ஒடிசாவில் ஆர்கானிக் விதைகளை பாதுகாக்கும் ஓய்வுபெற்ற ஆசிரியர்!
1988-ம் ஆண்டு முதல் நடாபர் சாரங்கி இந்தியா முழுவதிலும் இருந்து 700 வகையான நெல் விதைகளை சேகரித்துள்ளார். அத்துடன் Rajendra Desi Chasa Gabesana Kendra என்கிற ஆய்வு மையத்தை அமைத்து விவசாயிகளுக்கு ஆர்கானிக் விவசாயம் குறித்து பயிற்சியளிக்கிறார்.
உலகில் அதிகரித்து வரும் மக்கள்தொகையின் தேவைக்கேற்ப பயிர் உற்பத்தியை மேற்கொள்வது சிக்கல் நிறைந்ததாகவே காணப்படுகிறது. பெரும்பாலான நாடுகள் இதற்குத் தீர்வுகாண முற்படுகிறது. பயிர்கள் வேகமாக வளரவேண்டும். விளைச்சல் அதிகரிக்கவேண்டும். காய்கறிகளும் பழங்களும் எல்லா பருவக்காலங்களிலும் கிடைக்கப்படுவது உறுதிசெய்யப்படவேண்டும். இதற்காக விவசாயிகள் உரங்கள், மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள், ரசாயனங்கள் போன்றவற்றைப் பயன்படுத்துகின்றனர்.
இவை பயிர்கள் மீது எதிர்மறையான தாக்கத்தையே ஏற்படுத்தியுள்ளது. இதனால் எந்தவிதமான பருவநிலையையும் தாக்குப்பிடிக்கும் திறன் கொண்ட ஆர்கானிக் விதைகள் பயன்பாடு படிப்படியாக குறைந்துள்ளது.
ஆர்கானிக் நடைமுறைகள் மூலம் பல்லுயிர்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் 86 வயதான நடாபர் சாரங்கி. இவர் ஆசிரியராக இருந்து ஆர்கானிக் விவசாயியாக மாறியுள்ளார். இவர் ஒடிசா, மேற்குவங்கம், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் இருந்து நெல் விதைகளை சேகரித்து வருகிறார். 1988 முதல் நடாபர் இதுவரை 700 வகையான நெல் விதைகளை சேகரித்துள்ளார்.
இந்த வயதில் தனியாக நாடு முழுவதும் பயணம் மேற்கொள்வது எளிதான செயல் அல்ல. எனவே 2010-ம் ஆண்டு க்ளோபல் க்ரீன்கிராண்ட்ஸ் ஃபண்ட் மூலமாக சிறு தொகையைப் பெற்றுகொண்டார். இதைக் கொண்டு இந்தியா முழுவதும் உள்ள பண்ணைகளில் இருந்து விதைகள் சேகரிப்பதற்காக பயணம் மேற்கொள்ள சில நபர்களை பணியிலமர்த்தியுள்ளார்.
அதற்கடுத்த ஆண்டு நடாபர் விதைகளை சுத்தப்படுத்தி விதை வங்கியில் சேமிக்க உதவுவதற்காக 100 பெண்களை பணியிலமர்த்தியதாக ’க்ரீன் கிராண்ட்ஸ்’ தெரிவிக்கிறது.
ஆர்கானிக் நெல் விதைகளை பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து ’தி இந்து பிசினஸ் லைன்’ உடன் அவர் பகிர்ந்துகொள்கையில்,
”இந்தியா எப்போதும் பஞ்சத்தை எதிர்த்துப் போராடி வருவதால் 1960ம் ஆண்டு நாட்டில் விளைச்சல் அதிகரிக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எனினும் புதிய விவசாய நடைமுறைகள் சிறு விவசாயிகள் மீதும் பலவகையான பயிர்கள் மீதும் மோசமான தாக்கத்தையே ஏற்படுத்தியது. இதனால் ஒற்றைப் பயிரை சாகுபடி செய்வதன் விளைவாகவே அதிக விளைச்சல் காணப்பட்டது. அதாவது ஒவ்வொரு ஆண்டும் வணிக ரீதியாக வளர்க்கப்படும் ஒரே ஒரு பயிர் மட்டுமே வளர்க்கப்பட்டது. வறண்ட பருவகாலத்திலும் பயிர் வளர்ப்பில் நீர்பாசன முறைகள் பயன்படுத்தப்பட்டது. அத்துடன் ரசாயன உரங்கள் மற்றும் ரசாயன பூச்சிக்கொல்லிகளும் அதிகளவில் பயன்படுத்தப்பட்டது,” என்றார்.
