'அந்த பாராட்டுக்குத் தகுதியானவரே மயூர்' - வைரலாகும் வீடியோவும், அதன் பின்னணியும்!

ரயில்வே ஊழியரின் அசாத்திய செயல்!
12 CLAPS
0

ஃபேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் என சமூக வளைதங்களில் நேற்று முழுவதும் ஒரு வீடியோ மற்றும் புகைப்படம் அதிகமாக பகிரப்பட்டது. அந்தப் புகைப்படத்தில் ஒரு மனிதர் நடந்து வர அவரை வரவேற்று பலர் கைதட்டுகின்றனர். அந்த மனிதர் ஏன் பாராட்டப்படுகிறார் என்ற விவரங்கள் அந்த பதிவுகளில் வரிசை கட்டுகின்றன.

அதை படிக்கும்போது நிச்சயம் நாமும் அவரை பாராட்டத் தோன்றும். பாராட்டப்படும் மனிதர் மயூர் ஷெல்கே. இவர் ஒரு ரயில்வே ஊழியர்.

மகாராஷ்டிரா மாநிலம் வாங்கினி ரயில் நிலையத்தில் மயூர் பணிபுரிந்து வருகிறார். கடந்த 17ம் தேதி மயூர் டியூட்டியில் இருந்தபோது பார்வையற்ற தாய் தனது மகனுடன் பிளாட்பாரத்தில் நடந்து சென்றுகொண்டிருந்துள்ளார். பிளாட்பாரத்தின் ஒரத்தில் நடந்து சென்றுகொண்டிருந்த அந்த சிறுவன், எதிர்பாராதவிதமாக தண்டவாளத்தில் விழுந்தவிட்டான். இதை அறியாத அவனின் பார்வையற்ற தாய், மற்ற இடங்களில் சிறுவனை தேடிக் கொண்டிருந்தார்.

அந்தநேரத்தில் சிறுவன் விழுந்த தண்டவாளத்தில் ரயில் ஒன்று வேகமாக வந்துகொண்டிருக்க இதை கவனித்த மயூர், உடனடியாக ஓடிச்சென்று வேகமாக வரும் ரயிலையும், தன் உயிரையும் பொருட்படுத்தாமல், நொடிப்பொழுதில், சிறுவனை மீட்டு பிளாட்பாரத்தில் ஏற்றிவிட்டு தானும் ஏறினார்.

இந்தக் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாக, பின்னர் இணையதளங்களில் வெளியானது. இதையடுத்தே அந்த ஊழியரை அனைவரும் பாராட்டி வருகின்றனர். மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், மயூரை அழைத்து வெகுவாக பாராட்டி இருக்கிறார்.

இதேபோல, அவரது அலுவலக ஊழியர்களும், அவரை எழுந்துநின்று கைதட்டி பாராட்டியிருக்கின்றனர். அந்தப் புகைப்படம்தான் நாம் மேலே சொன்னது. இந்தப் புகைப்படமும், சிசிடிவி காட்சிகளும் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றன. இது தொடர்பாக பேசிய மயூர்,

“நான் அந்தப் பக்கம் பார்த்தபோது, தண்டவாளத்தில் சிறுவன் விழுந்துகிடந்தபோது நடைமேடையில் கண் பார்வையற்ற அவனின் தாய் எதுவும் செய்ய முடியாமல் தவித்துக் கொண்டிருப்பது கண்ணில்பட்டது. உடனே சிறுவனை தூக்க ஓடினேன். என் உயிரைப் பற்றி கவலைப்படவில்லை என்றாலும் நல்வாய்ப்பாக என்னால் குழந்தையைக் காப்பாற்ற முடிந்தது'' என்று தெரிவித்துள்ளார்.

நிச்சயம் பாராட்டுக்கு தகுதியானவர் மயூர்!

Latest

Updates from around the world