சிறிய வர்த்தகம்; பெரிய வாய்ப்பு: வலுவான ஐடியாவுடன் துவங்கி சர்வதேச அளவில் வெற்றி பெற்ற 5 நிறுவனங்கள்!

பெரிய வர்த்தகங்கள் சிறிய அளவில் தான் துவங்குகின்றன. வழக்கமான ஐடியாவை கொண்டு துவங்கினாலும்,. விடா முயற்சியால் முன்னேறிய சர்வடேச அளவொல் கோலோச்சும் ஐந்து நிறுவனங்களின் கதை இதோ:
4 CLAPS
0

உலகம் மகத்தான ஐடியாக்களால் நிறைந்திருக்கிறது. இடர்களை எதிர்கொள்ளும் ஆர்வம் மற்றும் செயல்படுத்தும் தன்மை தான் வெற்றிகரமான தொழில்முனைவோரை தனித்து நிற்கச்செய்கின்றன.

சிறிய வர்த்தகத்தைத் துவக்கி நடத்த ஐடியா மற்றும் அதை செயல்படுத்தும் உத்வேகம் மட்டுமே தேவை. இப்படி வெற்றி பெற்ற ஐந்து வர்த்தகங்களை பட்டியலிட்டுள்ளோம்:

எம்பயர் ஸ்பைசஸ்

நுகர்வோர் பொருள் துறையில் வேகமாக வளரும் நிறுவனங்களில் ஒன்றான, ’எம்பயர் ஸ்பைசஸ் அண்ட் புட்ஸ்’, ஊறுகாய், அப்பளம், கெட்சப், சாஸ், சட்னி என பல வகையான பொருட்களை அளிக்கிறது. வர்த்தகத்தை விரிவாக்க புதிய சந்தையில் நுழைவது இதன் நோக்கமாக இருக்கிறது.

1970ல் நாசிக்கில் துவக்கப்பட்ட குடும்பத்தொழிலான எம்பயர் ஸ்பைசஸ் அண்ட் புட்ஸ், ராம் பந்து, ஆர்பிஎம், டெம்ப்டின், ஜைகா உள்ளிட்ட பிராண்ட்களை கொண்டுள்ளது.

12 மாநிலங்களில் செயல்படும் நிறுவனம், 1,000 விநியோகிஸ்தர்களுக்கு மேல் பெற்றுள்ளதோடு, 5 லட்சம் சில்லறை விற்பனை கடைகளில் கிடைக்கிறது. அமெரிக்கா, பிரிட்டன், கனடா, லக்ஸம்பர்க், நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கும் விரிவாக்கம் செய்துள்ளது.

ஆண்டுதோறும் 1,000 டன் அப்பளம், 6,000 டன் உறுகாய்களை விற்பனை செய்கிறது. புதிய பிரிவான சாஸ்களில் 8 டன் விற்பனை செய்கிறது.

பிகனர்வாலே

இந்திய பிரிவினைக்குப்பிறகு 1947ல், சுதந்திர இந்தியாவில் புதிய விதிகள் மற்றும் நெறிமுறைகளோடு களம் அமைந்திருப்பதை வர்த்தக நிறுவனங்கள் உணர்ந்தன. பல நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு, பலரும் புதிய வாய்ப்புகளைத் தேடி புறப்பட்டனர்.

லாலா கேதர்நாத் அகர்வாலும், பிகனரில் இருந்து தில்லிக்கு இடம்பெயர்ந்து, சாந்தி சவுக் பகுதியில் தள்ளுவண்டியில் இனிப்புகளை விற்கத்துவங்கினார். கடின உழைப்பு காரணமாக அவரது வர்த்தகம் வளர்ந்தது. விரைவில் பிகானர் நம்கீன் பந்தர் எனும் சிறிய கடையை துவக்கினார்.

இந்த கடை ’பிகனர்வாலே’ எனும் பெயரில் பிரபலமாகி, இந்திய சுவையிலான உணவுகளுக்காக அறியப்பட்டது. 1965ல் அவரது மகன் சுந்தர் அகர்வால் வர்த்தகத்தில் இணைந்து, பிகனர்வாலேவை மேலும் விரிவாக்கினார்.

2020ல் பிகனர்வாலே இந்தியாவில் 100 விற்பனை நிலையங்களைக் கொண்டிருந்தது.

பிகனர்வாலேவின் சமையல் கலை ருசியை இந்திய எல்லையை கடந்து எடுத்துச்செல்ல வேண்டும் என குடும்பம் விரும்பியது. 1980-களில் பேக்கேஜ் துறை வளர்ந்து அடைந்த நிலையில், இந்த விருப்பமும் நிறைவேறத்துவங்கியது.

1988ல் ஷியாம் சுந்தர், பிகானர்வாலேவை துவக்கி வலுவான நுகர்பொருள் நிறுவனமாக உருவாக்கினார். தந்தை உண்டாக்கிய தரத்தை அப்படியே பராமரித்து வருகிறார்.

