120 கிலோ எடை; தொடரும் பாடிஷேமிங்; இன்ஸ்டா, யூட்யூபில் கலக்கும் Snazzy தமிழச்சி!

உருவகேலிக்குள்ளாகும் எண்ணற்ற திவ்யாக்களுள் ஒருவராகவே அவரும் இருந்தார். குண்டு, யானை, ட்ரம் என்று கேலி செய்யப்பட்டார். இன்று அவர்கள்முன்பு பிறருக்கு உத்வேகம் அளிக்கும் யு டியூபராக டிரான்ஸ்பார்மாகியதற்கு பின்னாள் ஒளிந்துள்ள வலிகளையும், கேலிகளையும் பகிர்தார் ஸ்னாசி தமிழச்சி...
13 CLAPS
0

'You're too thin'

'You have become fat'

'You look so skinny'

-இதுபோன்ற கூற்றுகளை ஒவ்வொருவரும் அவர்தம் வாழ்வில் ஒரு முறையேனும் நிச்சயம் கடந்துவந்திருப்பீர். சிலர் இக்கூற்றுகளுக்கு அடிபணிந்தாலும், சிலரோ வலுவான கருத்துகளுடன் எதிர்த்துநின்று முன்னுதாரணமாக திகழ்கின்றனர். இதில், திவ்யா திருப்பியடித்தவர்களுள் ஒருவர்.

ரீசென்ட் இன்டர்நெட் சென்சேஷன், அவரது க்யூட் டான்ஸ் மொமண்ட்களால் இன்ஸ்டாகிராமில் ஃபாலோயர்கள் எகிற, புதிய பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறார் திவ்யா விக்ரம். இவையனைத்தும் லாக்டவுனில் ஏற்பட்ட மாற்றங்களே. அதற்கு முன் உருவக்கேலிக்குள்ளாகும் எண்ணற்ற திவ்யாக்களுள் ஒருவராகவே அவரும் இருந்தார்.

குண்டு, யானை, ட்ரம் என்று கேலி செய்தவர்கள் முன்பு பிறருக்கு உத்வேகம் அளிக்கும் யூடியூபராக திவ்யா டிரான்ஸ்பார்ம் ஆனதற்கு பின்னால் ஒளிந்துள்ளது வலிகளும், கேலிகளும்...

திருச்சி பொண்ணு. சிறுவயதிலிருந்தே பப்ளி பொண்ணு. பள்ளி, கல்லுாரி நிகழ்ச்சிகளில் இவரது டான்ஸ் பெர்ஃபாமன்ஸ் மஸ்ட்டாக இருக்கும். பரதநாட்டியக் கலைஞரான அவர், 8வது படிக்கையில் அரங்கேற்றத்திலும் பங்கேற்றார். பள்ளி பருவத்தில் விருப்பப்படும் ஆடைகளை அணிந்து கொள்ள முடியாமல் மனதுக்குள் வருத்தப்பட்டுள்ளார். இந்த ஆடை அணிந்தால் கிண்டல் செய்வார்கள் என்ற எண்ணமே அவரைத் தடுத்துள்ளது.

அந்த வயதில் பாடிஷேமிங் என்பதெல்லாம் தெரியாததால், அவற்றை இலகுவாகவே எடுத்துக் கொண்டுள்ளார். ஆனால், கேலிகள் முற்றுபெறவில்லை. கல்லுாரியிலும் துரத்தியது.

ஃபிட்னஸ் என்பது உடலை சார்ந்தது மட்டுமில்லை...

"நான் பிறக்கும்போதே 4 கிலோ இருந்தேன். சின்ன வயதிலிருந்தே பப்ளி பொண்ணு தான். திருச்சியில் தான் ஸ்கூல், காலேஜ்லாம் முடித்தேன். காலேஜ் பஸ்ல தான் போவேன். காலேஜ் கேட்டிலிருந்து நடந்து போகனும். அங்கு நிற்கிற சினீயர் பசங்களையெல்லாம் கடந்து தான் செல்லவேண்டும்.

