ஃபேஷன் பிரிவில் செயல்படும் கதாநாயகி!
சோனம் கே அஹுஜா தனது ஃபேஷன் லேபிள் Rheson மூலம் பெண்களுக்கான ஆடைகளை வடிவமைத்து வருகிறார். சர்வதேச அளவில் விற்பனை செய்யவும் ஆண்களுக்கான ஆடை பிரிவிலும் செயல்பட திட்டமிட்டுள்ளார்.
2007-ம் ஆண்டு ’சாவரியா’ திரைப்படத்தின் மூலம் திரைப்படத் துறையில் அறிமுகமான காலம் முதல் சோனம் கபூர் அஹுஜா ஸ்டைலுக்கு பிரபலமாகியுள்ளார். ’வீரே தி வெட்டிங்’, ’பேட்மேன்’, ’ஏக் லட்கி கோ தேகா தோ ஏசா லகா’ ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ள சோனம், இந்திய ஃபேஷன் பிரிவில் தேவை இருப்பதாக ஹெர்ஸ்டோரி உடனான உரையாடலில் குறிப்பிடுகிறார்.
எனவே தனது சகோதரி ரியா கபூருடன் இணைந்து தொழில்முனைவில் ஈடுபட தீர்மானித்தார். இவர்கள் 2017-ம் ஆண்டு Rheson என்கிற தங்களது ஃபேஷன் லேபிளை அறிமுகப்படுத்தியுள்ளனர். சோனம், ரியா இருவரின் பெயரையும் இணைத்தே Rheson என பெயரிடப்பட்டனர். தினசரி அணியும் வகையிலான இந்த ஆடை பிராண்ட் ஒவ்வொரு இந்திய பெண்ணுக்கானது. இதன் விலையும் குறைவு. ஷாப்பர்ஸ் ஸ்டாப்பில் அறிமுகப்படுத்தியதில் இருந்து சிறப்பான வரவேற்பைப் பெற்றுவருகிறது. அதன் பிறகு Amazon.in தளத்தில் ஷாப்பர்ஸ் ஸ்டாப்பின் ஸ்டோரில் அறிமுகப்படுத்தப்பட்டது.
திரைப்படம், ஃபேஷன், ஸ்டார்ட் அப், வணிகம் என சோனம் எப்படி அனைத்தையும் திறம்பட நிர்வகித்து வருகிறார்? Rheson, ஸ்டார்ட் அப்பின் அடுத்தகட்ட திட்டங்கள், திரைப்படங்கள் போன்றவை குறித்து அதிகம் தெரிந்துகொள்ள ஹெர்ஸ்டோரி சமீபத்தில் அவருடன் உரையாடியது.
அந்த நேர்காணலின் தொகுப்பு இதோ:
ஹெர்ஸ்டோரி: Rheson வெற்றிகரமான ஃபேஷன் பிராண்டாக அதன் மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. தொழில்முனைவோராக செயல்படுவதில் இருந்து கதாநாயகியான சோனம் எவ்வாறு மாறுபட்டிருக்கிறார்?
சோனம் கபூர் அஹுஜா: ஃபேஷன், குறிப்பாக ஃபாஸ்ட் ஃபேஷன் நுகர்வோர் சார்ந்தது. அதேசமயம் அதில் நம்பகத்தன்மையை இணைக்க விரும்பினேன். எந்த ஒரு பணியிலும் அரைமனதோடு ஈடுபடுவதில் எனக்கும் என் சகோதரிக்கும் விருப்பமில்லை.
”இந்த ஃபார்முலாபடி இதுதான் விற்பனையாகும் என்று தீர்மானிக்கமாட்டோம். அசலானதாகவும், நாங்கள் அணிந்துகொள்ள விரும்பும் வகையிலும், சிறப்பாக விற்பனையாகும் வகையிலும் இருக்கும் டிசைனை உருவாக்க விரும்புகிறோம்.
Rheson பொறுத்தவரை வடிவமைப்பிலும் வாடிக்கையாளர் தேவையிலும் முழுகவனம் செலுத்தி சிறப்பானதை வழங்குகிறோம். ஒரு நடிகையாக சற்று சுயநலத்துடன் இருக்கிறேன் என்றே சொல்லலாம். என்னுடைய கதாப்பாத்திரத்தை குறித்து மட்டுமே சிந்திக்கிறேன். அதாவது எதைக் கற்றுக்கொள்ளமுடியும் என்பதிலும் ஒரு கலைஞராகவும் தனிநபராகவும் எப்படி வளர்ச்சியடையமுடியும் என்பதிலும் கவனம் செலுத்துகிறேன். இத்தகைய அணுகுமுறை கொண்டவர்களையே ரசிகர்கள் விரும்புவார்கள் என்பதை நான் தெரிந்துகொண்டேன்.
