பொன்னியின் செல்வன் vs யாத்திசை - கதை எது? நிஜம் எது?
தமிழ் சினிமாவில் மீண்டும் ‘பொன்னியின் செல்வன்’ ஃபீவர் தொடங்கிவிட்டது. இடையில் வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள ‘யாத்திசை’ குறித்து விவாதிப்பது இப்போது முக்கியத்துவம் பெறுகிறது.
தமிழ் சினிமாவில் மீண்டும் ‘பொன்னியின் செல்வன்’ ஃபீவர் தொடங்கிவிட்டது. இடையில் வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள ‘யாத்திசை’ குறித்து விவாதிப்பது இப்போது முக்கியத்துவம் பெறுகிறது.
‘பொதுவாக நாவல்கள் எழுத, குறிப்பாக சரித்திர நவீனங்கள் எழுத சட்டதிட்டங்கள் ஏற்பட்டிருக்கவில்லை. அப்படி ஏற்பட்டிருந்தால் அவற்றை நான் படித்ததில்லை. ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் தமக்கு உரிய முறையை வகுத்துக்கொண்டு எழுதுகிறார்கள்,’ என்று ‘பொன்னியின் செல்வன்’ வரலாற்று நாவலின் முடிவுரையில் எழுத்தாளர் கல்கி குறிப்பிட்டுள்ளார்.
அதாவது, ‘பொன்னியின் செல்வன்’ கதையானது ‘கதை’தான். முழுமையான வரலாறு அல்ல. வரலாற்று நாவல்தானே தவிர வரலாறு அல்ல என்பதை கல்கியே தெளிவுபட கூறுகிறார்.
ஆனால், ‘பொன்னியின் செல்வன்’ வரலாற்றுப் புனைவுக் கதையை அன்று முதல் இன்று வரை வாசிக்கும் பெரும்பாலானோரும் அதை சோழர்களின் வரலாறு என்றே கருதுகின்றனர். இதற்குக் காரணம், கல்வியின் எழுத்தாற்றே அன்றி வேறேதும் இல்லை.
எது உண்மை, எது புனைவு?
தமிழ் வாசகர்களே இப்படி என்றால், தமிழ் சினிமா பார்க்கும் இளம் தலைமுறையினரின் புரிதல் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். மணிரத்னம் இயக்கியுள்ள ‘PS 1’, ‘PS 2’ படங்களைப் பார்த்துவிட்டு, ‘இதுதான் நம் சோழர்களில் உண்மை வரலாறு’ என்று இளம் தலைமுறையினர் பலரும் கருதிக்கொள்ளும் அபாயம் உண்டு.
‘பொன்னியின் செல்வன்’ வரலாற்றுப் புதினத்திலும், சினிமாவும் முக்கியக் கதாபாத்திரங்களான நந்தினி, ஆழ்வார்க்கடியான், பூங்குழலி உள்பட பல கதாபாத்திரங்கள் கற்பனையாக உருவாக்கப்பட்டவை. அதேபோல், கதையின் மையக் கதாபாத்திரமான வந்தியத்தேவன் குறித்தும் உண்மை வரலாற்றில் தரவுகள் மிக மிகக் குறைவே.
பொன்னியின் செல்வனில் நிறைந்துள்ள அரசியல் சூழ்ச்சிகள், சிற்றரசர்கள் குறித்த பதிவுகள், நந்தினியின் ‘வசீகர’ உத்திகள், கதாபாத்திரங்களுக்கு இடையிலான உறவுகள், சுவாரஸ்யமான திருப்பங்கள், அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற த்ரில் அனுபவங்கள், வாழ்க்கை முறைகள் மற்றும் சூழல்கள் என அனைத்துமே வாசகர்கள், பார்வையாளர்களை ஈர்க்கப் புனையப்பட்டவை என்பது தெளிவு.
குறிப்பாக, முக்கியக் கதாபத்திரங்களான பெரிய பழுவேட்டரையர், சின்ன பழுவேட்டரையர்கள் எவருமே உண்மை வரலாற்றில் சுந்தரசோழர் காலத்தில் இல்லை என்கின்றனர் ஆய்வாளர்கள்.
ஆக, சோழர்களின் வரலாற்றை அடிப்படையாக வைத்து புனையப்பட்ட கதையாகவே ‘பொன்னியின் செல்வன்’ படைப்பைப் பார்க்க வேண்டுமே தவிர, அதை முழுக்க முழுக்க வரலாற்றுத் தரவுகளின் தொகுப்பாக பார்க்கக் கூடாது என்று வரலாற்று ஆய்வாளர்கள் அறிவுறுத்துகின்றனர்.
