வாழ்க்கை, மன அழுத்தம், இழப்பு: சத்குரு கூறும் எளிய உண்மைகள்!

மனித அனுபவங்கள் உங்களுக்குள் இருந்து தான் உருவாக முடியும். ஏகாந்தமாக, அமைதியாக இருப்பது என்றால் என்னவென்று நாம் அறிய வேண்டும் என்றால், நாம் உள்ளுக்குள் பார்க்க வேண்டும், எனும் எளிய உண்மையை உணர்த்துகிறார் சத்குரு.

வாழ்க்கை, மன அழுத்தம், இழப்பு: சத்குரு கூறும் எளிய உண்மைகள்!

Wednesday May 22, 2019,

3 min Read

இன்றைய வேகமான ஸ்டார்ட் அப் உலகில், தொழில் முனைவோர்கள், முதலீட்டாளர்களாகிய நாம் மிகவும் பிஸியாக இருப்பதை ஒப்புக்கொண்டாக வேண்டும். ஒவ்வொரு நாளும் பரபரப்பாக இருக்கிறது. நம்முடைய தொழில்முறை இலக்குகளை அடைய நாம் தொடர்ந்து நெருக்கடிக்கு உள்ளாகிறோம். எனவே, பல நேரங்களில் மன அழுத்தம் நம்முடைய மனநிலையாக அமைகிறது.

இந்த பின்னணியில், அண்மையில் நடைபெற்ற ஹார்வர்டு இந்தியா மாநாட்டில், புகழ் பெற்ற சத்குருவை (ஜக்கி வாசுதேவ்) சந்திக்க வாய்ப்பு கிடைத்த போது என் மனதில் இருந்த கேள்வியை அவரிடம் கேட்டேன்:

“சத்குரு, எல்லோரும் வெற்றி, பணம், புகழ் பின்னே ஓடிக்கொண்டிருக்கின்றனர். நம்மில் பலரும் வெற்றிகரமானவர்களாக விரும்புகிறோம். இருந்தும் நம்முடைய சாதனைகளை எல்லாம் மீறி நாம் நம் மீதும், நம் பயணம் மீதும் அதிருப்தி கொள்கிறோம். மாறிவரும் அளவுகோள்கள் மற்றும் வெற்றிக்கான இலக்குகளுக்கு மத்தியில் நாம் எப்படி சமநிலை மற்றும் மன அமைதியை பெறுவது?” 

இந்த கேள்விக்கு சத்குரு தனக்கே உரிய பாணியில் பதில் அளித்தார்.  

“இந்தியாவில் நாம் மாம்பழங்கள் பற்றி பேசாமல் இருக்க முடியாது. இப்போது மக்கள், மாம்பழக் கடையில் மட்டும் தான் கிடைப்பதாக நினைத்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால், எங்கள் காலத்தில் மாம்பழங்களை மரத்தில் இருந்து பறித்து உண்டோம். இப்போது நீங்கள் மாமரம் அருகே சென்று, அதன் வேர்களில் மாம்பழம் இருப்பதாக நினைத்துக்கொண்டு அங்கே தோண்டத்துவங்கினால், உங்களுக்கு மாம்பழம் கிடைக்குமா?” 

“இல்லை,” என பதில் அளித்தேன்.

“இதற்குக் காரணம், மாம்பழங்கள் அவற்றை தேடும் திசையில் இல்லாமல், அதற்கு எதிர் திசையில் இருக்கின்றன...” என்று அவர் பதில் அளித்தார்.

இதே போல, மனித அனுபவங்கள், சோகம், மகிழ்ச்சி, உற்சாகம், அமைதி அல்லது போர் போன்ற எந்த அனுபவமாக இருந்தாலும், அவை உங்களிடம் தான் உண்டாகின்றன. உங்கள் மனித அனுபவம் நீங்கள் எதைத் தேடுகிறீர்கள் என்பதை பொருத்து அமைவது அல்ல, உங்களுக்குள் நீங்கள் எதைத் தேடுகிறீர்களோ அதன் அடிப்படையில் அமையும்.

எல்லாம் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கின்றன எனில், ஏன் மகிழ்ச்சியை வெளியே தேட வேண்டும் எனும் கேள்வி இதிலிருந்து எழலாம். ஏன் உலகை மாற்றி அமைக்க முயற்சிக்க வேண்டும்? உங்கள் மனநிலையை தீர்மானிக்க, வெளிப்புற சூழல் மற்றும் நிலைகளை மாற்ற முயற்சிப்பது ஏன்? ஏன் மற்றவர்கள் மீது பெரிய எதிர்பார்ப்புகளை கொண்டிருக்க வேண்டும்?

ஏனெனில், சத்குரு எளிதாக சுட்டிக்காட்டுவது போல, உண்மை என்பது, மனித அனுபவங்கள் நமக்குள் இருந்து மட்டுமே உருவாகக் கூடியதாக இருக்கின்றன. ஏகாந்தமான, அமைதியான அனுபவங்களை பெற வேண்டும் எனில் நாம் நமக்குள் தான் பார்க்க வேண்டும்.  