இது இப்போது நம்கீன்கள், இனிப்புகள், அப்பளம், சமோசா உள்ளிட்ட உணவுகளை விற்பனை செய்கிறது. 270 உள்ளூர் SKU மற்றும் 320 வெளிநாட்டு SKU களை நிறுவனம் பெற்றுள்ளது. உறைய வைக்கப்பட்ட உணவுகள் அதன் ஏற்றுமதி வர்த்தகத்திற்கு அடித்தளமாக உள்ளது. அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.

எம்டிபிஎச்

இந்தூரில் ஜவுளிக்கடை ஒன்றில் விற்பனை பிரிதிநிதி வேலையை விட்டு விலை ஏழு ஆண்டுகள் ஆன நிலையிலும், பிரகாஷ் அகர்வாலுக்கு தொழில்முனைவில் வெற்றி கிடைக்கவில்லை. சோப், ஹேர் ஆயிலை தயாரித்து விற்பனை செய்யும் அவரது முயற்சி வெற்றி பெறவில்லை.

அவர் தயாரிப்பு தொடர்ந்து தோல்வி அடைவதில் தாய்க்கு விருப்பம் இல்லை. குடும்பத்திற்கு போதிய வருவாய் இல்லாததால் மகன் ஜவுளி கடையில் வேலை செய்வதை அவர் விரும்பினார். ஆனால் அவர் தொழில்முனைவில் உறுதியாக இருந்தார்.  

1992ல், பிராகாஷின் அம்மா அவரிடம், தயாரிப்பில் வெற்றி பெற வேண்டும் என்றால், பிரபலமான அகர்பத்தி பிராண்டின் விநியோகிஸ்தாராகும் படி கூறினார்.

ஆனால், அவர் இதை சவாலாக எடுத்துக்கொண்டு, தன்னால் தயாரிப்பில் வெற்றி பெற முடியும் என உணர்த்த விரும்பினார். எனினும் அகர்பத்தி நல்ல யோசனை என்று தான் ஏற்றுக்கொள்கிறார். இந்திய அகர்பத்தி சந்தை 1990-கள் முதல் செழித்துக்கொண்டிருக்கிறது.

“என் தந்தைக்கு எந்த மூலதனமும் இல்லை. 1992ல் அவர் உறவினர்களிடம் இருந்து ரூ.5 லட்சம் கடன் வாங்கி அகர்பத்தி வர்த்தகத்தை துவக்கினார். மைசூர் டீப் பர்பியூமரி ஹவுஸ் (MDPH) எனும் பெயரில் நிறுவனமும், பூரப் பஷிம் உத்தர் தக்‌ஷின் எனும் பிராண்டையும் துவக்கினார். அவரது சகோதரர்கள் ஷியாம் மற்றும் ராஜ் குமார் இணைந்தனர்,” என்று அவரது மகன் அங்கித் அகர்வால் கூறினார்.

இப்படித் தான் பிரகாஷ் மற்றும் அவரது சகோதரர்கள் இந்தூர் வீட்டில் சிறிய கேரேஜில் இருந்து அகர்பத்தி உற்பத்தி செய்யத்துவங்கினர். அவரது தாயும் மேற்பார்வையாளராக இணைந்து கொண்டார்.

இந்த பிராண்ட் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், பிரகாஷ் ஆங்கில பெயரில் ’ஜெட் பிளாக்’ பிராண்டை துவக்கினார். இந்த முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்து, இந்தியாவின் வேகமாக வளரும் பிராண்ட்களில் ஒன்றாக உருவானது.

இன்று நிறுவனம், மூன்று கோடி ஊதுபத்திகளை தயாரித்து, தினமும் 15 லட்சம் ஜெட் பிளாக் அகர்பத்தி பேக்களை விற்பனை செய்கிறது. 2021ம் நிதியாண்டில் ரூ.650 கோடி விற்றுமுதல் ஈட்டியது.

துப்பட்டா பஜார்

இந்திய கலாச்சாரத்தில் துப்பாட்ட நீண்ட பாரம்பரியம் கொண்டது. இந்த பாரம்பரிய ஆடை உலக அளவில் வடிவமைப்பில் புகழ் பெற்றுள்ளது.

எனினும், துப்பாட்டாவில் என்ன பிரச்சனை என்றால் அதன் பிரதான வாடிக்கையாளர்களுக்கான பெண்களுக்கு அது திருப்தி அளிப்பதில்லை.

துணியின் தரம், நீளம், வண்னம் ஆகியவற்றில் பொருத்தமான துப்பாட்டாவை தேர்வு செய்வது எளிதானது அல்ல. இந்த இடைவெளியை போக்கும் வகையில் தான் கவுரவ் கார்கின் ’துப்பட்டா பஜார்’ வருகிறது.