அதாவது, ‘பொன்னியின் செல்வன்’ எழுத்திலும் சரி, சினிமாவிலும் சரி, உண்மையில் இருந்து வெகு தூரம் விலகி, மிகைப்படுத்தப்பட்ட ‘ரொமான்ட்டிசைஸ்’ செய்யப்பட்ட வரலாற்றுப் புனைவுப் படைப்பாகவே நாம் அணுக வேண்டும் என்ற கருத்து இங்கே ஆழமாக முன்வைக்கப்படுகிறது.
‘யாத்திசை’ ஏற்படுத்திய அதிர்வுகள்
“ப்பா... பேரழகிகள்டா”, “என்னமா இருக்கு காஸ்ட்யூம்ஸ்...”, “ஆட்டமும் பாட்டமும் என்ன ஒரு கொண்டாட்ட வாழ்க்கை?!”, “இப்படி ஒரு சொகுசான லைஃப்ஸ்டைலா?!”, “போர்க்காட்சிகள் வேற லெவல்...” - இப்படியெல்லாம் ‘பொன்னியின் செல்வன்’ ஆக்கங்களைக் கண்டு வியந்த இளம் தலைமுறையினர், அந்தக் கதை நிகழ்வதாகச் சொல்லப்படும் காலக்கட்டத்துக்கு சற்றே 300+ ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று, ஏழாம் நூற்றாண்டில் தென்னகத்தைக் காட்டிய ‘யாத்திசை’ படம் பார்த்துவிட்டு நிச்சயம் பகீரென அலறியிருக்கக் கூடும். ஆம், ‘யாத்திசை’ திரைப்படம் ஏற்படுத்தும் தாக்கம் அத்தகையது.
பாண்டியப் பேரரசை வீழ்த்துவதற்காக பழங்குடி இனக்குழுக்கள் உடன் சேர, சோழப் படைகள் இணைந்து போர் தொடுக்கின்றன. அந்தக் கடுமையான யுத்தத்தில் வென்று இணையற்ற வீரனாக வலம் வருகிறார் பாண்டிய அரசன் ரணதீரன். போரில் தோல்வியுற்றதால் எயினர் குலம் தனது விவசாயத் தொழிலை இழந்துவிட்டு, பாலை நிலத்தில் வேட்டைக்குடியாக மாறும் அவலத்தைச் சந்திக்கிறது.
அப்போது, கொதி என்னும் எயினர் குல இளம் தலைவன் ஒருவன் பாண்டிய சாம்ராஜ்ஜியத்தை அழிக்கப் புறப்படுகிறான். மறைந்து வாழும் சோழர்களின் துணை நாடும் அவனிடம், பாண்டியர்களின் கோட்டையைக் கைப்பற்றிய பின் தாங்கள் வருவதாக உறுதி அளிக்கின்றனர்.
கொதியின் எயினர் குழு பாண்டியர்களை வீழ்த்தியதா, பாண்டிய மன்னன் ரணதீரனை கொதி எதிர்கொண்டது எப்படி, சோழர்கள் உதவிக்கு வந்தார்களா? - இப்படி பல கேள்விகளுக்கு விடை சொல்லும் வரலாற்றுப் பின்புலத்துடன் கூடிய கற்பனைத் திரைக்கதைதான் தென் திசை என்று பொருள்படும் ‘யாத்திசை’ எனும் வரலாற்றுப் புனைவு சினிமா.
நிஜத்துக்கு நெருக்கமாக...
தமிழ் சினிமா வரலாற்றில் சோழர்களை மையமாக வைத்தே அதிக எண்ணிக்கையில் திரைப்படங்கள் வெளியாகியிருந்த நிலையில், பாண்டியர்களின் பின்புலத்துடன் எயினர், பள்ளிப்படை என இனக்குழுக்களுடன் தேவரிடியார் பெண்கள் நிலை, சங்கத் தமிழ்ச் சொற்களில் உரையாடல், போருக்கான பலிச் சடங்குகள் என பல பண்பாட்டுத் தடயங்களை பதிவு செய்த வகையில் இயக்குநர் தரணி ராஜேந்திரன் தனித்து நிற்கிறார்.
