ஐஐடி-யில் எம்டெக் படிக்கும் பெட்ரோல் பங்க் ஊழியரின் மகள்: ஆர்யா ராஜகோபால் சாதித்தது எப்படி?
அப்பாவின் தொழிலைத் தான் அடுத்த தலைமுறையினரும் செய்ய வேண்டும் என்ற நிலை பல தலைமுறைகளுக்கு முன்பே காலவதி ஆகிவிட்ட நிலையில், தற்போது மீண்டும் ஒருமுறை அதனை உலகிற்கு உரக்கச் சொல்லியிருக்கிறார் பெட்ரோல் பங்க் ஊழியரின் மகளான ஆர்யா ராஜகோபால்.
அப்பாவின் தொழிலைத் தான் அடுத்த தலைமுறையினரும் செய்ய வேண்டும் என்ற நிலை பல தலைமுறைகளுக்கு முன்பே காலாவதி ஆகிவிட்ட நிலையில், தற்போது மீண்டும் ஒருமுறை அதனை உலகிற்கு உரக்கச் சொல்லியிருக்கிறார் பெட்ரோல் பங்க் ஊழியரின் மகளான ஆர்யா ராஜகோபால்.
யார் இந்த ஆர்யா ராஜகோபால்?
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பையனூர் அருகே உள்ள அன்னூரைச் சேர்ந்த ராஜகோபாலன், ஷோபனா தம்பதிக்கு ஒரே மகள் ஆர்யா. பையனூரில் உள்ள செயின்ட் மேரிஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்தார். ஷெனாய் நினைவு அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ படிப்பைத் தொடர்ந்தார்.
பள்ளிக் காலத்திலேயே படிப்பில் படுசுட்டியான ஆர்யா, பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் அனைத்துப் பாடங்களிலும் ஏ+ மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்.
பின்னர், கோழிக்கோடு என்ஐடியில் பிடெக் படித்தார். அதன் பின்னர், குவஹாத்தி மற்றும் கரக்பூர் ஐஐடிகளில் எம்டெக் படிப்புக்கு அனுமதி கிடைத்த போதும், ஆர்யா கான்பூர் ஐ.ஐ.டி.யை தேர்ந்தெடுத்தார். தற்போது கான்பூர் ஐஐடியில் பெட்ரோலியம் இன்ஜினியரிங் எம்.டெக் இறுதியாண்டு படித்து வருகிறார்.
ஆர்யாவின் தந்தை ராஜகோபாலன் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் பெட்ரோல் பங்க் ஒன்றில் பெட்ரோல் போடுபவராக 20 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். அவரது தாயார் அன்னூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வரவேற்பாளராக பணியாற்றி வருகிறார்.
அப்பா ராஜகோபாலனுக்கு மாதம் ரூ.16 ஆயிரம் சம்பளம், தனது வருமானம் சிறிதாக இருந்தாலும் மகளை பெரிய கனவுகளை நோக்கி நடைபோட வைத்தார். ஆர்யாவின் தந்தை ராஜகோபாலன் கூறுகையில்,
“படிப்பை முடித்த ஆர்யாவுக்கு வெளிநாடு செல்லும் எண்ணம் இல்லை. அவள் இந்தியாவில் வேலை செய்ய ஆர்வமாக இருக்கிறாள். மேலும், கேம்பஸ் இண்டர்வியூ மூலமாக வேலை பெறவும் முயற்சித்து வருகிறார்,” எனத் தெரிவித்துள்ளார்.
ஆர்யா மலையாளத்தை தாய்மொழியாக கொண்டு படித்திருந்தாலும், என்ஐடியில் சீட் கிடைப்பதில் எவ்வித தடையும் இன்றி வெற்றி கண்டார். அதற்குக் காரணம் பிளஸ் டூ படிக்கும் போதே நுழைவுத் தேர்வுகளுக்கு தன்னை தயார்படுத்திக்கொள்ள தனியார் பயிற்சி வகுப்புகளில் ஆர்யா பங்கேற்றார். தற்போது கான்பூர் ஐஐடியில் எம்.டெக் இறுதி ஆண்டு படித்து வருகிறார்.
ஆர்யாவின் அம்மா ஷோபனா கூறுகையில்,
“ஆர்யா படிக்கும் போது டி.வி. ஓடிக்கொண்டிருந்தாலும் அவர் படிப்பின் மீது தான் முழு கவனத்தையும் செலுத்துவார். மேலும் தேவையில்லாமல் செலவு செய்யும் பழக்கமும் அவளிடம் கிடையாது,” எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) லிமிடெட் தலைவர் ஸ்ரீகாந்த் மாதவ் வைத்யா, தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த செய்தி மூலமாக இந்த விஷயம் உலகத்தின் பார்வைக்குக் கிடைத்துள்ளது.
தனது எரிபொருள் நிலையத்தில் தந்தை மற்றும் மகள் இருக்கும் புகைப்படத்தை ட்வீட் செய்த அவர்,
“இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் பணியாளரான ராஜகோபாலனின் மகள் ஆர்யாவின் எழுச்சியூட்டும் கதையைப் பகிர்ந்து கொள்கிறேன். ஆர்யா ஐஐடி கான்பூரில் இணைந்ததன் மூலம் எங்களைப் பெருமைப்படுத்தியுள்ளார். ஆர்யாவுக்கு நல்வாழ்த்துக்கள்,” என பதிவிட்டுள்ளார்.
வசதியான பிள்ளைகள் மட்டுமே ஐஐடி போன்ற உயர்தர கல்வி நிறுவனங்களில் படிக்க முடியும் என்ற விதியை மாற்றி எழுதியுள்ள ஆர்யா ராஜகோபாலுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
தகவல் உதவி: டிவிட்டர்