கிராமப்புற இந்தியாவுக்கு டிஜிட்டல் கற்பித்தலை கொண்டு செல்லும் Schoolnet!

பள்ளியில் அளிக்கப்படும் பயிற்சி மற்றும் பள்ளி நேரத்திற்கு பிந்தைய கற்றலை ஒருங்கிணைப்பதற்கான டிஜிட்டல் தீர்வை உருவாக்கி, தனிப்பட்ட முறையிலான தரமான கல்வி பயிற்சிக்கு வழி செய்து வருகிறது ஸ்கூல்நெட் நிறுவனம்.
100 CLAPS
0

உலகின் மிகப்பெரிய பள்ளி கல்வி அமைப்பை பெற்றிருந்தாலும் இந்தியா அதிக கல்வி இடைவெளியையை கொண்டுள்ளது. 90 சதவீத மாணவர்கள் அரசு, நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் பயில்கின்றனர். கல்வி பிரமிட்டில் அடித்தளமாக மற்றும் நடுப்பகுதியாக அமையும் இந்த பிரிவினர் கற்றல் நெருக்கடியால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பள்ளி மாணவர்களில் 50 சதவீதத்திற்கும் மேல் அடிப்படைக் கல்வி அறிவை கூட பெறுவதில்லை என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றனர். பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் இதில் மோசமாக பாதிக்கப்படுகின்றனர்.

நொய்டாவைச்சேர்ந்த ’ஸ்கூல்நெட்’ (Schoolnet) மாணவர்களுக்கு டிஜிட்டல் மற்றும் டிஜிட்டல் சார்ந்த சேவைகளை அளிப்பதன் மூலம் இந்த இடைவெளியை குறைக்க முயற்சிக்கிறது.

அனைவருக்குமான வாழ்நாள் கல்வி வாய்ப்புகளை விரிவாக்கி, தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகக் கூட்டு மூலம், கல்வியை ஜனநாயகமயமாக்குவதை ஸ்கூல்நெட் தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஸ்கூல்நெட் நிர்வாக இயக்குனர், சி.இ.ஓ மற்றும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான ஆர்.சி.எம்.ரெட்டி,

“1997ல் Schoolnet உருவான போது, பெரிய அளவில் தரமான கல்வியை அணுகுவதில் உள்ள வரம்புகளை நீக்குவது எப்படி எனும் கேள்வி முதன்மையாக இருந்தது. கற்பவர்களுக்கு அதிகாரம் அளித்து, கல்வியை ஜனநாயகமயமாக்க வேண்டும். இதை செய்ய, மாணவர்கள தங்கள் புரிதல் பாணிக்கு ஏற்ப பெற்றுக்கொள்ளக்கூடிய வகையிலான பாடத்திட்டங்களை கொண்டிருக்க வேண்டும்,” என்கிறார் அவர்.

துவக்கம்

மல்டிமீடியா, அனிமேஷன், சிமுலேஷன் உள்ளிட்ட உள்ளடக்கத்தை ஸ்கூல்நெட் ஒன்றாக கொண்டு வர விரும்பியது. ஆக்கப்பூர்வமான மற்றும் கலைவையான அணுகுமுறை மற்றும் கற்றல் கோட்பாடுகள் ஆகிய அம்சங்களை ஒருங்கிணைப்பது நோக்கமாக இருந்தது,

“கற்றல் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள பிரமிட்டின் கீழ் மற்றும் நடுப் பகுதியில் உள்ளவர்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய கற்றலை வழங்க வேண்டும் என்பதே ஸ்கூல்நெட் பின்னே உள்ள நோக்கமாகும். இத்தகைய உள்ளடக்கத்தை நாட்டின் தொலைதூர பகுதிகளில் உள்ளவர்களுக்கு கொண்டு செல்வது எப்படி என்பது தான் சவாலாக இருந்தது. இந்த நிலையில் ஐஐடி பாம்பேவுடன் இணைந்து, கே-யான் (K-Yan) எனும் உலகின் முதல் சமூக கம்ப்யூட்டர் அல்லது கற்பித்தல்-கற்றல் சாதனத்தை உருவாக்கினோம்,” என்கிறார் ரெட்டி.

கே-யான், கம்ப்யூட்டர், பிரஜக்டர், ஆடியோ மற்றும் வீடியோ அமைப்புகளின் அம்சங்களைக் கொண்டிருந்தது. உள்ளடக்கத்தை நிரப்பு ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்குக் கொண்டு செல்லும் வகையில், இது உருவாக்கப்பட்டிருந்தது. வகுப்பறையை டிஜிட்டல் வழி கல்வி சூழலாக இது மாற்றியது.