ஒவ்வொரு நாள் ஒவ்வொரு கேலிகள். எந்த கடையில் அரிசி வாங்குறனு கிண்டல் பண்ணுவாங்க. இத்தனைக்கும் அரியர் வச்சுகிட்டு சுத்துற பசங்க, நாம் குறிக்கோளோடு காலேஜ் வருகிறோம். நாம பயந்து ஒதுங்குறதால தான் அவங்க பேசுறாங்கனு தோணியது. அடுத்த முறை எந்த கடையில் அரிசி வாங்குறனு கேட்டவர்களிடம், சத்தமாக உங்க அப்பா கடையில தான் சொன்னேன். அன்றிலிருந்து கொஞ்சம் தயங்கினாங்க. அப்போதிலிருந்து தான் எதையும் துணிவுடன் எதிர்க்கணும்னு தெரிஞ்சுகிட்டேன்.

உடல் எடை கூடுவதற்கு சாப்பிடுவது மட்டுமே காரணம் கிடையாது. தைராய்டு, சிக்கலான பிரசவம்னு, சீரற்ற மாதவிடாய்னு உடல்எடை அதிகமாகுவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. அது புரியாமல் கேலி செய்பவர்களைக் கண்டால் வேடிக்கையாக இருக்கிறது.

அந்த காலேஜ் சம்பவத்துக்கு பிறகு, என்னை குறித்து கமெண்ட் செய்பவர்களுக்கு பதிலடி கொடுக்க கற்றுக்கொண்டேன். குண்டாக இருப்பதாக கிண்டலடிப்பவர்களுக்காக உடலை குறைத்தால், அப்பவும் ஏதாவது ஒரு குறையை நோண்டி எடுத்து கிண்டல் செய்யதான் போகிறார்கள்.

“குறை சொல்லியே வாழ்பவர்களுக்காக நம் வாழ்வை மாற்றியைமக்க வேண்டுமா? உடல் எடை அதிகம் இருப்பதோ, குறைவாக இருப்பதோ மேட்டரே இல்லை. ஆரோக்கியமாக இருக்குறீங்களா அது தான் விஷயம். ஃபிட்னஸ் என்பது உடலைச் சார்ந்தது மட்டுமில்லை. மனசும் உற்சாகத்துடன் இருக்கவேண்டும். அந்த வகையில் நான் பயங்கர ஃபிட்டாக இருக்கிறேன்," என்று அவர் கூறுகையிலே உற்சாகம் வெளிப்பட்டது.

'ஸ்னாசி தமிழச்சி' ஆன பாடி ஷேமிங்!

கல்லுாரி முடிந்தவுடன் ஐடி கம்பெனியில் பணிக்குச் சேர்ந்துள்ளார் திவ்யா. மாதமாகினால் சம்பளம். பெற்றோர்களுக்கு உதவமுடியும் என்பதால், கார்பரேட் கம்பெனியில் பணிபுரிந்துள்ளார். ஆனால், திவ்யாவின் விருப்பமோ யூடியூப்பராக வேண்டும் என்பதே.

அதனால், பணிபுரிந்த காலத்தில் டிக் டாக்கில் பிடித்தமான வீடியோக்களை போஸ்ட் செய்துள்ளார். டிக் டாக்கில் தொடங்கிய பயணம் இன்று சக்ஸ்ஃபுல் யூடியூபராகவும், பிளஸ் சைஸ் மாடலாகவும் மாறியுள்ளார்.

"கல்யாணம் முடிந்து சென்னையில் செட்டிலானோம். வேலைக்கு சென்று கொண்டிருந்தபோது கிடைக்கிற ஃப்ரீ டைமில் டிக் டாக்கில் வீடியோ பண்ணினேன். டிக் டாக்கில் சில வீடியோக்கள் அதிக வியூஸ் போச்சு, ஃபாலோயர்கள் அதிகரித்தனர். அப்போதான் கர்ப்பமாகினேன். அதுவும்,

