ஐபிஓ மூலம் 1 பில்லியன் டாலர் திரட்டும் முனைப்பில் Freshworks

ஒரு பங்கிற்கு 32 டாலர் வரை சலுகை விலை கொடுக்க முடிவு!
0 CLAPS
0

சாஸ் யூனிகார்ன் Freshworks நிறுவனம் ஐபிஓ எனப்படும் பொதுப்பங்கு வெளியீடு மூலம் அமெரிக்க பங்குச் சந்தையில் 1 பில்லியன் டாலர்களை திரட்ட திட்டமிட்டுள்ளது.

ஃப்ரெஷ்வொர்க்ஸ் இன்க், கடந்த மாதம் அமெரிக்கப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தில் (SEC) அதன் பொதுப்பங்கு வெளியீட்டுக்கு தாக்கல் செய்தது. இப்போது அதன் ஒப்புதல் கிடைக்க, அதனொரு பகுதியாக 912 மில்லியன் டாலர் வரை திரட்ட திட்டமிட்டுள்ளது.

ஃப்ரெஷ்வொர்க்ஸ் நிறுவனம் 28.5 மில்லியன் வகுப்பு A பொதுவான பங்குகளை ஒரு பங்கிற்கு 28 டாலர் முதல் 32 டாலர் வரை சலுகை விலையில் வழங்க இருப்பதாக அது சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதன் மூலம், ஃப்ரெஷ்வொர்க்ஸ் அதன் பொதுப் பட்டியலின் ஒரு பகுதியாக, 798 மில்லியன் முதல் 912 மில்லியன் டாலர்கள் வரை திரட்டப் பார்க்கிறது. இந்த அளவு நிதி திரட்டப்பட்டால், இந்தியாவிலிருந்து வந்த நிறுவனங்களில், ஃப்ரெஷ்வொர்க்ஸ் நிறுவனத்தை மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாக மாற்றும்.

முன்னதாக, ஏபிஐ டெவலப்மென்ட் ப்ளாட்பார்ம் நிறுவனமான போஸ்ட்மேன், சமீபத்தில் 5.6 பில்லியன் டாலர் நிறுவனம் என்றும், மொபைல் அப்ளிகேஷன் டெஸ்ட் பிளாட்ஃபார்ம் நிறுவனமான பிரவுசர்ஸ்டாக் 4 பில்லியன் டாலர் நிறுவனம் என்றும் மதிப்பிடப்பட்டது.

இதேபோல், ஃப்ரெஷ்வொர்க்ஸ் கடைசியாக நவம்பர் 2019ல் 3.5 பில்லியன் டாலர் நிறுவனமாக மதிப்பிடப்பட்டது.

”எங்களிடம் இரண்டு வகை அங்கீகரிக்கப்பட்ட பொது பங்குகள் உள்ளன: வகுப்பு A பொது பங்கு மற்றும் வகுப்பு B பொது பங்கு. வகுப்பு A பொதுப் பங்கு மற்றும் வகுப்பு B பொதுப் பங்கு வைத்திருப்பவர்களின் உரிமைகள் ஒரே மாதிரியானவை. ஆரம்பப் பங்களிப்பு விலை ஒரு பங்கிற்கு 28 டாலர் முதல் 32 டாலர் வரை இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்," என்று ஃப்ரெஷ்வொர்க்ஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆரம்பித்து 11 ஆண்டுகள் ஆன மென்பொருள் சேவை ஸ்டார்ட்அப் நிறுவனமான இது, தனது ஐபிஓ-க்கு புத்தக மேலாளர்களாக மோர்கன் ஸ்டான்லி, ஜே.பி. மோர்கன், போஃபா செக்யூரிட்டிஸ், ஜெஃப்ரீஸ் மற்றும் பார்க்லேஸ் போன்றோர்களை நியமித்துள்ளது.

ஃப்ரெஷ்வொர்க்ஸ் ஐபிஓ மூலம் கிடைக்கும் வருமானத்தை பொது நிறுவன நோக்கங்களுக்காகப் பயன்படுத்த முனைவதாக அறிவித்தது. இதில் செயல்பாட்டு மூலதனத் தேவைகள், செயல்பாட்டுச் செலவுகள் மற்றும் மூலதனச் செலவுகளை பூர்த்தி செய்தல் போன்றவை அடங்கும். மேலும், தனது நிகர வருமானத்தின் ஒரு பகுதியை கையகப்படுத்துதல் அல்லது நிரப்பு வணிகங்கள், தயாரிப்புகள், சேவைகள் அல்லது தொழில்நுட்ப முதலீடுகளுக்கு பயன்படுத்த விரும்புகிறது ஃப்ரெஷ்வொர்க்ஸ் நிறுவனம்.

ஃப்ரெஷ்வொர்க்ஸின் நிறுவனர் கிரிஷ் மாத்ருபூதம் ஐபிஓ தொடர்பாக ஒரு கடிதத்தில்,

”Freshworks ஒரு சிறப்பு நிறுவனம். நாங்கள் ஆரம்பத்திலிருந்தே வழக்கத்திற்கு மாறானவர்களாக இருந்தோம். சந்தையில் ஒரு தனித்துவமான அணுகுமுறையை நாங்கள் கடைப்பிடித்து வருகிறோம். நாங்கள் ஒரு 'புதிய' அணுகுமுறையை வழங்கினோம். எங்கள் நிறுவனத்தின் மந்திரம் 'மகிழ்ச்சியான ஊழியர்கள் மகிழ்ச்சியான வாடிக்கையாளர்களை உருவாக்குதல்' என்பதுதான். உண்மையில், எங்கள் பணியை நாங்கள் செய்தோம்," என்று பெருமிதம் கொள்கிறார்.

இதனிடையே, ஃப்ரெஷ்வொர்க்ஸ் நிறுவனம் Accel, CapitalG, Sequoia India மற்றும் Tiger Global Management போன்றவற்றிலிருந்து இதுவரை 327 மில்லியன் டாலருக்கும் அதிகமான நிதி திரட்டியுள்ளது.

மேலும், இந்நிறுவனத்துக்கு 120 நாடுகளில் 52,500க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர். இதன் வருவாய் 2019 மற்றும் 2020க்கு இடையில் சுமார் 45% அதிகரித்துள்ளது. அதன்,

நிதி செயல்திறன் பற்றிய புதுப்பிப்பை வழங்கி, ஜூன் 30, 2021ல் முடிவடைந்த ஆறு மாதங்களுக்கான மொத்த வருவாய், 168.9 மில்லியன் டாலராக இருந்தது. இது முந்தைய ஆண்டு காலத்தில் 110.5 மில்லியன் டாலருடன் ஒப்பிடும்போது 53% அதிகரித்துள்ளது.

2020 ஆம் ஆண்டிற்கான மொத்த வருவாய் 249.7 மில்லியன் டாலராக இருந்தது. இது முந்தைய வருடத்தில் 172.4 மில்லியன் டாலருடன் ஒப்பிடும்போது 45 சதவீதம் அதிகரித்துள்ளது.