நன்கொடையாக ரூ.750 கோடி பெற்று 7ம் ஆண்டாக முதலிடம் பிடித்த கட்சி எது தெரியுமா?

ஒவ்வொரு அரசியல் கட்சியும் பெற்ற நன்கொடை விவரங்கள்!
4 CLAPS
0

2019-20 ஆம் ஆண்டில் தான் பெற்ற தேர்தல் நன்கொடை விவரங்களை ஒவ்வொரு கட்சிகளும் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளன. இதுதொடர்பான ஆய்வு ஒன்று வெளியாகி இருக்கிறது. அதன்படி, 2019-20 காலக்கட்டத்தில் அதிக நன்கொடை பெற்ற கட்சியாக இந்தியாவை ஆண்டு வரும் பாஜக முதலிடம் பிடித்துள்ளது.

அந்தக் கட்சி பெற்றுள்ள நன்கொடை எவ்வளவு தெரியுமா?

ரூ.750 கோடி. இதன்மூலம் தொடர்ந்து ஏழாவது ஆண்டாக கார்ப்பரேட் கம்பெனிகள் மற்றும் தனிநபர் நன்கொடைகளை அதிகமாக பெற்றதில், பாஜக முதலிடம் வகித்து வருகிறது.

அதேநேரம், இந்த ஆண்டு பாஜக பெற்ற ரூ.750 கோடியானது நாட்டின் மற்றொரு பிரதான கட்சியான காங்கிரஸ் பெற்றதைவிட ஐந்து மடங்கு அதிகம் எனக் கூறப்படுகிறது.

2019-20 ஆம் ஆண்டில், காங்கிரஸ் கட்சிக்கு ரூ.139 கோடி மட்டுமே நன்கொடை கிடைத்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, தேசியவாத காங்கிரஸ் ரூ.59 கோடி, திரிணாமூல் காங்கிரஸ் ரூ.8 கோடி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ரூ.19.6 கோடி, இந்திய கம்யூனிஸ்ட் ரூ.1.9 கோடி என தேர்தல் நன்கொடைகள் பெற்றுள்ளன.

இதற்கிடையே, பாஜகவுக்கு மிகப்பெரிய அளவில் நன்கொடை அளித்த நிறுவனங்களில் பாஜக எம்.பி. ராஜீவ் சந்திரசேகரின் ஜூபிடர் கேபிடல், மேக்ரோடெக் டெவலப்பர்ஸ், பி ஜி ஷிர்கே கட்டுமான தொழில்நுட்பம், ப்ரூடென்ட் தேர்தல் அறக்கட்டளை, ஜன்கல்யன் தேர்தல் அறக்கட்டளை ஆகியவை உள்ளன.

இதில் அதிகபட்சமாக ப்ரூடென்ட் தேர்தல் அறக்கட்டளை - ரூ. 217.75 கோடி, ஜன்கல்யன் தேர்தல் அறக்கட்டளை - ரூ.45.95 கோடி, ஐடிசி நிறுவனம்- ரூ.76 கோடி, லோதா டெவலப்பர்ஸ் - ரூ.21 கோடி என நிதிகளை வாரி வழங்கியுள்ளன.

இதேபோல், 14 கல்வி நிறுவனங்கள் பாஜகவுக்கு நன்கொடை அளித்துள்ளதாக தரவுகள் கூறுகின்றனர். அதில், அதிகபட்சமாக, டெல்லி மேவார் பல்கலைக்கழகம் ரூ.2 கோடி கொடுத்துள்ளன. மேலும், பாஜகவைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் அளித்த நன்கொடையில் அதிகபட்சமாக, ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டர் ரூ.5 லட்சம், மாநிலங்களவை எம்.பி. ராஜீவ் சந்திரசேகர் ரூ.2 கோடி, அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டு ரூ.1.1 கோடி, கிர்ரான் கெர் ரூ.6.8 லட்சம் என நன்கொடை அளித்துள்ளனர்.

இதேபோல், 35 மாநில கட்சிகள் நன்கொடை பெற்ற விவரங்களும் வெளியாகியுள்ளன. அந்த வரிசையில், தெலங்கானாவில் ஆளும் டிஆர்எஸ் கட்சி அதிகபட்சமாக ரூ.130.46 கோடியும், மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா ரூ.111.4 கோடியும், ஆந்திராவில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ரூ.92.7 கோடியும், தமிழகத்தைச் சேர்ந்த கட்சிகளான அதிமுக ரூ.89.6 கோடியும், திமுக ரூ.64.9 கோடியும் நன்கொடை பெற்றுள்ளன.

தகவல் உதவி: indianexpress | தொகுப்பு: மலையரசு