3 ஆண்டுகள் பயன்படுத்தக்கூடிய ‘வாழை நார் துணி பேட்கள்’ தயாரிக்கும் ‘சௌக்யம் ரீயூசபிள் பேட்ஸ்’

மறுபயன்பாட்டிற்கு உகந்த சௌக்யம் துணி பேட்கள் வாழை நார் கொண்டு தயாரிக்கப்படுகிறது.
1 CLAP
0

கழிவுகள் இல்லாத, சுழற்சி பொருளாதார முறை உலகம் முழுவதும் பிரபலமாகி வருகிறது. அதாவது ஒரு பொருளின் ஆயுட்காலம் முடிந்த பிறகு, அடுத்த சுழற்சி தயாரிப்பிற்கு இவை மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுகின்றன.

இப்படி ஏராளமானப் பொருட்கள் மறுபயன்பாட்டிற்கு உட்படுத்தப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு கணிசமான அளவுக் குறைகிறது. அதேபோல் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பங்களிக்கும் வகையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த ஏராளமான தயாரிப்புகள் சந்தையில் அறிமுகமாகி வருகின்றன.

அந்த வகையில், சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி வரும் சானிட்டரி பேட்களுக்கு உகந்த மாற்றாக வந்துள்ளது மறுபயன்பாட்டிற்கு உகந்த துணி பேட்கள்.

மாதவிடாய் சமயத்தில் பெண்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது சானிட்டரி நாப்கின். ஆனால் பெண்களுக்கு நிம்மதியளிக்கும் இந்த நாப்கின்களே சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறிவிட்டன.

சானிட்டரி நாப்கின்கள் சுற்றுச்சூழலுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகளைத் தவிர்க்க ஒரே தீர்வு துணி நாப்கின்கள் என்கிறார், 'இந்தியாவின் பேட் வுமன்’ என்றழைக்கப்படும் அஞ்சு பிஸ்ட். இவர் அமிர்தானந்தமாயின் திட்டமான Amrita SeRVe இணை இயக்குநர்.

அஞ்சு பிஸ்ட் மறுபயன்பாட்டிற்கு உகந்த துணி நாப்கின்கள் பயன்பாட்டை ஊக்குவித்து வருகிறார். சுற்றுச்சூழலை பாதுகாப்பது, மலிவு விலையில் சானிட்டரி பேட் வழங்குவது, கிராமப்புறப் பெண்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவது ஆகிய நோக்கங்களை முன்னிறுத்தியே இந்த லாப நோகமற்ற நிறுவனம் செயல்படுகிறது.

“இந்தியாவில் மில்லியன் கணக்கான பெண்கள் சானிட்டரி பேட் பயன்படுத்துகிறார்கள். இதனால் சானிட்டர் பேட் கழிவுகள் நிலங்களில் குவியல் குவியலாகக் கொட்டப்படுகின்றன. இவற்றை எரித்தால் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் காற்றில் கலந்து ஆபத்து ஏற்படுத்தும். இவற்றை மண்ணில் புதைத்தாலும் பலனில்லை. ஏனெனில் இவை மக்குவதற்கு 500 முதல் 800 ஆண்டுகள் வரை ஆகும். நம் அடுத்த தலைமுறைக்கு நாம் விட்டுச்செல்லும் சொத்து இதுதானா?” என கேள்வியெழுப்புகிறார் அஞ்சு பிஸ்ட்.

’சௌக்யம்’ தயாரிப்பு மற்றும் அங்கீகாரம்

சௌக்யம் ரீயூசபிள் பேட்ஸ் (Saukhyam Reusbale Pads) மறுபயன்பாட்டிற்கு உகந்த துணி நாப்கின் தயாரிக்கிறது. இந்தத் தயாரிப்பை அஞ்சு பிஸ்ட் இணைந்து உருவாக்கியுள்ளார்.

