1 லட்சம் அமெரிக்க டாலர் சம்பளப் பணியை உதறிவிட்டு விவசாயத்தில் இறங்கிய சதீஷ் குமார்!
சதீஷ் அதிக சம்பளத்துடன்கூடிய வெளிநாட்டுப் பணி வாழ்க்கையை விட்டு விலகி சொந்த கிராமமான கலபுரகி மாவட்டத்தில் விவசாயத்தில் ஈடுபடத் தொடங்கினார்.
சதீஷ் குமார் கர்நாடகாவைச் சேர்ந்தவர். இவர் அமெரிக்கா, துபாய் போன்ற வெளிநாட்டுகளில் மென்பொருள் பொறியாளராக வேலை பார்த்து வந்தார். ஆண்டு வருவாயாக கிட்டத்தட்ட 1,00,000 அமெரிக்க டாலர் சம்பாதித்து வந்தார். இருப்பினும் இவரது பணி, ஆர்வமில்லாமல் சோர்வளிப்பதாக இருந்தது.
சதீஷ் தனது பணியை விட்டு விலகி தனது சொந்த கிராமமான கலபுரகி மாவட்டத்தில் விவசாயத்தில் ஈடுபடத் தொடங்கினார்.
“நான் அமெரிக்கா மற்றும் துபாயில் மென்பொருள் பணியாளராக பணிபுரிந்து வந்தேன். அமெரிக்காவில் ஆண்டு வருவாயாக 1,00,000 அமெரிக்க டாலர் சம்பாதித்தேன். இருப்பினும் என்னுடைய பணி வாழ்க்கை சோர்வளிப்பதாகவே இருந்தது,” என்று சதீஷ் குமார் ஏஎன்ஐ-இடம் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறும்போது,
“என்னுடைய ஐடி பணி சவால் நிறைந்ததாக இருக்கவில்லை. என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் கவனம் செலுத்த முடியாமல் போனது. எனவே எனது சொந்த கிராமத்திற்குத் திரும்பத் தீர்மானித்தேன்.
இரண்டாண்டுகளுக்கு முன்பு விவசாயம் தொடங்கினேன். கடந்த மாதம் என்னுடைய 2 ஏக்கர் நிலத்தில் விளைந்த சோளத்தை 2.5 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்தேன்,” என்று சதீஷ் குமார் ஏஎன்ஐ-இடம் கூறியுள்ளார்.
இன்றைய இளம் சமூகத்தினர் பணி வாய்ப்பு தேடி வெளிநாடுகளுக்குச் செல்லும் போக்கு அதிகரித்திருப்பினும் சதீஷ் குமார் போன்ற ஏராளமானோர் அதிக சம்பளத்துடன் கூடிய பணியைத் துறந்து விவசாயத்தில் ஈடுபட சொந்த ஊர் திரும்புவதையும் பார்க்கமுடிகிறது.
விவசாயம் நம் நாட்டின் முதுகெலும்பு என்று கூறப்பட்டாலும் விவசாயிகள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். அதேசமயம் இன்றைய நவீன தொழில்நுட்ப வசதிகள் விவசாயத் துறையில் காணப்படும் முக்கியப் பிரச்சனைகளுக்கு தீர்வுகளை வழங்கி வருவது விவசாயத் துறையை மேலும் ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது.
கட்டுரை: Think Change India | தகவல் உதவி: ஏஎன்ஐ