‘தோ ப்ளேட் பானிபூரி...’ என்று இனி கேட்கவே தேவை இல்லை; இதோ வந்ததே பானிபூரி ஏடிஎம்!

By YS TEAM TAMIL|19th Sep 2020
‘பணத்தை கொடு... பானிபூரி எடு' என்ற பாணியில் செயல்படும் பானிபூரி ஏடிஎம்; பானியை மட்டும் வழங்கும் தானியங்கி பானிபூரி மிஷன்; என லாக்டவுண் நாட்களில் அப்டேட்டாகிய பானிபூரி வியாபாரம்.
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

லாக்டவுன் நாட்களில் மக்கள் அதிகம் மிஸ் செய்யும் விஷயங்களுள் ஒன்று ஸ்ட்ரீட்புட்ஸ். அதிலும், சாலையோரங்களில் தள்ளுவண்டி கடைகளாகவும், சைக்கிளில் பெரிய மூங்கில்கூடை ஒன்றில் குட்டி குட்டி பூரிகளுடன் நிற்கும் பானிபூரி வாலாக்கள். இனி அந்த கவலை வேண்டாம். ‘பையா, தோ பிளேட் பானிபூரி ‘என்று கேட்டு வாங்கி, பானி ஒழுக ஒழுகச் சாப்பிட முடியாமல் ஏங்கிக் கொண்டிருப்பவர்களுக்காகவே வந்துவிட்டது ‘பானிபூரி ஏடிஎம்'.


‘கட்டாயம் மாஸ்க் அணிதல், சமூக இடைவெளி, கைகளை கழுவுதல்' -இதுவே கொரோனா அரக்கனிடமிருந்து நம்மை நாம் காத்துக் கொள்வதற்காக வழங்கப்பட்ட வழிமுறைகள். நிலைமை இப்படியிருக்க, பானிபூரியை கட்டை விரலால் குத்தி ஓட்டை போட்டு, அதில் உருளைகிழங்கு மாசலாக்களை வைத்து, பானி குடத்தில் பூரியை உள்ளேவிட்டு எடுத்து அதை வாங்கி உண்டால், வயித்துக்குள் சில, பல பானிபூரி மட்டுமின்றி கூடவே கொரோனாவும் சென்று குத்தாட்டம் போடும்.

panipuri ATM

பானிபூரிக்காக சிலர் ஏங்குவது ஒருபுறம் இருக்க, லாக்டவுண் நாட்களில் பானிபூரி வியாபாரமும் இன்றி தவித்தனர் பானிபூரி வியாபாரிகள். இரண்டிற்கும் தீர்வு காண எண்ணிய குஜாரத் மாநிலத்தை சேர்ந்த ஒருவர், தொடுதலுக்கு வேலையின்றி ‘பணத்தை கொடு, பானிபூரி எடு...' என்ற பாணியில், பானிபூரி ஏடிஎம் மிஷனை வடிவமைத்துள்ளார்.


ஏடிஎம் மிஷன் போன்றே செயல்படும் ‘ஆட்டோமெட்டிக் பானிபூரி மிஷின்' எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்த வீடியோ இணையத்தில் வைரலோ வைரலாகியது. அவ்வீடியோவில், தானியங்கி பானிபூரி மிஷினை எப்படி பயன்படுத்துவது என்பதை விவரிக்கிறார் ஒருவர்.

பார்ப்பதற்கும் ஏடிஎம் மிஷின் போன்றே உள்ளது. ஆனால், இதில் பணத்தை எடுக்கும் இடத்தில் பணத்தை வைக்கவேண்டும் அவ்வளவே. திரையில் தோன்றும் ஆப்சனில் தேவையானதை தேர்ந்தெடுத்த பின்னர், 20ரூபாய் நோட்டை உள்ளிட வேண்டும். கொடுத்த பணத்திற்கு ஏற்ப பானிபூரி ஒன்றன்பின் ஒன்றாக வெளியே வருகிறது. ஒரு பானிபூரியை எடுத்த சில வினாடிகளுக்கு பிறகே அடுத்த பானிபூரி வெளியே வருகிறது. இவ்வியந்திரத்தை வடிவமைக்க 6 மாதங்கள் ஆகியதாக கூறப்படுகிறது.

பானிபூரி விரும்பிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் அதே சமயம், நாடெங்கும் பானிபூரி வியாபாரமின்றி தவிக்கும் பல ஆயிர பானிபூரிவாலாக்களுக்கும் பயனுள்ளதாய் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது இக்கண்டுபிடிப்பு.

‘பானிபூரி ஏடிஎம் மிஷின்' போன்றே மற்றொரு பானிபூரி மிஷினும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பூரியை பிளேட்டில் வைத்து ஃபில்லிங் செய்வதோடு முடிந்துவிடுகிறது கடைக்காரரின் பணி. பானியை ஊற்றும் பணியை செய்கிறது தானியங்கி பானிபூரி இயந்திரம். தானியங்கி பானி பூரி இயந்திரம் முற்றிலும் சென்சாரில் இயங்குகிறது.

பானி பூரி விற்பனையாளர் வாடிக்கையாளருக்கு ஒரு தட்டு பூரியை வழங்கியவுடன், பானி வரும் பைப்பில் வாடிக்கையாளர்கள் பூரியை காட்ட வேண்டும். சென்சாரால் இயங்கும் இயந்திரம் கை நீட்டியிருக்கும் வரை பானியை ஊற்றுகிறது. டுவிட்டரில் பகிரப்பட்ட இப்பானிபூரி இயந்திரத்தின் வீடியோவினை 50,000 பேர் பார்த்துள்ளனர். வீடியோவிற்கு லைக்குகளும் குவிகிறது.


பானிபூரி மிஷின் கிரியேட்டருக்கு ஜே!


தகவல் உதவி: livemint & timesnownews | கட்டுரையாளர்: ஜெயஸ்ரீ