ஆஸ்கர் விருது பரிந்துரைப் பட்டியலில் RRR, The Elephant Whispers மற்றும் All That Breathes- முழு விவரம் இதோ!

By kanimozhi
January 25, 2023, Updated on : Wed Jan 25 2023 09:52:52 GMT+0000
ஆஸ்கர் விருது பரிந்துரைப் பட்டியலில் RRR, The Elephant Whispers மற்றும் All That Breathes- முழு விவரம் இதோ!
2023ம் ஆண்டு சிறந்த பாடலுக்கான பட்டியலில் ‘நாட்டு நாட்டு’ பாடல் இடம் பெற்றுள்ளது.
  • +0
    Clap Icon
Share on
close
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

2023ம் ஆண்டு சிறந்த பாடலுக்கான ஆல்கர் விருதுப் பட்டியலில் ‘நாட்டு நாட்டு...’ பாடல் இடம் பெற்றுள்ளது.


ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட இந்தியர்கள் தாங்கள் பணியாற்றிய ஹாலிவுட் படங்களுக்காக ஆஸ்கர் விருது வென்றுள்ள போதும், நேரடி இந்திய படங்களுக்கு ஆஸ்கர் விருது பெற வேண்டும் என்ற கனவு இன்னும் எட்டாகனியாகவே உள்ளது.


இந்நிலையில், 2023ம் ஆண்டிற்கான ஆஸ்கர் பரிந்துரை பட்டியலில் இயக்குநர் ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர், செல்லோ ஷோ (Chellow Show), ஆல் தட் ப்ரீத்ஸ், தி எலிபேண்ட் விஸ்பரஸ் உள்ளிட்ட படங்கள் இடம் பெற்றுள்ளன.


அத்துடன் சிறந்த ஆவண படத்திற்கான பட்டியலில் ‘ஆல் தட் ப்ரீத்ஸ்’ படமும், சிறந்த ஆவண குறும்படத்திற்கான பிரிவில் ‘தி எலிபேண்ட் விஸ்பரஸ்’ படமும் இடம் பெற்றுள்ளது.

ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியலில் RRR:

ஆஸ்கர் விருதுக்கு அடுத்தபடியாக திரையுலகினரால் மிகவும் உயரிய விருதாக கருதப்படும் ’கோல்டன் குளோப்” விருதை ஆர் ஆர் ஆர்’ (RRR) படம் பெற்றிருந்தது. தெலுங்கின் முன்னணி இயக்குநரான ராஜமெளலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்த படத்திற்கு கீரவாணி இசையமைத்திருந்தார்.


இந்த படத்தில் இடம் பெற்றிருந்த ‘நாட்டு நாட்டு’ அனைத்து மொழிகளிலும் பட்டி, தொட்டி எல்லாம் ஹிட்டான நிலையில், ஒரிஜினல் பாடல் பிரிவில் கோல்டன் குளோப் விருதை வென்றது. தற்போது இப்படத்திற்கு மற்றொரு அங்கீகாரமாக 95வது ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியலில், சிறந்த ஒரிஜினல் பாடலுக்காக “நாட்டு நாட்டு” பாடல் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


படத்தின் இரு கதாநாயகர்களில் ஒருவரான ஜூனியர் என்டிஆர் தனது ட்விட்டர் பக்கத்தில் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

"எம்.எம். கீரவாணி காரு மற்றும் சந்திரபோஸ் அவர்கள் மற்றொரு தகுதியான மற்றும் மகத்தான சாதனையை அடைய வாழ்த்துக்கள்... இந்த பாடல் என் இதயத்தில் என்றென்றும் ஒரு சிறப்பான இடத்தைப் பிடித்திருக்கும்,” எனக்குறிப்பிட்டுள்ளார்.

அல்லூரி சீதாராம ராஜுவாக நடித்த ராம் சரண் தனது ட்விட்டரில்,

"என்ன அற்புதமான செய்தி! "நாட்டு நாட்டு" ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருப்பது உண்மையான அங்கீகாரம். எங்களுக்கும் இந்தியாவுக்கும் மற்றொரு பெருமையான தருணம். ஒட்டுமொத்த குழுவுக்கும் வாழ்த்துக்கள்,” எனப் பதிவிட்டுள்ளார்.

இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி 95வது ஆஸ்கார் விருதுகள் பட்டியலில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டது குறித்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ளார்.

"முக்கியக் காரணம் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரணின் நடனமும், அதன் பாணியும் தான். உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களின் இதயங்களில் நடனமாடியுள்ளனர். நான் ஆஸ்கார் விருதை கனவில் கூட நினைத்ததில்லை. பெரும் கனவு! ​​இதை சாத்தியமாக்கியது நாட்டு நாட்டு மற்றும் RRR பட ரசிகர்கள் தான்” என நீண்ட பதிவை வெளியிட்டுள்ளார்.