6 மாதங்களுக்கு அப்புறம் தான் கன்சிவ்வாக இருக்கேனே தெரியும். ஏன்னா, எனக்கு ரெகுலரா 2 நாட்கள் ப்ரீட்யஸ் இருந்ததால, நான் பிரக்னன்ட்டா இருக்கேனா, இல்லையா என்கிற யோசனைக்கு போகவேயில்லை. ஆனா, நான் வெயிட்டாகிட்டே இருந்தேன். அம்மாவும், வீட்டிலேயே இருக்க, எந்த வேலையும் செய்யாததால் தான் எடைகூடுது சொன்னாங்க. கொஞ்ச நாளாக ஆக பிடிச்ச சாப்பாடுலாம் பிடிக்காமல் போயிருச்சு. ஓகேனு, டாக்டர் போய் காண்பித்தோம். அப்போ தான் நான் கன்சிவ்வா இருக்கேனே தெரியும். அடுத்த 1 மாசம் தான் ஆச்சு. 7வது மாசம் எங்க ஏஞ்சல் பிறந்திட்டாங்க.
வெயிட்டா இருப்பதால் எந்த சிக்கலான நிலைமைக்குலாம் போகலை. ஹெல்த்தியான பேபியாக, நார்மலா-ஆ தான் பிறந்தாங்க. சோ, வெயிட்டா இருப்பதால் குழந்தை பிறப்பதில் சிக்கல்னு பிறர் சொல்றத கேட்டு டவுன் ஆகாதீங்க. என்னகூட தான் வெயிட்டா இருக்க, கல்யாணம் ஆகாதுனு சொன்னாங்க. ஆனா, எனக்கு கரெக்ட்டான நேரத்தில் தான் கல்யாணமாச்சு. நெகட்டிவிட்டியை தட்டிவிட்டு விட்டு போயிட்டே இருங்கள்.

குழந்தை பிறந்த அப்புறம் நான் வேலைக்கு போகலை. அந்த சமயத்தில் தான் லாக்டவுனும். அந்த டைமை பயன்படுத்திக்கணும்னு 'Snazzytamilachi’ ஸ்னாசிதமிழச்சி' என்ற பெயரில் யூடியூப் சேனலும், இன்ஸ்டாகிராமில் ஒரு பக்கமும் தொடங்கினேன். சின்னவயதில் பரதநாட்டியம் கத்துகிட்டதாலும், டான்ஸ் ரொம்ப பிடிக்கும் என்பதாலும் டான்ஸ் வீடியோக்களை இன்ஸ்டாவில் போஸ்ட் செய்தேன்.

யூடியூப்பில் திவ்யாவின் ப்யூட்டி கேர், குக்கிங் வீடியோ, பாடி ஷேமிங் மற்றும் உத்வேக பேச்சுகள்னு நிறைய வீடியோக்கள் அப்லோட் செய்து வருகிறேன். வீடியோவின் கீழ் கமெண்ட்களில் பாசிட்டிவ் அண்ட் நெகட்டிவ் கமெண்ட்ஸ் வரும். ஆனா, அதை எதிர்கொள்வதற்கு நான் முன்பே ரெடியாக தான் இருந்தேன். அந்த அளவுக்கு என் கணவரும், பேமிலியும் ரொம்ப சப்போர்ட் பண்ணாங்க.

நான் வீடியோ எடுக்கும் சமயத்தில் கணவர் குழந்தையை கவனித்து கொள்வார். அவர் தான் சில சமயங்களில் கேமிரா ஷுட் செய்வார். வேலைக்கு போகாத சமயம், யூடியூப்பில் இருந்தும் உடனடியாக பணம் வராது. அப்போதும் பினான்ஷியலா மேனேஜ் பண்ணார். இப்போது, இன்ஸ்டாவில் பிளஸ் சைஸ் பெண்களுக்குரிய ஆடைகள், அழகு சாதனங்கள் மற்றும் சில புரோடெக்ட்டுகளை விளம்பரம் செய்து வருகிறேன். மாடலிங் செய்யத் துவங்கியுள்ளேன், என்ற திவ்யா இறுதியாய் அவர் கடைபிடிக்கும் 5 விஷயங்களை கூறி முடித்தார்.

1. உங்களை நீங்களே நேசியுங்கள்...

2. எதிர்மறை எண்ணங்களை புறக்கணியுங்கள். பாசிட்டிவ் எண்ணம் கொண்டவர்களுடன் சூழ்ந்திருங்கள்.

3. விரும்பிய செயலை செய்ய தயக்கம் கொள்ளாதீர்.

4. தாழ்வு மனப்பான்மையும் கொள்ள வேண்டாம். மிகுதியாகவும் எண்ணிகொள்ள வேண்டாம்.

5. உங்களை மதிப்பவர்களுக்கு செவி கொடுங்கள்.

Latest

Updates from around the world