“மும்பையில் ஒரு முறை கிராபோர்டு மார்க்கெட்டில் பெண்மணி ஒருவர் தனது ஆடைக்கு ஏற்ற துப்பாட்டாவை வாங்க முடியாமல் திணறிக் கொண்டிருப்பதை பார்த்தேன். நான் காத்திருந்த நேரத்தில் அந்த பெண்மணி சரியான துப்பாட்டாவை தேடி கடை கடையாக அலைந்து கொண்டிருந்தார். அங்கு இரண்டு அல்லது மூன்று மணி நேரம் இருந்திருப்பேன். அப்படியும், நான் செல்லும் நேரத்தில் அவர் சரியான துப்பாட்டா தேடிக்கொண்டிருந்தார்,” என்கிறார் கவுரவ்.

கவுரவ் ஜவுளி வியாபாரக் குடும்பத்தில் இருந்து வருபவர். அதிலும் ராஜஸ்தானின் ஆஜ்மீரைச்சேர்ந்தவர் என்பதால் அவருக்கு இது ஆச்சர்யத்தை அளித்தது.

“ராஜஸ்தானில் துப்பாட்டா வியாபாரம் செய்பவர்கள் வாடிக்கையாளர்கள் கிடைக்காமல் கஷ்டப்படும் நிலையில், வாடிக்கையாளர்கள் இங்கே அதே பொருளைத் தேடிக்கொண்டிருப்பதை பார்த்தேன்,” என்கிறார்.

இந்த தருணத்தில் தான் கவுரவ் அனைத்து வகை துப்பாட்டாக்களையும் ஒரே இடத்தில் வாங்க கூடிய வர்த்தகத்தை துவக்க தீர்மானித்தார்.

முன்னாள் சமபங்கு ஆய்வாளரான கவுரவ் தான் குடும்பத்தில் பணிக்குச் சென்ற நபராக இருந்தார். ஆனால், காலம் அவருக்கு வேறு திட்டம் வைத்திருந்தது. அவர் தனது நல்ல வேலையை விட்டுவிட்டு துப்பாட்டா வர்த்தகத்தில் ஈடுபட்டார்.

11 ஆண்டுகளில் கவுரவ், ஏழு லட்சத்திற்கும் மேலான ஆர்டர்களை பூர்த்தி செய்து இந்திய எல்லையை கடந்து வளர்ந்திருக்கிறார். துப்பட்டா பஜாரில் 3000க்கும் அதிகமான துப்பாட்டாக்கள் கிடைக்கின்றன. இவை நிறுவனத்தில் தயாரானவை அல்லது நேரடியாக தருவிக்கப்பட்டவை. மெக்சிகோ முதல் கிழக்கு ஆப்பிரிக்கா வரை, ஜிம்பாப்வே என் நாடுகளுக்கும் துப்பாட்டா அனுப்பி வைக்கிறோம் என்கிறார்.

யாஷ் பக்கா லிட்

ஒரு கதவு மூடினால் இன்னொரு கதவு திறக்கும் என்பது வேத் கிருஷ்ணா வாழ்க்கையில் உண்மையாக இருக்கிறது. அவர் விமானியாக வேண்டும் என கனவு கண்டார். ஆனால், வாழ்க்கை வேறுவிதமாக அமைந்தது.

வேத் வர்த்தகத்திற்கு புதியவர் அல்ல. உத்திர பிரதேசத்தின் அயோத்தியாவில் ’யாஷ் பக்கா லிட்’ காகித ஆலையை தந்தை துவக்கி நடத்தியத்தை அவர் பார்த்து வளர்ந்தார்.

எனினும், அவர் வாழ்க்கையில் மிகுந்த ஏற்ற இறக்கங்களை பார்த்திருக்கிறார். குறிப்பாக கூட்டு குடும்பத்தில் இருந்து பிரிந்த பிறகு இன்னல்களை சந்தித்தார். அவர் வர்த்தகத்தை துவக்க மனைவி நகைகளை விற்க வேண்டியிருந்தது.

“என் பெற்றோர் ஒரு குழுவாக பணியாற்றுவதை பார்த்திருக்கிறேன். என் தந்தை எப்போதும் ஒரு முன்னுதாரணம். அம்மாவை அவர் வர்த்தகத்தில் அரங்காவலராக கருதினார்,” என்கிறார்.

ஒரு கட்டத்தில் அவர் வர்த்தகத்தை விற்றுவிடுவது பற்றி யோசித்தாலும், இப்போது 30 நாடுகளில் செயல்பாடுகளைக் கொண்ட ரூ.300 கோடிக்கும் மேல் விற்றுமுதல் கொண்ட வர்த்தகமாக யாஷ் பக்கா லிட் வளர்ந்திருக்கிறது.

ஆங்கிலத்தில்: பலக் அகர்வால் | தமிழில்: சைபர் சிம்மன்

Latest

Updates from around the world