உங்கள் எஜமானராக இருங்கள்

உங்களுக்குள் பார்க்க முடியும் என்றால், உங்கள் உணர்வுகள் மற்றும் எண்ணங்களை கட்டுப்படுத்தக்கூடிய கலை கைவசமாகும் என்றால், மகிழ்சியை கண்டடைவது கடினமானது அல்ல. உங்களுக்கு எதிராக உணர்வுகளும், எண்ணங்களும் அமையும் போது தான் பிரச்சனை உண்டாகிறது. அப்போது, உங்களை மாற்றிக்கொள்வது பதில், மொத்த உலகையும் மாற்றி அமைக்க முயல்கிறீர்கள். இது ஒரு போதும் நடக்கப்போவதில்லை.  

உங்கள் வாழ்க்கையில் உள்ள நெருக்கமானாவர்கள் கூட, கணவன், மனைவி, பெற்றோர், காதலர்கள், சகோதரர்கள் போன்றவர்கள் கூட உங்களுடன் 100 சதவீதம் ஒத்துப்போவதில்லை அல்லது நீங்கள் பார்ப்பது போல பார்ப்பது இல்லை. ஆனால் இது 51 சதவீதமாக இருந்தால் கூட, உறவில் கட்டுப்பாடு உங்கள் கையில் இருக்கும்.

இருப்பினும், உங்களைப்பொருத்தவரை, உங்களுடன், நீங்கள் 100 சதவீத ஒத்திசைவை பெற்றிருக்க வேண்டும். ஏனெனில் நீங்கள் மட்டும் தான் உங்கள் சிந்தனைகளை பயிற்றுவித்து, உங்கள் மனநிலையை தீர்மானிக்க முடியும். வெளிப்படையாக சொல்வது என்றால், நம்முடைய எண்ணங்கள் உணர்வுகள், மனநிலையை நம்மால் பயிற்றுவிக்க முடியவில்லை எனில் எப்படி நாம் வெளிப்புற உலகை மாற்றி அமைக்க முடியும்?

நம்மால் எப்படி நூற்றுக்கணக்கானோர் அல்லது ஆயிரக்கணக்கானோர் மீது தாக்கம் செலுத்த முடியும் என எதிர்பார்க்கலாம். நம்மாலேயே நமக்குள் பார்த்து, நம்முடைய செயல்கள் மற்றும் எண்ணங்கள் குறித்து யோசிக்க முடியவில்லை எனில், வாழ்க்கை பற்றிய மற்றவர்கள் பார்வையை எப்படி மாற்ற முடியும்? நாமே நம்முடைய சிறந்த வடிவங்களாக இல்லாத போது, நாம் எப்படி மற்றவர்களுக்கு தலைமை ஏற்க முடியுமா?  

உண்மை என்னவெனில், நாம் தேடிக்கொண்டிருக்கும் மகிழ்ச்சி, அமைதியை அடைய, எல்லா நேரங்களிலும்,  நம்முடைய உணர்வுகள், சிந்தனைகளை கட்டுப்படுத்திக்கொள்ளக் கற்றுக்கொள்ள வேண்டும். நம்மில் பலரும் மவுனத்தில் தவிக்கும் வாழ்க்கையை மாற்றும் அனுபவமான , நெருக்கமானவர்களின் இழப்பின் போது, நாம் இதை நாட வேண்டும்.  

அனைத்து காயங்களையும், நெருக்காமனவர்கள் இழப்பால் ஏற்படும் வலியை கூட, காலம் ஆற்றும் என சொல்கின்றனர். ஆனால், ஒருவர் உணரும் வலி, தழல் போல இருந்து கொண்டே இருக்கும். எனவே நெருக்கமானவர்கள் இழப்பால் ஏற்படும் வலி, கவலையை எதிர்கொள்வது எப்படி?  

இந்த கேள்விக்கும், நமக்குள் பதில் இருக்கிறது என்கிறார் சத்குரு. நாம் எப்படி இழப்பை நினைவுக்கொகிறோம் என்பதில் இருக்கிறது என்கிறார்.

“நம் எல்லோருக்கும் மரணம் என்பதே ஒரே உண்மை என்பதும், நாம் எல்லோரும் இறக்கப்போகிறோம் என்பதும் தெரியும். ஆனால் இழந்தவர்களை நாம் எப்படி நினைவில் கொள்கிறோம். இறந்தவர்களை வலி மற்றும் சோகத்தோடு நினைவில் கொள்ளப்போகிறோமா? அல்லது மகிழ்ச்சி மற்றும் நல்ல நினைவுகளுடன் நினைவு கொள்ளப்போகிறோமா? இறந்த மனிதர் நம்மிடம் இருந்து வேண்டுவது என்ன? மகிழ்ச்சியா? சோகமா? உங்களை விட்டு பிரிந்த மனிதர் நினைவை நீங்கள் போற்ற விரும்புகிறீர்களா? அல்லது அவரை நினைத்து சோகத்தில் ஆழ்வீர்களா? இதற்கான பதில் உங்களுக்குள் தான் இருக்கிறது” என்கிறார் சத்குரு.

ஆங்கில கட்டுரையாளர்: ஷரத்தா சர்மா | தமிழில்: சைபர்சிம்மன்