தி எலிபேண்ட் விஸ்பரஸ் (The Elephant Whispers)

சிறந்த ஆவண குறும்பட பிரிவில் ‘தி எலிபேண்ட் விஸ்பரஸ்’ திரைப்படம் இடம் பெற்றுள்ளது. கார்த்திகி கோன்சால்வ்ஸ் தனது 5 வருட கடின உழைப்பை செலுத்தி உயிர் கொடுத்த “தி எலிபேண்ட் விஸ்பரஸ்” திரைப்படம் ஆஸ்கர் விருதுகள் பரிந்துரை பட்டியலில் இடம் பிடித்துள்ள இந்திய ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.


கேரளா - தமிழ்நாடு எல்லையில் அமைந்துள்ள முதுமலை தெப்படிக்காடு யானைகள் முகாமிற்கு வரும் தாயை இழந்த இரண்டு குட்டியானைகள் கொண்டு வரப்படுகின்றன. அங்கு பணியாற்றும் பொம்மன், பெல்லி என்ற வயதான தம்பதி அந்த இரண்டு யானை குட்டிகளுக்கும் ரகு, அம்மு என பெயர் வைத்து ஒட்டுமொத்த அன்பையும் கொட்டி வளர்க்கின்றனர்.


யானைகள் வளர்ந்ததும் காட்டிற்குள் விட வேண்டும் என்பது விதி, ஆனால் ரகுவும், அம்முவும் காட்டிற்குள் செல்ல மறக்கின்றன, மறுபுறம் பிள்ளையைப் போல வளர்ந்த யானை குட்டிகளை பிரிய வயதான பொம்மனும், பெல்லியும் மனமின்றி தவிக்கின்றனர்.

Elephant

யானைக்கும், மனிதர்களுக்கும் இடையே அன்றாடம் ஏற்படும் மோதல்கள் குறித்து செய்திகள் வந்துகொண்டிருக்கும் இந்த காலக்கட்டத்தில், மனிதர்களுக்கும், யானைகளுக்கும் இடையே அன்பை மட்டுமே போதித்த “தி எலிபேண்ட் விஸ்பரஸ்” திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

‘யானை’ எனும் பேருயிரை குழந்தையாக பாவித்து பார்த்துக் கொள்ளும் பெல்லி அம்மாவின் நடிப்பும், பழங்குடியின மக்களின் இயல்பான மொழி, அழகான காட்சி அமைப்பு, இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் என பல விஷயங்கள் இந்த படத்தில் பேசு பொருளாக அமைந்தது. இத்திரைப்படம் ஆஸ்கர் விருதை வெல்ல தகுதியானது என சினிமா விமர்சகர்கள் கருத்து தெரிவித்திருந்த நிலையில், தற்போது பரிந்துரை பட்டியலில் இடம் பெற்றுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இத்திரைப்படத்துடன் “ஹாலோவுட்”, “ஹவ் டு யூ மேசர் ஏ இயர்”, “மார்த்தா மிட்செல் எஃபக்ட்”, “ஸ்டேஞ்சர் அட் தி கேட்” ஆகிய 4 படங்களும் சிறந்த ஆவண குறும்படங்களுக்கான ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியலில் இடம் பிடித்துள்ளன.

ஆல் தட் ப்ரீத்ஸ் (All That Breathes):

சிறந்த ஆவணப்படத்திற்கான பரிந்துரை பட்டியலில் ‘ஆல் தட் ப்ரீத்ஸ்’ என்ற ஆவணப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தி எலிபேண்ட் விஸ்பரஸ் திரைப்படம் யானைக்கும் அதனை வளர்ந்த மனிதர்களுக்கும் இடையிலான பாசப்போராட்டத்தை மையமாக கொண்டதைப் போல், ‘ஆல் தட் ப்ரீத்ஸ்’ பருந்திற்கும் அதனை வளர்த்த இரண்டு சகோதரர்களுக்கும் இடையிலான நேசத்தை எடுத்துரைக்கிறது. டெல்லியில் நிலவும் சுற்றுச்சூழல் மாசையும், அங்கு வசிக்கும் மக்களின் கொடூர முகங்களையும் தோலுரித்து காட்டிய இத்திரைப்படத்தை சௌனாக் சென் இயக்கி இருந்தார்.

oscar

இந்த ஆவணப்படம் கடந்த ஆண்டு பிரான்சில் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த ஆவணப் படத்திற்கான கோல்டன் ஐ (Golden Eye) விருதை தட்டிச்சென்றது குறிப்பிடத்தக்கது.