பிரபல தொழிலதிபர் சஹாரா ‘சுப்ரதா ராய்’ காலமானார்; பிரபலங்கள் அஞ்சலி!

சஹாரா குழும நிறுவனர் மற்றும் தலைவர் சுப்ரதா ராய் (75), நேற்றிரவு சுமார் 10.30 மணி அளவில் மாரடைப்பால் உயிரிழந்ததாக சஹாரா குழுமம் அறிவித்துள்ளது.

பிரபல தொழிலதிபர் சஹாரா ‘சுப்ரதா ராய்’ காலமானார்; பிரபலங்கள் அஞ்சலி!

Wednesday November 15, 2023,

2 min Read

சஹாரா குழும நிறுவனர் மற்றும் தலைவர் சுப்ரதா ராய் (75), நேற்றிரவு சுமார் 10.30 மணி அளவில் மாரடைப்பால் உயிரிழந்ததாக சஹாரா குழுமம் அறிவித்துள்ளது.

உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மும்பையில் உள்ள திருபாய் அம்பானி மருத்துவமனை மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சுப்ரதா ராய் நீண்ட காலமாக மெட்டாஸ்டேடிக் கேன்சர், உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் ஆகியவற்றுடன் அவதிப்பட்டு வந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Subrata Roy

யார் இந்த சுப்ரதா ராய்?

ஜூன் 10, 1948 அன்று பீகாரில் உள்ள அராரியாவில் பிறந்த ராய், நிதி, ரியல் எஸ்டேட், ஊடகம், விருந்தோம்பல், ஆட்டோமொபைல், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பரந்து விரிந்து ஒரு பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ளார்.

சஹாரா குழும நிறுவனர் சுப்ரதா ராய்க்கு ஸ்வப்னா ராய் என்ற மனைவியும், சுஷாந்தோ ராய் மற்றும் சீமான்டோ ராய் என்ற இரு மகன்களும் உள்ளனர். கோரக்பூரில் உள்ள அரசு ஐஐடியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தார். 1976 ஆம் ஆண்டில், நிதி நெருக்கடியில் இருந்த சிட் ஃபண்ட் நிறுவனமான 'சஹாரா ஃபைனான்ஸ்' நிறுவனத்தை வாங்கினார். 1978ல் அது சஹாரா இந்தியா பரிவார் என மாற்றப்பட்டது.

அதன் பிறகு, அவர் வணிகத்தை நிதி, ரியல் எஸ்டேட், ஊடகம் மற்றும் விருந்தோம்பல் என விரிவுபடுத்தினார். 1992ல், ராஷ்ட்ரிய சஹாரா என்ற செய்தி இதழும், சஹாரா தொலைக்காட்சி சேனலும் தொடங்கப்பட்டன. சில ஆண்டுகளாக சஹாரா டிவி சஹாரா ஒன் என மாற்றப்பட்டது. 2010 இல், ராய் லண்டனில் உள்ள க்ரோஸ்வெனர் ஹவுஸ் ஹோட்டலையும், 2012 இல் நியூயார்க்கில் உள்ள பிளாசா ஹோட்டலையும் வாங்கியது சர்வதேச அளவில் பரபரப்பான செய்தியாக ஊடகங்களில் பேசப்பட்டது.

2000-களில், சஹாரா இந்தியா பரிவாரில் 1.2 மில்லியன் ஊழியர்கள் இருந்தனர். நாட்டில் ரயில்வேக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையிலான ஊழியர்களைக் கொண்ட நிறுவனமாக சஹாரா குழுமம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. வெறும் ரூ. 2 ஆயிரம் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட சஹாரா நிறுவனம், இந்தியாவின் முன்னணி நிறுவனமாக அசுர வளர்ச்சி கண்டது.

ஆனால், 2014ம் ஆண்டு முதல் சஹாரா குழுமத்திற்கான சரிவு தொடங்கியது. முதலீட்டாளர்களிடம் இருந்து வசூல் செய்யப்பட்ட கோடிக்கணக்கான பணத்தை திருப்பி தர வேண்டுமா என்று செபி கேட்டது. செபியின் உத்தரவை மீறியது தொடர்பான உத்தரவில், உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதற்காக திகார் சிறையில் அடைக்கப்பட்டார். நீண்ட சட்டப்போராட்டத்திற்கு பிறகு, பரோலில் வந்திருந்த அவர், சில காலமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில், நேற்றிரவு மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.

பிரபலங்கள் இரங்கல்:

உத்திரபிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ், ராயின் மறைவு மாநிலத்திற்கும் நாட்டிற்கும் ஒரு உணர்வுபூர்வமான இழப்பாகும் எனக்கூறியுள்ளார்.

"ஏனென்றால், அவர் மிகவும் வெற்றிகரமான தொழிலதிபராக மட்டுமின்றி, எண்ணற்ற மக்களுக்கு உதவி செய்து அவர்களுக்கு ஆதரவாக இருந்த மிகப்பெரிய இதயத்திற்கு சொந்தக்காரர்,” எனக்கூறியுள்ளார்.
Subrata Roy

திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ்தீப் சபீர் ஆழ்ந்த இழப்பு குறித்து இதயப்பூர்வமான உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டார்.

"அவரது உடல்நிலை மோசமடைந்ததால் அவர் அனுமதிக்கப்பட்டார். எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. எனக்கு அவரை தனிப்பட்ட முறையில் தெரியும்," என சபீர் உணர்ச்சிவசப்பட்டார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தனது சோசியல் மீடியா பக்கத்தில்,

“சிறந்த ஊக்குவிப்பாளர், பேச்சாளர் மற்றுப்ம் விளையாட்டு பிரியர் இனி இல்லை,” எனக்கூறியுள்ளார்.

அவரது உடல் நாளை லக்னோவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, நாளை மறுநாள் இறுதி சடங்குகள் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.