கதை மாந்தர்களை வடிவமைத்த விதமும், கதை சொன்ன விதமும் வணிக சினிமா மீது ஆர்வம் கொண்டவர்களுக்கு சற்றே அந்நியமாகத் தெரிந்தாலும் கூட, சுமார் ஒரு மணி நேரம் தொய்வின்றி நகரும் போர்க்களக் காட்சிகளும், சண்டைக்காட்சிகளும் அவர்களுக்கு நல்விருந்தை நல்கும் என்பதை மறுக்க முடியாது.
தமிழர் மரபு சார்ந்த ஆடைகள், அணிகலன்கள், போர்க் கருவிகள், போர்ச் சடங்குகள், கொற்றவை வழிபாடு, சுய பலி கொடுக்கும் நவகண்டம் முதலியவை பதிவு செய்யப்பட்ட விதம், உண்மைக்கு மிக நெருக்கமாக இருப்பதை உணரலாம்.
“யாத்திசை கதைக் களத்துக்கான ஆய்வுக்கும் திரைக்கதைக்கும் மட்டும் ஒன்றரை ஆண்டுகள் தேவைப்பட்டன. மொத்தமாக 3 ஆண்டுகள் பட வேலைகள் நடந்தன.
போரில் வீழ்த்தப்பட்டவர்களின் சமூகத்தில் இருந்து ஒருவன் அதிகாரத்தை அடைய வேண்டும் என நினைக்கிறான். ரணதீரனை எதிர்த்து நிற்கும் அவன்தான் கொதி என்கிற கதாபாத்திரம். பாண்டிய மன்னனுக்கு எதிராகப் போராடிய சிறு தொல்குடியை பற்றிய கதையில், அந்த மொழி வழக்கு போன்றவற்றை அப்படியே கொண்டு வருவது சவாலாக இருந்தது.
“இந்தப் படம் பொன்னியின் செல்வனுக்குப் போட்டியல்ல. ஆனால் ‘யாத்திசை’ பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்,” என்கிறார் இயக்குநர் தரணி ராஜேந்திரன்.
பொன்னியின் செல்வன் vs யாத்திசை
உண்மைதான் ‘PS 1’, ‘PS 2’-க்கு இடையே ‘யாத்திசை’ மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அத்துடன், இளம் தலைமுறையிடம் தமிழர்களின் உண்மையான பண்பாட்டுத் தடயங்களை நோக்கிய தேடலையும், அவற்றை அறிந்துகொள்ள வேண்டிய தாகத்தையும் உண்டாக்கியிருக்கிறது என நம்பலாம்.
ஏனெனில், முன்னணி நட்சத்திரங்கள், நுற்றுக்கணக்கான கோடி பட்ஜெட்டில் ‘செட்’டுகள், பிரமாண்டமான காட்சி அமைப்புகள், கோடிகளில் ப்ரோமோஷன்கள், ஃபேன்டஸி போன்ற வியத்தகு வாழ்க்கை முறைப் பதிவுகளை எல்லாம் காட்டி, வரலாற்றுப் புனைவு என்ற பெயரில் ‘இதுதான் தமிழர் வரலாறு’ மறைமுகமாகப் போலியாக நம்ப வைப்பது நடக்காமல், சாமியாடியாக வரும் குரு சோமசுந்தரத்தை தவிர நாம் இதுவரை அறிந்திடாத புதுமுகங்களை, அதுவும் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப மண்சார்ந்த தோற்றங்களுடன் கூடிய நடிகர்களை வைத்து, மிரட்டலான காட்சி அமைப்புகளாலும், உள்ளடக்கத்தாலும் வரலாற்றுக்கு நெருக்கமாக உருவாக்கப்பட்டுள்ளது ‘யாத்திசை’.
ஓர் அட்டகாசமான வரலாற்று நாவலுக்கு அற்புதமான சினிமா அனுபவத்தை நல்கும் ‘பொன்னியின் செல்வன்’ நிச்சயம் வியக்கத்தக்கது. அதேபோல் அதுவா, இதுவா, எதை நம்புவது என்றக் குழப்பத்தைத் தாண்டி, உண்மை வரலாறு நோக்கிய, தமிழர்களின் வாழ்வியல் நோக்கிய தேடல்களை தூண்டிய வகையில் ‘யாத்திசை’களின் வரவு போற்றப்பட வேண்டிய ஒன்று என்பது மிகையல்லை.
Edited by Induja Raghunathan