சௌக்யம் ரீயூசபிள் பேட்ஸ் தயாரிப்பை ’மிகவும் புதுமையான தயாரிப்பு’ என ஹைதராபாத் தேசிய ஊரக வளர்ச்சி நிறுவனம் அங்கீகரித்துள்ளது. 2018ம் ஆண்டு போலாந்து நாட்டில் நடைபெற்ற ஐ.நா பருவநிலை மாற்றம் கருத்தரங்களில் இந்த வகை பேட் பாராட்டைப் பெற்றது.

சௌக்யம் பேட்ஸ் – சானிட்டரி பேட் - ஒப்பீடு

சௌக்யம் பேட்ஸ் உலகிலேயே முதல் முறையாக வாழை நார் கொண்டு தயாரிக்கப்படுகிறது. விவசாயக் கழிவுகளில் இருந்து இந்த மூலப்பொருள் கிடைக்கிறது. இது இயற்கையாகவே உறிஞ்சும் தன்மை கொண்டது. இதன் எடையைக் காட்டிலும் ஆறு மடங்கு அதிக எடை கொண்ட திரவத்தை உறிஞ்சும் சக்தி கொண்டது. இந்தியாவில் வாழை உற்பத்தி அதிகம் என்பதால் இந்த மூலப்பொருள் குறைந்த விலையில் எளிதாகக் கிடைக்கும்.

ஆனால் டிஸ்போசபிள் பேட்களில் உறிஞ்சுவதற்காக செல்லுலோஸ் ஃபைபர் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஃபைபர் கிடைப்பதற்கு ஏராளமான மரங்கள் வெட்டப்படவேண்டும். இந்தியாவில் டிஸ்போசபிள் பேட் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் செல்லுலோஸ் ஃபைபர் முழுவதுமாக இறக்குமதி செய்யப்படுகின்றன.

மறுபயன்பாட்டிற்கு உகந்த துணி பேட்

”பயன்பாட்டிற்குப் பிறகு அப்புறப்படுத்தக்கூடிய பேட்களில் ரசாயனங்கள் கலக்கப்பட்டிருக்கும். இதனால் பெண்களின் உடல்நலன் பாதிக்கப்படுகிறது. இதில் உறிஞ்சும் தன்மைக்காகப் பயன்படுத்தப்படும் செல்லுலோஸ் ஃபைபர் வெண்மை நிறத்தில் இருக்கவேண்டும் என்பதற்காக ப்ளீச் செய்யப்படுகிறது. இது சருமத்திற்கு தீங்கு ஏற்படுத்துகிறது. தொடர்ந்து இவற்றைப் பயன்படுத்துவது ஆபத்தானது,” என்கிறார் அமிர்தா மருத்துவமனை மருத்துவர் டாக்டர் சிரீஷா.

சௌக்யம் ரீயூசபிள் பேட் ஒவ்வொன்றையும் மூன்று ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம். ஐந்து பேட் அடங்கிய பாக்கெட் 330 ரூபாய் மட்டுமே. ஒரு பெண் வழக்கமான சானிட்டரி பேட்களுக்காக ஒரு மாதத்திற்கு சராசரியாக 50-100 ரூபாய் செலவிடவேண்டியுள்ள நிலையில் பாதுகாப்பான துணி பேட்களின் விலை மிகவும் குறைவு.

பெண்கள் மறுபயன்பாட்டிற்கு உகந்த துணி பேட்களைப் பயன்படுத்துவதால் உடல்நலம் சார்ந்த சிக்கல்கள் தவிர்க்கப்படுவதுடன் செலவும் குறைகிறது.

இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் 2,00,000 பெண்கள் மறுபயன்பாட்டிற்கு உகந்த சௌக்யம் பேட் பயன்பாட்டிற்கு மாறியுள்ளனர். இதனால் டிஸ்போசபிள் சானிட்டரி பேட் எரிக்கப்படுவதால் ஏற்படும் காற்று மாசுபாடும் மக்காத கழிவுகளின் அளவும் கணிசமான அளவுக் குறைந்துள்ளது.

Latest

Updates from around the world