‘இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்...’ - எஸ்பிபி எனும் பன்முகக் கலைஞன்!

பாட்டுடைத் தலைவனாக தமிழ் சினிமாவில் தனக்கென தனி ஒரு சிம்மாசனத்தில் ஆட்சி செய்த பாடகர் எஸ்பிபி. காதல், சோகம், பாசம், கருணை, கோபம், ஏமாற்றம், நம்பிக்கை என பல உணர்ச்சிகளைத் தன் குரல் வழியே மக்களிடம் கொண்டு சேர்த்தவர்.
16 CLAPS
0

பாட்டுடைத் தலைவனாக தமிழ் சினிமாவில் தனக்கென தனி ஒரு சிம்மாசனத்தில் ஆட்சி செய்தவர் பாடகர் எஸ்பிபி எனும் எஸ்பி பாலசுப்ரமணியம். காதல், சோகம், பாசம், கருணை, கோபம், ஏமாற்றம், நம்பிக்கை என தமிழ் சினிமாவில் பல உணர்ச்சிகளைத் தன் குரல் வழியே மக்களிடம் கொண்டு சேர்த்தவர். அவரின் பிறந்த நாள் இன்று. இன்று அவர் உயிரோடு இருந்திருந்தால் 75 வயதைக் கொண்டாடிக் கொண்டிருப்பார்.

தமிழ் இசை வானில் பாடும் நிலாவாக வலம் வந்து கொண்டிருந்த எஸ்பிபி, கடந்த ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அவர் பூரண நலன் பெற்று மீண்டு வர வேண்டும் என திரையுலகைச் சேர்ந்தவர்கள், ரசிகர்கள் என எல்லோரும் பிரார்த்திக் கொண்டிருந்தனர்.

ஆனாலும் நன்கு உடல்நலம் தேறி வந்த எஸ்பிபி, சிகிச்சைப் பலனின்றி செப்டம்பர் 25ம் தேதி நம் நினைவுகளில் மட்டும் வாழ்பவராகி விட்டார். எஸ்பிபியின் மறைவால்,

  ‘சங்கீத மேகம் தேன் சிந்தும் வானம் இன்று கண்ணீரை சிந்தியது..'

இசையின் கதை

1946ம் ஆண்டு ஜூன் 4ம் தேதி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கொனேட்டம்பட்டுவில் பிறந்தவர் எஸ்பிபி. எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்பிபி என்றும், பாலு என்றும் மக்களிடையே பிரபலமான அவரின் முழுப்பெயர் ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியம் ஆகும். அவரது பெற்றோர் பெயர் எஸ் பி சம்பமூர்த்தி மற்றும் சகுந்தலம்மா.

எஸ்பிபியின் தந்தை எஸ் பி சம்பமூர்த்தி ஹரிகதா கலைஞர் ஆவார். எஸ்பிபியின் உடன் பிறந்தவர்கள் இரண்டு சகோதரர்கள் மற்றும் ஐந்து சகோதரிகள். அவர்களில் எஸ்பி சைலஜாவும் பிரபல திரையிசைப் பாடகியாக, 5000க்கும் மேற்பட்ட பாடல்களை தென்னிந்திய மொழிகளில் பாடியுள்ளார்.

சிறு வயதில் இருந்தே இசை ஆர்வத்தோடு வளர்ந்துள்ளார் எஸ்பிபி. ஹார்மோனியம், புல்லாங்குழல் போன்ற இசைக் கருவிகளை வாசிக்கவும் கற்றுக் கொண்டார். இசைத் துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆசையோடு இருந்த எஸ்பிபியை, பொறியாளராக்க ஆசைப்பட்டார் அவரது அப்பா. எனவே தந்தையின் கனவுப்படி இன்ஜினியர் ஆக வேண்டும் என்ற நோக்கத்தோடு ஜே.என்.டி.யு பொறியியல் கல்லூரி, அனன்தபூரில் எஸ்பிபி சேர்ந்தார்.

ஆனால் உடல்நலக் குறைவால் பொறியியல்படிப்பு பாதியிலேயே நின்று விட்டது. பின்னர் சென்னையில் உள்ள வேறொரு கல்லூரியில் சேர்ந்து படித்தார். கல்லூரியில் படிக்கும் போதே பல இசைப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளையும் பெற்றார்.

திரை வாழ்க்கை :

1966ல் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மரியாத ரமணா என்ற தெலுங்குத் திரைப்படத்தில் பாடியதில் இருந்து திரைப்பட பாடகர் ஆனார். சுமார் 54 வருடங்களில் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ள எஸ்பிபி, உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான பாடல்களைப் பாடியதற்காக கின்னஸ் உலக சாதனைகள் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

தமிழில் ஹோட்டல் ரம்பா என்ற படத்தில் மெல்லிசை மன்னர் ௭ம்.௭ஸ்.வி இசையில், எல். ஆர். ஈஸ்வரியோடு இணைந்து,

‘அத்தானோடு இப்படியிருந்து ௭த்தனை நாளாச்சு..’ ௭ன்ற பாடல் மூலம் பாடகராக அறிமுகமானார். ஆனால் எதிர்பாராத சில காரணங்களால் ஹோட்டல் ரம்பா படம் ரிலீசாகவில்லை.