டிஜிட்டல் பள்ளி

வகுப்பறை மற்றும் டிஜிட்டல் இணைந்த மாதிரியை ஸ்கூல்நெட் பின்பற்றுகிறது. கல்வி வழங்குவதில் தொழில்நுட்பத்தை சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்வது இதன் பின்னே உள்ள எண்ணமாகும்.

“ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து, அரசு மற்றும் தனியார் துறை மூலம் , டிஜிட்டல் வகுப்பறைகள் வாயிலாக நாட்டில் உள்ள ஒரு லட்சம் பள்ளிகளில் எங்கள் இருப்பை ஏற்படுத்தியுள்ளோம். பள்ளிகளுக்கான சேவைகள், கே-யான் சாதனம், உள்ளடக்கம், தேர்வு கேள்விகள், ஆசிரியர்களுக்கான பயிற்சி ஆகியவை இதில் அடங்கியுள்ளன,” என்கிறார் .

மேலும், அரசுப் பள்ளிகளை டிஜிட்டல்மயமாக்க, மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் மேற்கு வங்க மாநில அரசுகளுடனும் கூட்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பள்ளி மற்றும் பள்ளி நேரத்திற்கு பின்னர் பொருந்தக்கூடிய வகையில், மாணவர்களுக்கு ஏற்ற வகையிலான சேவையை உருவாக்க அதிக செலவானதாக குழு தெரிவிக்கிறது.

“நாங்கள் சுயநிதி நிறுவனமான இருக்கிறோம். அடுத்த கட்ட வளர்சிக்காக நிதியை எதிர்பார்க்கிறோம்” என்கிறார் ரெட்டி.

மாணவர்கள்

மாணவர்களின் பல்வேறு உணர்வுத்திறன்களுக்கு ஏற்ப ஆங்கிலம் மற்றும் இந்திய மொழிகளில் பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த உள்ளடக்கத்தை செயற்கை நுண்ணறிவுக் கொண்டு மாணவர்களின் தனிப்பட்ட தன்மைக்கேற்ப பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்காக, Geneo எனும் டிஜிட்டல் கல்வி மேடையை உருவாக்கியுள்ளது. தற்போது ஆங்கிலம், இந்தி மற்றும் வங்காள மொழிகளில் இது செயல்படுகிறது. அடுத்த ஐந்தாண்டுகளில் மேலும் 10 இந்திய மொழிகளில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளை டிஜிட்டல்மயமாக்கி இருப்பதாக ஸ்கூல்நெட் தெரிவிக்கிறது. மேலும், 60 ஆயிரம் பள்ளிகள் மாணவர்களுக்கு டிஜிட்டல் கற்றல் சாதனங்களை வழங்கவும் வழி செய்திருப்பதாக தெரிவிக்கிறது. பள்ளி நேரத்திற்கு பின் டிஜிட்டல் கற்றல் தீர்வுகள் மூலம் 1.50 லட்சம் இளைஞர்கள், மாணவர்களுக்கு பயனளித்துள்ளதாகவும் தெரிவிக்கிறது.

கொரோனா சூழலுக்கு மத்தியில் ஸ்கூல்நெட் ஒரு லட்சத்திற்கும் மேலான ஆசிரியர்களுக்கு டிஜிட்டல் பயிற்சி அளித்துள்ளதாகவும் தெரிவிக்கிறது. பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில், ஜெனியோ மற்றும் இதர டிஜிட்டல் வழிகள் மூலம் மாணவர்கள் கல்வி கற்க வழி செய்ததாகவும் தெரிவிக்கிறது.

“மாணவர்களின் சாதிக்கும் திறனில் உள்ள இடைவெளியை குறைக்கும் வகையில் அவர்களின் ஒட்டுமொத்த கல்வி வளர்ச்சிக்கு ஆசிரியர்கள் உதவுவது, கற்றல் பலனை அதிகரிக்கும் வகையில் கற்பித்தலை மேம்படுத்துவது மற்றும் மேம்பட்ட பலனுக்காக, பள்ளியில் கற்பது மற்றும் பள்ளி நேரத்திற்கு பின் கற்பது ஆகியவற்றை தொழில்நுட்பம் மூலம் ஒருங்கிணைப்பதன் வாயிலாக சமூக தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என நம்புவதாக,” ரெட்டி தெரிவிக்கிறார்.

ஆங்கிலத்தில்: அபூர்வா.பி | தமிழில்: சைபர் சிம்மன்

Latest

Updates from around the world