கொரோனா சமயத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்ய கபசுர குடிநீரை மக்களுக்கு விநியோகம் செய்தார்கள்.

“முன்பெல்லாம் மொத்த கிராமத்திற்கும் பொங்கல் தயாரித்து அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவோம். ஆனால் பெருந்தொற்று பரவலால் இதை நிறுத்திவிட்டோம்,” என்கிறார்.

குழுவில் ஒருவரால் தவிர்க்க முடியாத காரணங்களால் கடன் வாங்கிய தொகையைத் திரும்ப செலுத்த முடியாமல் போனால் மற்ற அனைவரும் அந்தத் தொகையை திரட்டி கட்டிவிடுகின்றனர்.

“ஒவ்வொரு பெண்ணுக்கும் நிதிச் சுதந்திரம் அவசியம். எதற்காகவும் மற்றவர்களை சார்ந்திருக்கக்கூடாது. யாருக்கு உதவி தேவைப்பட்டாலும் என்னிடம் வரலாம். நான் அவர்களுக்கு பயிற்சியளித்து சம்பாதிக்க உதவுவேன்,” என்று நம்பிக்கை வார்த்தைகளைப் பகிர்ந்துகொண்டார்.

ஆங்கில கட்டுரையாளர்: தியா கோஷி ஜார்ஜ் | தமிழில்: ஸ்ரீவித்யா

Latest

Updates from around the world