Rheson குழு முயற்சி. ஆனால் நடிப்புத் துறையில் குழுவாக செயல்பட்டாலும் தனிநபர் தொழிலாகவே கருதவேண்டும். எனவே நடிகையாக செயல்படுவதற்கும் என் சகோதரியுடன் ஸ்டார்ட் அப் பணியில் ஈடுபடுவதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது.
ஹெர்ஸ்டோரி: Rheson துவங்குகையில் எத்தகைய தடங்கல்களை சந்தித்தீர்கள்?
சோனம் கபூர் அஹுஜா: நாங்கள் இதற்கு முன்பு வணிக முயற்சிகளில் ஈடுபட்டதில்லை. வணிக செயல்பாடுகளையும் சந்தை செயல்பாடுகளையும் புரிந்துகொள்ள அவகாசம் தேவைப்பட்டது. Rheson முயற்சியில் வாடிக்கையாளர்களைப் புரிந்துகொள்வது முதல் இறுதி தயாரிப்பை விநியோகம் செய்வது வரை அனைத்தையும் நாங்களே கையாண்டோம். மார்கெட்டிங் போன்ற செயல்பாடுகளுக்கு குறைவாகவே செலவிட்டோம். ஆனால் திரைப்படங்களைப் பொறுத்தவரை இத்தகைய நடவடிக்கைகளை வேறொருவர் நிர்வகிப்பதால் நாங்கள் இதில் தலையிடவேண்டிய அவசியமிருக்காது.
ஹெர்ஸ்டோரி: தீபிகா படுகோனின் ’ஆல் அபௌட் யூ’, அனுஷ்கா ஷர்மாவின் ’Nush’ என தற்போது பல பிரபலங்கள் ஃபேஷன் துறையில் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபடத் துவங்கியுள்ளனர். இந்நிலையில் இத்தகைய பிரபலங்களுடன் போட்டியிடுவதில் எப்படி தனித்துவமாக செயல்படுகிறீர்கள்?
சோனம் கபூர் அஹுஜா: எங்களது பிராண்ட் நூறு சதவீதம் எங்களுக்குச் சொந்தமானது. ஷாப்பர்ஸ் ஸ்டாப் எங்களுக்காக தயாரித்து சில்லறை வர்த்தகம் செய்தாலும் பிராண்ட் எங்களுடையது. மற்ற பிரபலங்களுக்கும் அவர்களது பிராண்ட் மீது நிச்சயம் ஈடுபாடு இருக்கும். ஆனால் Rheson முழுமையாக எங்களைச் சார்ந்தது. நாங்கள் பிராண்ட் அம்பாசிடர்கள் இல்லை. நாங்களே அனைத்தையும் வடிவமைத்து ஒட்டுமொத்த செயல்பாடுகளையும் நிர்வகித்து வருகிறோம்.
ஹெர்ஸ்டோரி: Rheson அடுத்தகட்ட செயல்பாடு என்ன?
சோனம் கபூர் அஹுஜா: இந்திய ஹை ஸ்ட்ரீட் ஃபேஷனில் வடிவமைப்பு சார்ந்து காணப்பட்ட தேவையை Rheson பூர்த்தி செய்தது. அந்த சமயத்தில் பலர் இந்த சந்தையில் செயல்படவில்லை. நாங்கள் சிறப்பிக்க இதுவும் ஒரு காரணம். Rheson தொடர்பான மிகப்பெரிய திட்டங்கள் எங்களிடம் உள்ளது. விரைவில் சர்வதேச அளவில் ஆடைகளை விற்பனை செய்ய உள்ளோம். அடுத்ததாக ஆண்களுக்கான ஆடைகள் பிரிவிலும் கவனம் செலுத்த உள்ளோம்.
ஹெர்ஸ்டோரி: நீங்கள் சமீபத்தில் ஃபேஷன் லேபிள் அறிமுகத்தின்போது இருபாலருக்கும் பொதுவான ஆடைகள் குறித்து பேசியுள்ளீர்கள். ஆண்கள் அணியும் ஆடைவகைகளை பெண்கள் அணியலாம். ஆனால் பெண்கள் அணியும் ஆடைகளை ஆண்கள் அணிந்துகொள்வதை நம் சமூகம் ஏற்றுக்கொள்ளுமா?