ஒடிசாவின் நியாலி கிராமத்தைச் சேர்ந்த நடாபர் தனது ஆர்கானிக் விவசாய நடைமுறைகளால் இந்தியா முழுவதும் உள்ள விவசாய சமூகத்திடையே பிரபலமாகியுள்ளார். ஒடிசாவில் நியாலியில் இவர் அமைத்துள்ள Rajendra Desi Chasa Gabesana Kendra என்கிற ஆய்வு நிறுவனத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான விவசாயிகளுக்கு பயிற்சியளித்துள்ளார்.
இந்த நிறுவனத்தில் நடாபர் தனது நண்பர்களுடன் ஆர்கானிக் சத்துக்கள், உயிரி பூச்சிக்கொல்லிகள், ரசாயன பயன்பாடின்றி வளர்க்கப்பட்ட செடிகள் மூலமாக பெறப்பட்ட ஆர்கானிக் விதைகள் உள்ளிட்டவை குறித்து பயிற்சியளிக்கிறார்.
விவசாயிகளிடையே ஆர்கானிக் விதைகள் பயன்பாட்டை ஊக்குவிக்க நடாபர் ஆர்கானிக் விதைகளை விநியோகிக்கிறார். அதற்கு பதிலாக விவசாயிகள் அறுவடை முடிந்தபிறகு நான்கு கிலோ விதைகளை அவருக்கு வழங்குகின்றனர்.
ஆரம்பத்தில் விவசாயிகளை சம்மதிக்க வைப்பது எளிதான செயலாக இல்லை என்கிறார் நடாபர்.
“ஆரம்பத்தில் விவசாயிகள் தயக்கம் காட்டினர். ஆனால் பாரம்பரிய உள்ளீடுகள் ரசாயனங்கள் கலக்கப்பட்டத்தைக் காட்டிலும் விலைமலிவானது என்பதையும் விளைச்சல் அளவிலும் எந்தவித மாற்றமும் இல்லை என்பதையும் விவசாயிகள் உணர்ந்தபோது அவர்களை சம்மதிக்கவைப்பது எளிதானது. தற்போது எங்களது கிராமம் மட்டுமின்றி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாயிகளும் எங்களுடன் இணைந்துள்ளனர். மஹாராஷ்டிரா உள்ளிட்ட தொலைதூர மாநிலங்களில் உள்ளவர்களும் பாரம்பரிய விதைகளை சேகரிக்க எங்களை அணுகுகின்றனர்,” என்றார்.
விவசாயிகள் மட்டுமின்றி அரசாங்கத்தின் பரம்பரகத் க்ரிஷி விகாஸ் யோஜனா திட்டத்தை செயல்படுத்த நடாபரின் ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து செயல்பட ஒடிசா மாநில அரசாங்கமும் நடாபரை அணுகியது. ஆர்கானிக் விவசாயத்தை ஊக்குவிப்பதே இந்தப் பயிற்சி திட்டத்தின் நோக்கமாகும்.
தற்போது மாடியில் ஆர்கானிக் காய்கறி பண்ணை அமைப்பதை ஊக்குவிக்கும் முயற்சியில் நடாபர் ஈடுபட்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
”நாங்கள் சுமார் இரண்டு லட்சம் க்விண்டால் ஆர்கானிக் நெல்லை எங்கள் பகுதியில் உற்பத்தி செய்கிறோம். மார்கெட்டிங் உதவி வழங்கப்பட்டால் எங்களது விவசாயிகளின் வருவாய் அதிகரிக்கும்,” என தெரிவித்ததாக ’தி இந்து பிசினஸ் லைன்’ குறிப்பிட்டுள்ளது.
கட்டுரை: THINK CHANGE INDIA