‘டிஜிட்டல் ரூபாய்’ பரிவர்த்தனை ஏற்க இருப்பதாக ரிலையன்ஸ் டிஜிட்டல் அறிவிப்பு!
டிஜிட்டல் ரீடைல் நிறுவனம், நாட்டில் 7 ஆயிரம் நகரங்களில் உள்ள 17,000 விற்பனை மையங்களில் டிஜிட்டல் ரூபாய் பரிவர்த்தனை ஏற்க உள்ளது
ரிலையன்ஸ் குழுமத்தின் அங்கமான ரிலையன்ஸ் டிஜிட்டல், நாடு தழுவிய அளவில், தனது விற்பனை மையங்களில் டிஜிட்டல் ரூபாய் பரிவர்த்தனையை விரைவில் ஏற்க இருப்பதாக அறிவித்துள்ளது.
இதன் முதல் கட்டமாக, மும்பையில் உள்ள பிரெஷ்பிக் விற்பனை நிலையத்தில் டிஜிட்டல் ரூபாய் பரிவர்த்தனை ஏற்கப்பட்டுள்ளது.

நிறுவனம் ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் பணமான டிஜிட்டல் ரூபாயை ஏற்பதற்காக, இன்னோவிட்டு டெக்னாலஜிஸ், ஐசிஐசிஐ வங்கி மற்றும் கோடக் மகிந்திரா வங்கியுடன் கூட்டு ஏற்படுத்திக்கொண்டுள்ளது. வாடிக்கையாளர்கள் பில் தொகையை கியூஆர் கோடு மூலம் டிஜிட்டல் ரூபாயாக செலுத்தலாம்.
"மேலும், அதிக இந்தியர்கள் டிஜிட்டல் பரிவர்த்தனையை நாடும் நிலையில், எங்கள் விற்பனை நிலையத்தில் மற்றொரு பாதுகாப்பான பரிவர்த்தனை வழியாக இது அமையும்,” என்று ரிலையன்ஸ் டிஜிட்டல் நிர்வாக இயக்குனர் வி.சுப்பிரமணியம் கூறியுள்ளார்.
"இந்திய நுகர்வோருக்கு வாய்ப்புகளின் ஆற்றலை வழங்கும் நிறுவன தொலைநோக்கிற்கு ஏற்ப டிஜிட்டல் ரூபாய் பரிவர்த்தனை ஏற்பு அமைகிறது,” என்றும் அவர் கூறியுள்ளார்.
ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் e7-R டிஜிட்டல் ரூபாயை அறிமுகம் செய்தது. முதல் கட்டத்தில் தில்லி. மும்பை,பெங்களூரு மற்றும் புவனேஸ்வர் ஆகிய நகரங்களில் டிஜிட்டல் ரூபாய் பரிவர்த்தனை ஏற்கப்படுகிறது. ஐசிஐசி வங்கி, கோடக் மகிந்திரா உள்ளிட்ட 8 வங்கிகள் இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் அவற்றின் டிஜிட்டல் வாலெட்கள் மூலம் டிஜிட்டல் ரூபாயில் பரிவர்த்தனை செய்யலாம்.
“நாட்டில் நடைபெற்று வரும் டிஜிட்டல் புரட்சியில் டிஜிட்டல் ரூபாய் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்புவதாக," கோடக் மகிந்திரா தலைவர் மற்றும் டிஜிட்டல் நுட்ப அதிகாரி தீபக் சர்மா கூறியுள்ளார்.
டிஜிட்டல் ரூபாய் பரிவர்த்தனைக்கான உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தை, வங்கிகளுக்கு வழங்க பல்வேறு வங்கிகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக பேமெண்ட் கேட்வே நிறுவனம் அண்மையில் தெரிவித்திருந்தது.

YS தமிழ் Explainer - டிஜிட்டல் ரூபாய் என்றால் என்ன? அறிந்ததும்; அறியாததும்!
Edited by Induja Raghunathan