Whatsapp-ல் 14 பில்லியன் முறை பகிரப்பட்ட ஷேர்சாட் உள்ளடக்கம்!
பயனாளிகள் உள்ளடக்க உருவாக்கத்தில் இந்தி மொழி முதலிடத்தில் இருப்பதாகவும், தமிழ் மொழி இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும் ஷேர்சாட் தெரிவித்துள்ளது.
ஷேர்சாட் தனது மேடையில் 23 சதவீத பயனாளிகள் பொழுதுபோக்கு சார்ந்த உள்ளடக்கத்தை உருவாக்கி வருவதும், காதல் சார்ந்த உள்ளடக்கம் தொடர்பான ஈர்ப்பு 14 சதவீதமாக இருப்பதாகவும் கண்டறிந்துள்ளது.
"450 மில்லியன் பயனாளிகள் ஷேர்சாட்டில், படங்கள், வீடியோக்கள், ஜிஃப்கள் உள்ளிட்ட உள்ளடக்கத்தை உருவாக்கி உள்ளனரர் அல்லது பகிர்ந்து கொண்டுள்ளனர். இந்த மேடையில் பார்க்கப்பட்ட 580 மில்லியன் மணி நேரத்து வீடியோக்கள் இந்த ஆண்டு வாட்ஸ் அப்பில் 14 பில்லியன் முறை பகிரப்பட்டுள்ளது’ என ஷேர்சாட் டிரெண்ட் 2019 அறிக்கையில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பஞ்சாப், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பிகார் மற்றும் ராஜஸ்தானில் உள்ள பயனாளிகள் காலையில் பக்தி உள்ளடக்கத்தை பகிர்வதும், மாலையில் காதல் சார்ந்த உள்ளட்டகத்தை பகிர்வதையும் நிறுவனம் கவனித்துள்ளது.
"கடந்த ஐந்தாண்டுகள் எங்களுக்கு சிறந்த கற்றல் அனுபவமாக அமைந்துள்ளது. பூஜ்ஜியத்தில் இருந்து 60 மில்லியன் தீவிர மாதாந்திர பயனாளிகள் என்ற நிலைக்கு, பெரும்பாலும் இயற்கையான முறையில் வளர்ந்து வந்திருக்கிறோம். ஒவ்வொரு உள்ளூர் மொழி பயனாளிகளின் இதயம் மற்றும் நாடித்துடிப்பை நன்கறிந்திருக்கிறோம்,” என்று ஷேர்சாட் முதன்மை வர்த்தக அதிகாரி சுனில் காமத் கூறியுள்ளார்.
புல்வாமா தாக்குதல், விமானி அபினந்தன் இந்தியா திரும்பிய போது மற்றும் பொதுத் தேர்தல்களின் போது நாட்டுப்பற்று சார்ந்த தருணங்களை இந்த மேடை அதிகம் கண்டுள்ளது.
"இந்தி மொழி பயனாளிகள் உள்ளட்டக்க உருவாக்கத்தில் 22.5 சதவீதத்துடன் முதலில் உள்ளனர். தமிழ் 19.4 சதவீதமாக இருக்கிறது. தெலுங்கு மற்றும் பஞ்சாபி 13 சதவீதத்தை பெற்றுள்ளன,” என்று அறிக்கை தெரிவிக்கிறது.
இந்த மேடை 60 மில்லியனுக்கு மேல் பயனாளிகளை கொண்டுள்ளதாக தெரிவிக்கிறது. 21 மில்லியன் உள்ளடக்க உருவாக்குனர்கள் இதில் அடங்கும்.
அடுத்த சில மாதங்களில் 100- 150 பேரை வேலைக்கு அமர்த்திக்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும், இரண்டாம் அடுக்கு நகரங்களில் தனது நிலையை வலுவாக்கிக் கொள்வதில் கவனம் செலுத்த இருப்பதாகவும் நிறுவனம் கடந்த மாதம் தெரிவித்திருந்தது.
மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் தனது மாத தீவிர பயனாளிகள் எண்ணிக்கையை இரு மடங்காக திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தது. இந்திய மொழிகளில் பயன்படுத்தக்கூடிய இந்த சேவையில் பயனாளிகளின் பயன்பாடு அளவு நாள் ஒன்றுக்கு 23 முதல் 24 நிமிடங்களாக இருக்கிறது.
செய்தி: பிடிஐ