623 கி.மீ. வேகம்; சோதனை ஓட்டத்தில் 3 சாதனைகள்: ரோல்ஸ் ராய்ஸின் அதிவேக எலக்ட்ரிக் விமானம்!

’உலகின் அதிவேக மின்சார வாகனம்' என்ற சாதனையை படைத்த ரோல்ஸ் ராய்ஸ்!
1 CLAP
0

உலகின் மதிப்புமிக்க, அதிக ஆடம்பரம் கொண்ட கார் ரோல்ஸ் ராய்ஸ். ஆட்டோமொபைல் துறையில் தனித்தன்மையுடன் இயங்கும் ரோல்ஸ் ராய்ஸ் பல்வேறு தயாரிப்புகளை வெளியிட்டு வருகிறது. குறிப்பாக, மின்சார வாகனத் தயாரிப்புகளை வெளியிட்டு வருகிறது.

இதன் சமீபத்திய தயாரிப்பு எலக்ட்ரிக் விமானம். மணிக்கு 623 கி.மீ. வேகத்தில் பறக்கக்கூடிய எலெக்ட்ரிக் விமானத்தை வடிவமைத்து இயக்கியுள்ளது. 'ஸ்பிரிட் ஆஃப் இன்னோவேஷன்' எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த விமானம், 'உலகின் அதிவேக மின்சார வாகனம்' என்ற பெருமையை பெற்றுள்ளது.

சில நாட்கள் முன்பு நடந்த சோதனை ஓட்டத்தில் இந்த விமானம் மணிக்கு 623 கிலோமீட்டர் (387.4 மைல்) என்ற அதிகபட்ச வேகத்தை எட்டி உலகின் அதிவேக மின்சார வாகனம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. Accelerating the Electrification of Flight என்ற திட்டத்தின் கீழ் இந்த விமானத்தை வடிவமைத்துள்ள ரோல்ஸ் ராய்ஸ் தனது சோதனை ஓட்டத்தின் மூலம் மூன்று சாதனைகளை படைத்துள்ளது.

202 நொடிகளில் 3000 மீட்டர் உயரத்தை விரைவாக எட்டியது, 3 கி.மீ-க்கு மேல் மணிக்கு 559.9 கி.மீ. வேகத்தில் சென்றது, 15 கி.மீ-க்கு மேல் மணிக்கு 532.1 கி.மீ. வேகத்தில் சென்றது தான் அந்த மூன்று சாதனைகள்.

இந்த எலெக்ட்ரிக் விமானம் பறக்கும் போதும் ஏற்படும் கார்பன் வெளியேற்றம் பெருமளவில் குறையும் என்று ரோல்ஸ் ராய்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ரோல்ஸ் - ராய்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி, வாரன் ஈஸ்ட் இது தொடர்பாக பேசுகையில்,

“காலநிலை மாற்ற மாநாட்டில் சொல்லப்பட்ட நடவடிக்கையின் அவசியத்தின் மீது உலகம் கவனம் செலுத்துவதைத் தொடர்ந்து, இந்த விமானம் அந்த நடவடிக்கையை செயல்படுத்த வழிவகுக்கும். இது 'ஜெட் பூஜ்ஜியத்தை' உண்மையாக்க உதவும் மற்றொரு மைல்கல். காற்று, நிலம் மற்றும் கடல் வழியாக போக்குவரத்தை டிகார்பனைஸ் செய்ய சமுதாயத்திற்குத் தேவையான தொழில்நுட்ப முன்னேற்றங்களை வழங்குவதற்கான எங்கள் லட்சியங்களை செயல்படுத்தும் நோக்கில் இந்த தொழில்நுட்பம் உதவுகிறது," என்று கூறியுள்ளார்.

தொகுப்பு: மலையரசு

Latest

Updates from around the world