பதிப்புகளில்
நியூஸ் வியூஸ்

கோல்ட் சூப், பருப்பு ரசம், ருசியான மீன்: சம்மரின் சூட்டை தணிக்க என்னென்ன சாப்பிடலாம்..?

கோடைக்காலத்தை சமாளிக்க உதவும் சில உணவுக் குறிப்புகள்!

YS TEAM TAMIL
14th Mar 2019
6+ Shares
 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on

சமீபத்தில் நாடு முழுவதும் வானிலை மற்றும் பருவநிலை மாற்றம் குறித்த விவாதங்கள் அதிக முக்கியத்துவம் பெற்றுவிட்டதாகவே தோன்றுகிறது. ஆனால் நாம் இதற்கு உலக வெப்பமயமாதலை மட்டும் காரணம் காட்டிவிட்டு எளிதாகக் கடந்துசென்றுவிட முடியாது. இதற்கு நாமும் பொறுப்பேற்கவேண்டியது அவசியம்.

”2020-ம் ஆண்டில் இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் தலைநகரம் முழுவதும் கான்க்ரீட் மற்றும் கண்ணாடிகள் மட்டுமே இருக்கும். மரங்கள் எதுவும் இருக்காது. முறையாக திட்டமிடப்படாத நகரமயமாக்கல் காரணமாக 1973-ம் ஆண்டு 63 சதவீதமாக இருந்த பசுமைப் போர்வை 6.46 சதவீதமாக குறையும் என்று IISc வெளியிட்ட சமீபத்திய ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.”

கடந்த 34 ஆண்டுகளில் பெங்களூருவில் கான்கிரீட் அல்லது நடைபாதைப் பகுதிகளின் பரப்பளவு 1005% சதவீதம் அதிகரித்துள்ளது. வெகு விரைவில் இரண்டு வெவ்வேறு பருவங்கள் இருக்கப்போவதில்லை. ஈரப்பதம் கொண்ட கோடைக்காலமும் உலர் கோடைக்காலமும் மட்டுமே இருக்கப்போகிறது.

உங்களால் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் போகும் நேரத்தில் கோடைக்காலத்திற்கேற்ற உணவைத் திட்டமடுவது சிறந்தது.

வெள்ளரிக்காய், தக்காளி, தர்பூசணி, மஞ்சள் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்வது வழக்கம்தான். எனினும் வழக்கத்திற்கு மாறான ஒரு அணுகுமுறையைக் கையாள்வதும் சிறந்தது.

உதாரணத்திற்கு சூப் என்பது மழைக்கால உணவு என்பதே நமது வழக்கமான கருத்து, ஆனால் மாலை நேரத்தில் ஒரு கிண்ணம் சூப் அருந்துவது நம் உடம்பை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவும். கோடை நாட்களில் சைனீஸ் க்ளியர் சூப், ஒரு கிண்ணம் பருப்பு ரசம் அல்லது காஸ்பாச்சோ மிகச்சிறந்த உணவாகும்.

சூடான சூப் எடுத்துக்கொள்ளும்போது நம் உடலில் இருந்து வியர்வை ஆவியாகி உடல் சூடு உறிஞ்சப்பட்டு உடல் குளிர்ச்சியாகும். 90-களில் நான் குல்பார்கா பகுதிக்கு அதிகம் பயணம் செய்வேன். அங்கு வெப்பம் 40 டிகிரி செல்ஷியஸாக இருக்கும். இங்குள்ளவர்கள் மிளகாய், பூண்டு, நிலக்கடலை ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பொடியுடன் சப்பாத்தியை சாப்பிடுவதைப் பார்த்து திடுக்கிட்டேன்.

கோடை காலத்திற்கு மிளகாய் சிறந்த உணவு. ஏனெனில் இதிலுள்ள கேப்சாய்சின் உங்கள் உடம்புச் சூடு அதிகரித்துள்ளது என்கிற சிக்னலை மூளைக்கு அனுப்புகிறது. எனவே உங்களுக்கு அதிக வியர்வை வெளியேறி உங்கள் உடல் குளிர்ச்சியாகிறது.

கோடை காலத்தில் சிறிதளவு மஞ்சள் சேர்த்து தயாரிக்கப்படும் எந்த ஒரு காய்கறி உணவும் அல்லது சிக்கன் கறியும் சிறந்த தேர்வாகும். ஏனெனில் மஞ்சளில் இருக்கும் குர்க்குமின் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்து உடலை குளிர்ச்சியாக்கும்.

