மழைநீர் வடிகால்களை சுத்தம் செய்யும் ரோபோக்கள் - சென்னை மாநகராட்சி ஆலந்தூரில் அறிமுகம்!
ரோபோக்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையில், சென்னையில் மழைநீர் வடிகால் அமைப்புகளை மேலாண்மை செய்யும் புதிய திட்டத்தின், முதல்கட்டத்தை ஆலந்தூரில் தொடங்கியுள்ளது சென்னை கார்ப்பரேஷன்.
கழிவுகளை மனிதர்களே கைகளால் அள்ளும் முறையை ஒழிக்கும் திட்டத்தின் முதல் கட்டமாக, மழைநீர் வடிகால்களை சுத்தம் செய்யும் வகையில், முழுமையாக நீரில் மூழ்கக்கூடிய ரோபோக்களைப் பயன்படுத்தும் திட்டத்தை ஆலந்தூரில் தொடங்கியுள்ளது கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் (GCC).
கடந்த வாரம் ரிப்பன் மாளிகையில், MSME துறையின் கீழ், Start Up TN ஆல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தொடக்க நிகழ்வில் இந்த திட்டம் குறித்து அறிவிக்கப்பட்டது. இந்த நிகழ்வானது 'சோலினஸ் இண்ட்கிரிட்டி பிரைவேட் லிமிடெட்' (
Integrity Private Ltd) உடன் இணைந்து நடட்டப்பட்டது.இந்நிறுவனம் வடிகால் ஆய்வுகள் மற்றும் சுத்தம் செய்ய பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட நான்கு வகையான தானியங்கி ரோபோக்களை இந்த நிகழ்வில் காட்சிப்படுத்தியது. அவை 90மிமீ முதல் 2,000மிமீ சுற்றளவு கொண்ட துளைகளிலும் உட்நுழையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
கூடவே வடிகால்களில் அடைத்துள்ள கசடு மற்றும் குப்பை அடுக்குகளை துல்லியமாக மதிப்பிடும் வகையில், இந்த ரோபோக்களில் பாண்டோகிராஃப் 720p கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
வடிகால்களின் இடுக்குகளில் நுழைவதற்கு ஏதுவாக, 'கிராலர்ஸ்' (crawlers) எனப்படும் சின்ன வகையான ரோபோக்களைப் பயன்படுத்த சென்னை கார்ப்பரேஷன் திட்டமிட்டுள்ளது.
இது குறித்து சோலினாஸின் பிரதிநிதியான பிரபாகரன் கூறுகையில்,
“இந்த கிராலர்கள் 90 மிமீ குறுகிய வடிகால்களில் செல்லவும், வண்டல் மண்ணின் ஆழத்தை ஆய்வு செய்யவும் பயனுள்ளதாக இருக்கும். நாங்கள் இதேபோன்று வடிகால்களுக்கு வெளியே நிலைநிறுத்தப்பட்ட சக்கர இயந்திரங்களைப் பயன்படுத்தி வண்டல் மண்ணை அகற்றும் வகையிலான ரோபோக்களையும் நாங்கள் உருவாக்கி வருகிறோம்," எனத் தெரிவித்துள்ளார்.
எண்டோ 600 என்ற பெயரிடப்பட்ட 'நீர்-சாக்கடை ரோபோ'வை பரிசோதிக்கவும் சென்னை கார்ப்பரேஷன் திட்டமிட்டுள்ளது. இந்த ரோபோக்களானது தடித்த கால்வாய் கசடுகளை கடக்கும் வகையிலும், ஒரு செயல்பாட்டில் 25 கிலோ வரையிலான வண்டல் மண்ணை நீர்வழிகளில் இருந்து அகற்றும் திறன் கொண்டவை.
பழைய வடிகால்களால் ஏற்படும் சவால்கள் குறித்து ஜி.சி.சி துணை ஆணையர் ஜி.சமீரன் கூறுகையில்,
“20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வடிகால்களில் திறப்பு இல்லாததால், தூர்வாருவது கடினமாகிறது. சில சமயங்களில் இந்த வாய்க்கால்களை உடைத்து புனரமைக்க வேண்டி இருக்கிறது. புதிதாக கட்டப்பட்ட நவீன வடிகால்களில், ஒவ்வொரு 2.5 மீட்டருக்கும் ஒரு திறப்பு அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அதன் பராமரிப்பு பணிகள் எளிதாகியுள்ளது," என்றார்.
இந்த நீரில் மூழ்கக்கூடிய ரோபோக்கள், பழைய வடிகால்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே, இந்த தொழில்நுட்பத்தை முதல்கட்டமாக ஆலந்தூரில் சோதனை செய்ய திட்டமிட்டுள்ளோம், எனத் தெரிவித்துள்ளார்.
வரைபடம் உருவாக்குதல்
இந்த ரோபோட், சுத்தம் செய்யும் திட்டத்தை செயல்படுத்துவதோடு, நகரின் வடிகால்களை சரியாக அமைப்பதற்கும், முன்பு காணாமல் போன இணைப்புகள் மற்றும் தவறான சாய்வுகளை அடையாளம் காணவும் சரியான வரைபடத்தை உருவாக்குகிறது சென்னை கார்ப்பரேஷன்.
இந்தப் பணிக்கு 'பேர்ட்ஸ்கேல்' (Birdscale) நிறுவனத்துடன் இணைந்துள்ள சென்னை கார்ப்பரேஷன், ட்ரோன்களைப் பயன்படுத்தி சாய்வு சிக்கல்களைக் கண்டறிந்து, வடிகால்களின் நீர் ஓட்ட வடிவங்களைத் திட்டமிடுவதற்கு ஒரு சோதனை ஆய்வு செய்ய ஒப்புதல் அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து, நீரியல் ஆய்வின் மூலம், சுமார் 600 வெள்ளம் பாதித்த பகுதிகளில் நீர் தேங்குவதைச் சமாளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தமிழக அரசின் முன்முயற்சியான இந்த ஸ்டார்ட்அப் நிகழ்வு, சிறிய நிறுவனங்களுக்கு திட்ட வாய்ப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதேபோன்ற ஒத்துழைப்பு சமீபத்தில் கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு மாநகராட்சி கழிப்பறைகளின் நேரடி கண்காணிப்பை மேம்படுத்த உதவியது என்பது குறிப்பிடத்தக்கது.
ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சுமார் 14 நிறுவனங்கள் தங்களது புதுமையான மாடல்களை காட்சிப்படுத்தினர். அதில், மற்றொரு நிறுவனமானது, வடசென்னையில் சுகாதாரம் மற்றும் தூய்மை குறித்து ஆய்வு செய்வதற்காக நேரடி-மேப்பிங் திட்டத்தை பைலட் செய்ய அனுமதி பெற்றுள்ளது.