மாத வருவாய் 1 கோடி – பிரீமியம் அழகுப் பொருட்களைத் தயாரிக்கும் நண்பர்கள்!

நண்பர்களான விவேக் சிங், சௌரவ் பட்னாயக் இருவரும் இணைந்து பெங்களூருவில் 2018-ம் ஆண்டு தொடங்கிய Anveya Living சர்வதேச பிராண்டுகளுக்கு நிகரான தரத்தில் அழகுப் பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்கிறது.
2 CLAPS
0

நாம் ஒரு பிரச்சனையை சந்திக்கிறோம். அல்லது அந்தப் பிரச்சனையை சந்திப்பவர்கள் நம்முடன் அதுகுறித்து பகிர்ந்துகொள்கிறார்கள். இதற்குத் தீர்வே இல்லையா? இந்தப் பிரச்சனையை இதற்கு முன்பு யாரும் சந்திக்கவில்லையா? அவர்கள் தீர்வு குறித்து யோசிக்காமல் கடந்து சென்றுவிட்டார்களா? தீர்வை உருவாக்கும் முயற்சியை ஏன் யாரும் மேற்கொள்ளவில்லை?

அடுக்கடுக்காகத் தோன்றும் இதுபோன்ற கேள்விக்களுக்கான விடைகளைத் தேடுபவர்களே பெரும்பாலும் தொழில்முனைவோர்களாக உருவெடுக்கின்றனர். அப்படி யோசித்தவர்களில் ஒருவர்தான் விவேக் சிங். இவரது மனைவி வெளிநாடுகளுக்குப் பயணம் செல்லும்போதெல்லாம் கூந்தல் பராமரிப்புப் பொருட்களை வாங்கிவிடுவார்.

இதற்கான காரணத்தைக் கேட்டபோது இந்தியத் தயாரிப்புகள் சர்வதேச பிரீமியம் தயாரிப்புகளைப் போல் தரமானதாக இருப்பதில்லை என்பார். விவேக்கின் நண்பர் சௌரவ் பட்னாயக், இவருடன் விவேக் இதுகுறித்து கலந்துரையாடினார். இந்தியாவில் ஏன் தரமான அழகுப் பொருட்கள் கிடைப்பதில்லை என்று இருவரும் ஆராய்ந்தனர்.

உலகம் முழுவதும் எத்தனையோ தயாரிப்புகள் பற்றி ஆய்வு நடத்தப்படுகிறது. ஆனால் இந்தத் தயாரிப்புகள் மற்ற நாடுகளைச் சென்றடையும் அதே வேகத்தில் ஏன் இந்தியா வருவதில்லை?

இதுவே இவர்களது அடுத்த கேள்வியாக இருந்தது. இதுபோன்ற ஆய்வுகள் மேற்கொண்ட ஆய்வகங்களுடன் இணைந்து செயல்பட்டு சர்வதேச பிராண்டுகளை விஞ்சும் வகையில் தரமான தயாரிப்பை நாமே சந்தையில் அறிமுகப்படுத்தலாம் என இருவரும் ஒருமனதாகத் தீர்மானித்தனர்.

இருவரும் தங்கள் சேமிப்புத் தொகையை ஒன்று திரட்டினார்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் நிதி திரட்டினார்கள். 2018-ம் ஆண்டு பெங்களூருவில் Anveya Living தொடங்கினார்கள்.

தயாரிப்புகள் மற்றும் விற்பனை

Anveya Living ஆரம்பத்தில் ஒரே ஒரு கிடங்கில் இருந்து செயல்பட்டது. 2019-ம் ஆண்டு தூய நறுமண எண்ணெய், குளிர் அழுத்த முறையில் தயாரிக்கப்படும் எண்ணெய் ஆகியவற்றைத் தயாரிக்கத் தொடங்கியது.

அதே ஆண்டு கூந்தல் மற்றும் சருமப் பிரச்சனைகளுக்குத் தீர்வளிக்கும் தயாரிப்புகளை ThriveCo என்கிற மற்றொரு பிராண்டின்கீழ் அறிமுகப்படுத்தியது.

இந்நிறுவனம் ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து போன்ற நாடுகளில் உள்ள ஆர் & டி ஆய்வகங்களுடன் இணைந்து செயல்படுகிறது. இதுதவிர பட்டி, சண்டிகர், நொய்டா போன்ற பகுதிகளில் உள்ள தயாரிப்பாளர்களுடனும் இணைந்து செயல்படுகிறது.