கச்சும்பர், க்ரீன் சாலட் போன்றவற்றுடன் தர்பூசணி துண்டுகள், ஃபெட்டா, கொஞ்சம் ஆலிவ் ஆயில், பால்சாமிக் வினிகர் போன்றவற்றை சேர்த்துக்கொள்ளலாம்.

திராட்சை, மாதுளை சாறு ஆகியவற்றுடன் ஆருகுலா சேர்த்து ஆலிவ் ஆயில் கலந்து சாப்பிடுவது நல்லது. ஓட்ஸை ஆரஞ்சு ஜூஸில் ஊறவைத்து தயிர், ஃப்ரெஷ் பழங்கள், பாதாம் ஆகியவை கலந்து காலை உணவாக சாப்பிடலாம். ஆண்டிஆக்சிடன்ஸ் நிறைந்த இது உங்கள் நாளை சிறப்பாகத் துவங்க உதவும்.

வெள்ளரி நீர் சத்து அதிகம் கொண்டது. பல்வேறு மருத்துவக் குணங்கள் நிறைந்தது. உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி திசுக்களையும் சருமத்தையும் ஆரோக்கியமாக்கும்.

வெள்ளரியில் மிகக்குறைவான கலோரிகளே உள்ளது. சர்க்கரை, கார்போஹைட்ரேட், கொழுப்பு ஆகியவற்றின் அளவும் மிகக்குறைவு. அத்துடன் வைட்டமின் பி, பாஸ்பரஸ், கால்சியம், ஜிங்க் போன்ற சத்துக்கள் அதிகளவில் உள்ளது. முள்ளங்கி, வெள்ளரி, நெல்லிக்காய், எலுமிச்சை சாறு, உப்பு, மிளகு ஆகியவற்றை சேர்ந்து அற்புதமான சாலட் தயாரிக்கலாம்.

அதே சமயம் கோடைக்காலத்தில் சீஸ், உருளை, பர்கர், பீட்சா போன்ற உணவு வகைகளைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அவை எளிதில் ஜீரணமாகாது. உடல் பருமன் ஏற்படும்.

கோடைக்காலத்தில் மீன் எடுத்துக்கொள்வது நல்லது. மத்தி மீன், கானாங்கெளுத்தி போன்ற மீன் வகைகளில் ஒமேகா 3 கொழுப்பு அதிகம் உள்ளது. எப்போதும் கறியாக சாப்பிட்டுபவராக இருந்தால் ஒரு மாறுதலுக்கு பூண்டு, உப்பு, சில்லி ஃப்ளேக்ஸ், எலுமிச்சை சாறு, ஆலிவ் ஆயில் போன்றவற்றை கலந்து 15 நிமிடங்கள் வரை க்ரில் செய்து சாப்பிடலாம்.

நீர் தோசையுடன் தேங்காய் பால் சேர்த்த காய்கறி அல்லது சிக்கன் கறியை மதிய உணவாக எடுத்துக்கொள்ளலாம். புளிப்பு சுவைக்கு புளியை அதிகம் சேர்த்துக் கொள்ளாமல் பச்சை மாங்காய் எடுத்துக்கொள்ளலாம்.

மொத்தத்தில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க அதிகளவில் தண்ணீர், மோர். க்ரீன் டீ போன்றவற்றை எடுத்துக்கொள்ளவேண்டும். உப்புமா, மசாலா தோசை, பூரி போன்ற உணவு வகைகளுக்குப் பதிலாக அவல், இட்லி, பச்சைப்பயிறு தோசை, முத்தே என்கிற உருண்டை, ரசம், புல்கா போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். அதிகளவில் ஃப்ரெஷ் பழங்கள், காய்கறி, சாலட், க்ரில் செய்யப்பட்ட இறைச்சி, மீன், கடல் உணவுகள் போன்றவற்றை எடுத்துக்கொண்டு ஜங்க் உணவு, பானங்கள், மது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

ஆங்கில கட்டுரையாளர் : அஜித் சல்தன்ஹா | தமிழில் : ஸ்ரீவித்யா

6+ Shares
 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on
Report an issue
Authors

Related Tags