சோனம் கபூர் அஹுஜா: ஆடைகள் ஆண்களுக்கானது, பெண்களுக்கானது என எப்படி ஒருவரால் நிர்ணயிக்கமுடியும்? என்னுடைய கணவரின் பிராண்ட் bhaane ஜாக்கெட்கள் இருபாலினரும் பயன்படுத்தக்கூடியது. நான் அவற்றை அணியலாம். என் கணவரும் அணிந்துகொள்வார். யார் வேண்டுமானாலும் அதை அணிந்துகொள்ளலாம். நீங்கள் யார் என்பதை உங்கள் ஆடை தீர்மானிக்கக்கூடாது. அனைத்து பாலினரும் அணியக்கூடிய பல்வேறு ஆடை வகைகள் உள்ளது.
நாங்கள் ரன்வீர்சிங் ஸ்கர்ட் அணிந்து பார்த்திருக்கிறோம். அவருக்கு அது நன்றாகவே இருந்தது. நீங்கள் அசௌகரியமாக உணர்ந்தால் எந்த ஆடை அணிந்தாலும் அசௌகரியமாகவே உணர்வீர்கள். உங்களிடம் இருக்கும் தன்னம்பிக்கைதான் நீங்கள் சிறப்பிக்க உதவும்.
ஹெர்ஸ்டோரி: இந்திய சினிமா பல பரிமாணங்களைக் கடந்து இன்று துணிச்சலாக பல திரைப்படங்கள் எடுக்கப்பட்டு வலுவான செய்தி பகிரப்படுகிறது. ஆனால் ஒரே மாதிரியான சிந்தனைகள் தொடர்ந்து நிலவுகிறது. ’ஏக் லட்கி கோ தேகா தோ ஏசா லகா’ திரைப்படத்தில் ஓரினச்சேர்க்கையாளர் (gay) கதாப்பாத்திரத்தை நீங்கள் ஏற்றுக்கொள்ளக் காரணம் என்ன?
சோனம் கபூர் அஹுஜா: இந்தக் கதையை மக்களிடம் சொல்லவேண்டிய அவசியம் இருந்ததால் அதை ஏற்றுக்கொண்டேன். எல்ஜிபிடி சமூகத்தினரை முறையாக வெளிக்காட்ட ஒரு வாய்ப்பு கிடைத்ததாகவே உணர்ந்தேன். மக்கள் அதை ஒரு துணிச்சலான முடிவு என்றழைக்கின்றனர். நான் அப்படி நினைக்கவில்லை. அது ஒரு சுவாரஸ்யமான கதை. இந்த கதாப்பாத்திரத்திற்கு நான் பொருத்தமாக இருப்பேன் என்று நினைத்த இயக்குநரையும் எழுத்தாளரையும் பணிவன்புடன் வணங்குகிறேன்.
ஹெர்ஸ்டோரி: ஒரு நடிகையாக அடுத்து என்ன திட்டமிட்டுள்ளீர்கள்?
சோனம் கபூர் அஹுஜா: என்னுடைய அடுத்த திரைப்படம் The Zoya Factor. இது அனுஜா சௌஹனின் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் துல்கர் சல்மானுடன் நடிக்கிறேன். இந்தத் திரைப்படம் 2019 ஜூன் 14-ம் தேதி வெளியாக உள்ளது.
ஹெர்ஸ்டோரி: எங்கள் வாசகர்களுக்கு ஃபேஷன் சார்ந்த உங்களது கருத்துகளை பகிர்ந்துகொள்ளுங்கள்.
சோனம் கபூர் அஹுஜா: நீங்கள் நீங்களாகவே இருங்கள். உங்களுக்கு வசதியாக இருப்பதை அணிந்துகொள்ளுங்கள். குறிப்பிட்ட தருணத்திற்கும் காலநிலைக்கும் ஏற்றவாறு ஆடை அணிந்துகொள்ளுங்கள். அத்துடன் சரியான ஷூக்களையும் உள்ளாடைகளையும் தேர்வு செய்யுங்கள்.
ஆங்கில கட்டுரையாளர்: ஹனி மேத்தா | தமிழில்: ஸ்ரீவித்யா