சவாலான நேரத்தில் கைகொடுத்த கைவினைக்கலை – லெஹ்ரோ தேவியின் ஊக்கமிகு கதை!

ராஜஸ்தானைச் சேர்ந்த லெஹ்ரோ தேவி தன்னுடைய கைவினைக் கலையை GVCS என்ஜிஓ உதவியுடன் மெருகேற்றிக்கொண்டதுடன் ஆயிரக்கணக்கான பெண்கள் நிதிச்சுதந்திரம் பெற உதவும் வகையில் பயிற்சியும் அளித்து வருகிறார்.
0 CLAPS
0

ஆண் குழந்தைகளை வாரிசாகவும் பெண் குழந்தைகளைப் பாரமாகவும் கருதும் போக்கினை இன்றளவும் மக்களிடம் பார்க்கமுடிகிறது. இதனால் பெண் குழந்தைகள் சிசுக்கொலை செய்யப்படும் கொடூர சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

அதுமட்டுமல்ல ஆண் வாரிசு வேண்டும் என்பதற்காக ஆண்கள் மறுமணம் செய்துகொள்ளும் போக்கும் காணப்படுகிறது. இதுபோல் ஆண் வாரிசு வேண்டும் என்பதற்காக மறுமணம் செய்துகொண்டுள்ளார் லெஹ்ரோ தேவியின் கணவர்.

ராஜஸ்தானைச் சேர்ந்த லெஹ்ரோ தேவியின் கணவர் மறுமணம் செய்துகொண்டாலும்கூட அந்தக் குடும்பத்தையும் சேர்த்து பராமரித்து வருகிறார் லெஹ்ரோ தேவி.

ராஜஸ்தானின் பார்மர் பகுதியைச் சேர்ந்தவர் லெஹ்ரோ தேவி. இவருக்குத் திருமணம் முடிந்தது. அடுத்தடுத்து மூன்று பெண் குழந்தைகள் பிறந்தன. ஆண் வாரிசு வேண்டும் என்பதற்காக லெஹ்ரோ தேவியின் கணவர் மறுமணம் செய்துகொண்டார். இவர்களது சமூகத்தில் ஆண்கள் இதுபோல் மறுமணம் செய்து கொள்வது வழக்கமான ஒன்றுதான். இரண்டாவது மனைவிக்கு அடுத்தடுத்து இரண்டு மகன்கள் பிறந்தனர்.

இன்று லெஹ்ரோ தேவிக்கு 53 வயதாகிறது. கணவர், மூன்று பெண் குழந்தைகள், கணவரின் இரண்டாவது மனைவி, அவர்களது இரண்டு மகன்கள் என அனைவரோடும் ஒத்துமையாக வாழ்ந்து வருகிறார்.

சவாலான சூழலைத் துணிந்து எதிர்த்தார்

லெஹ்ரோ தேவியின் குடும்பம் பெரிது என்றால் செலவும் அதிகம் இருக்கத்தானே செய்யும். செலவுகளை சமாளிக்க வேலை செய்ய திட்டமிட்டார் லெஹ்ரோ. பார்மர் மாவட்டத்தில் கிராமின் விகாஸ் ஈவம் சேத்னா சன்ஸ்தான் (GVCS) என்கிற என்ஜிஓ பயிற்சியளிப்பது குறித்து கேள்விப்பட்டார்.

“எனக்குக் கைவினைக் கலையில் ஆர்வம் அதிகம். GVCS என்ஜிஓ பாரம்பரிய கைவினைக் கலை சம்பந்தப்பட்ட பயிற்சி அளிப்பது தெரிந்ததும் நான் ஆர்வத்துடன் சேர்ந்து கொண்டேன். என் மகள்களுடன் என்னுடன் பயிற்சியில் சேர்ந்து கொண்டார்கள்,” என்கிறார் லெஹ்ரோ.

GVCS என்ஜிஓ உடன் இப்படித் தொடங்கப்பட்ட இவரது இணைப்பு பத்தாண்டு காலமாக நீடித்து வருகிறது.