”கூந்தல் பராமரிப்பு, சருமப் பராமரிப்பு, குளிர் அழுத்த முறையில் தயாரிக்கப்படும் எண்ணெய், நறுமண எண்ணெய் என 40 தயாரிப்புகளை வழங்குகிறோம். www.anveya.com, www.thriveco.in ஆகிய தளங்கள் மூலமாகவும் அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற தளங்கள் மூலமாகவும் விற்பனை செய்கிறோம்,” என்கிறார் விவேக்.

கடந்த மாதம் இந்நிறுவனம் 1 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் வருவாயை நான்கு மடங்காக அதிகரிக்கச் செய்து 4 கோடி ரூபாய் மாத வருவாய் ஈட்ட திட்டமிட்டுள்ளனர்.

சர்வதேச பிராண்டிற்கு நிகரான தரம்

சர்வதேச பிராண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் நுகர்வோருக்கு குறைந்த தரத்திலான தயாரிப்புகளே விற்பனை செய்யப்படுவதாக வருத்தம் தெரிவிக்கின்றனர் இந்நிறுவனர்கள்.

”பல நாடுகளில் தடை செய்யப்பட்ட மூலப்பொருட்கள்கூட இந்தியாவில் பயன்பாட்டில் உள்ளன. எனவே சிறந்த, தரமான தயாரிப்புகளை இந்திய நுகர்வோருக்கு வழங்க விரும்பினோம். இந்தியத் தயாரிப்புகள் தரமற்றவை என்கிற மக்களின் கண்ணோட்டத்தை மாற்றவே முயற்சி செய்து வருகிறோம்,” என்கிறார்.

தயாரிப்பின் தன்மைக்கு ஏற்ப சில மூலப்பொருட்களை உள்ளூரியே வாங்குகின்றனர். சிலவற்றை இறக்குமதி செய்கின்றனர்.

டி2சி வணிக மாதிரி

Anveya Living டி2சி வணிக மாதிரியில் செயல்படுகிறது. சொந்த வலைதளம் மூலம் விற்பனை செய்கிறது. அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற மின்வணிக தளங்களையும் இந்நிறுவனமே நிர்வகித்து வருகிறது. இதனால் இடைத்தரகர்கள், மறுவிற்பனையாளர்கள் போன்றோரின் தலையீடு தவிர்க்கப்படுகிறது.

60 சதவீத விற்பனை சொந்த வலைதளம் மூலம் செய்யப்படுவதாகவும் மற்ற மின்வணிக தளங்கள் மூலம் 40 சதவீதம் விற்பனை நடைபெறுவதாகவும் விவேக் தெரிவிக்கிறார்.

“வாடிக்கையாளர்களுடன் நேரடித் தொடர்பில் இருப்பதால் அவர்களது தேவைகளையும் கருத்துக்களையும் கேட்டறிய முடிகிறது. இதை அடிப்படையாகக் கொண்டு தயாரிப்புகளை மாற்றியமைக்கவும் புதிய தயாரிப்புகளை உருவாக்கவும் முடிகிறது,” என்கிறார் விவேக்.

வருங்காலத் திட்டங்கள்

இந்தியாவில் காஸ்மெடிக்ஸ் பொருட்களுக்கான சந்தை 2020-2025 ஆண்டுகளிடையே 4.23 சதவீத ஆண்டு வளர்ச்சி விகிதத்துடன் 20 பில்லியன் டாலர் மதிப்புடையதாக வளர்ச்சியடையும் என மதிப்பிடப்படுவதாக Mordor Intelligence மற்றும் Stastista தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

ஆரம்பத்தில் Anveya செயல்பாடுகளை கொரோனா பாதித்தாலும்கூட படிப்படியாக மீண்டு விரிவடைந்து வருவதாக நிறுவனர்கள் தெரிவிக்கின்றனர். பெருந்தொற்றுக்கு முன்பிலிருந்தே ஆன்லைனில் செயல்பட்டு வருவதால் தொடர்ந்து வாடிக்கையாளர்களுடன் தொடர்பில் இருந்து வணிக செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்தி வருகின்றனர்.

இந்த ஆண்டு புதிய பிரிவுகளின்கீழ் கூடுதலாக 70 தயாரிப்புகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளனர். இதுவரை சுயநிதியில் இயங்கி வரும் இந்நிறுவனம் வரும் நாட்களில் நிதி திரட்டவும் திட்டமிட்டுள்ளது.

ஆங்கில கட்டுரையாளர்: ரிஷப் மன்சூர் | தமிழில்: ஸ்ரீவித்யா

Latest

Updates from around the world