வாய்ப்புகள் கிடைக்கும்போது பிரச்சனைகளும் சேர்ந்திருப்பது இயல்புதானே? இவரும் பல சிக்கல்களைக் கடந்து வந்துள்ளார்.

”ஆரம்பத்தில் மூலப்பொருட்களைப் பெறவும் இறுதித் தயாரிப்பை டெலிவர் செய்யவும் நீண்ட தூரம் பயணிக்கவேண்டிய நிலை இருந்தது. ஆனால் எங்கள் தயாரிப்புகளை விற்பனை செய்ய GVCS ஆதரவளித்தது. இதனால் மிகப்பெரிய மாற்றத்தை எங்களால் உணரமுடிந்தது. இதைக் கண்டு மற்ற பெண்களுக்கும் பயிற்சி எடுத்துக்கொள்ளவேண்டும் என்கிற உத்வேகம் பிறந்தது,” என்கிறார்.

பயிற்சி பெற்றவர் பயிற்சி வழங்குகிறார்

லெஹ்ரோ தேவிக்கு கைவினைக் கலையில் இருந்த ஆர்வம் அவருக்குக் கைகொடுத்தது. ஆர்வத்துடன் முறையான பயிற்சியும் சேர்ந்தால் சாதனை படைக்க எதுவும் தடையாக இருக்காது என்பதற்கு இவரைப் போன்றோரே முன்னுதாரணம்.

”GVCS-ல் திறன் மேம்பாட்டுப் பயிற்சியும் அளிக்கப்படும். இதன் மூலம் கைவினைஞர்கள் மாஸ்டர் பயிற்சியாளர்கள் ஆகலாம். மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுக்கலாம்,” என்கிறார்.

லெஹ்ரோ அடுத்தகட்டமாக மாஸ்டர் பயிற்சியாளர் ஆனார். இதுவரை ஆயிரக்கணக்கான பெண்களுக்கு பாரம்பரியக் கைத்தொழில்களில் பயிற்சியளித்துள்ளார்.

லெஹ்ரோ தேவிக்கு மிகப்பெரிய உந்துதலாக இருப்பது GVCS தலைவர் ருமா தேவி. ராஜஸ்தானின் தார் பகுதியில் 75 கிராமங்களைச் சேர்ந்த 22,000 கைவினைஞர்களுக்குப் பயிற்சியளித்துள்ளார்.

இன்று லெஹ்ரோ தேவி பாரம்பரிய கைவினைக் கலையை ஊக்குவிப்பதுடன் பெண்களுக்கு பயிற்சியளிப்பதிலும் தன்னை அர்ப்பணித்துக்கொண்டுள்ளார்.

“டெல்லி, கோவா என பல இடங்களுக்கு பயணம் செய்திருக்கிறேன். பல்வேறு கண்காட்சிகளிலும் பயிற்சி பட்டறைகளிலும் பங்கேற்றிருக்கிறேன். என்னுடைய வேலைப்பாடுகளை காட்சிப்படுத்தும் ஃபேஷன் ஷோக்களில்கூட பங்கேற்றிருக்கிறேன்,” என்று மகிழ்ச்சியாகத் தெரிவிக்கிறார் லெஹ்ரோ தேவி.

தற்போது லெஹ்ரோ தேவி ஜெய்ப்பூரில் உள்ள GVCS Craft மையத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார்.

லெஹ்ரோ தேவி தன்னுடைய கைவினைக் கலைத் திறனை மெருகேற்றிக்கொண்டு வருவாய் ஈட்டியதுடன் ஏராளமான பெண்கள் நிதிச்சுதந்திரம் பெறும் வகையில் பயிற்சியும் அளித்துள்ளது பாராட்டுக்குரியது.

ஆங்கில கட்டுரையாளர்: தியா கோஷி ஜார்ஜ் | தமிழில்: ஸ்ரீவித்யா