அதற்கு அடுத்ததாக ஜெமினி நடித்த ‘சாந்தி நிலையம்’ படத்தில் வரும், ‘இயற்கையெனும் இளையகன்னி..’ என்ற பாடலை பாடினார். ஆனால் அப்பாடல் வெளிவரும் முன்னரே எம்ஜிஆர் நடித்த அடிமைப்பெண் திரைப்படத்தில் எஸ்பிபி பாடிய, ‘ஆயிரம் நிலவே வா..’ பாடல் வெளியானது. எனவே இப்பாடல் தான் பாடும் நிலாவாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் எஸ்பிபியை அறிமுகப் படுத்தியது.

அன்று தொடங்கி தமிழில் பல நாயகர்களுக்கு பாடல்களைப் பாடியுள்ளார். எந்தவொரு நாயகனுக்கும் பொருத்திப் போகின்ற வளமான குரல் வரமாக அமைந்தது எஸ்பிபிக்கு. அதனாலேயே ரஜினி, கமல் என முன்னணி நடிகர்கள் அனைவருக்கும் பாடினார். பெரும்பாலும் படங்களின் துவக்கப் பாடலை எஸ்பிபி பாடினால், அப்படம் நிச்சயம் வெற்றிப்படமாக அமையும் என்ற செண்டிமெண்ட் உள்ளது.

அதிலும் குறிப்பாக ரஜினி படங்களில் அந்த சென்டிமெண்ட் ரொம்பவே பார்க்கப்படும். அதனால் தான் பெரும்பாலான ரஜினி படங்களில் நாயகனின் அறிமுகப் பாடலாக எஸ்பிபியையே பாட வைத்தனர்.

அடிமைப் பெண்ணில் ஆரம்பித்த எஸ்பிபியின் தமிழ் திரையுலகப் பாடல் பயணம் தற்போது அண்ணாத்தே’வோடு முடிவடைந்திருக்கிறது. எம்.ஜி.ஆரில் ஆரம்பித்து ரஜினி, கமல் காலத்தில் ராஜ்ஜியம் செய்து இன்றைய இளம் நாயகர்களுக்கும் பாடல்களைப் பாடியுள்ளார் எஸ்பிபி.

ஐந்து தலைமுறை இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியவர் என்ற பெருமையும் எஸ்பிபிக்கு உள்ளது. தொழிலையும் தாண்டி திரையுலக நண்பர்களுடன் உரிமையுடன் பழகியவர் எஸ்பிபி.

தமிழ் மட்டுமின்றி மொத்தம் 16 மொழிகளில் சுமார் 40 ஆயிரம் பாடல்களைப் பாடி இசை சாம்ராஜ்ஜியம் நடத்தியவர். தன் காந்தக் குரலால் இசை உலகில் முடிசூடா மன்னனாக விளங்கிய எஸ்பிபி, முறையாக கர்நாடக இசையைக் கற்றுக் கொண்டவர் இல்லை என்பது தான் இங்கே ஆச்சர்யத்துக்குரிய விஷயம். ஆனாலும் சங்கராபரணம் படத்தில் கர்நாடக இசையில் அமைந்த பாடல்களைச் சிறப்பாகப் பாடி தேசிய விருது பெற்றார்.

எல்லா நாயகர்களுக்கும் பொருந்திப் போகின்ற வசியம் செய்யும் குரலைக் கொண்டிருந்ததால், எஸ்பிபியை தங்களது படத்தில் பாட வைக்க அனைத்து நாயகர்களும், இயக்குநர்களும் போட்டி போட்டனர். இதனால் ஒரு சமயத்தில் ஒரே நாளில் பல பாடல்களைப் பாடும் அளவிற்கு பிஸியாக இருந்தார் எஸ்பிபி.

கடந்த 1981ம் ஆண்டு பிப்ரவரி 8 ஆம் தேதி கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் காலை 9 மணியில் இருந்து இரவு 9 மணி வரை ஒரே நாளில் 21 பாடல்களை கன்னட மொழி இசையமைப்பாளர் உபேந்திர குமாருக்காக பாடி சாதனை செய்துள்ளார் எஸ்பிபி.
இதே போல் தமிழில் ஒரே நாளில் 19 பாடல்களையும், இந்தியில் 16 பாடல்களையும் (அதுவும் 6மணி நேரத்தில்) பாடி சாதனைப் படைத்திருக்கிறார். உலகிலேயே வேறு எந்த பாடகரும் செய்யாத இந்தச் சாதனைகளை இந்திய திரையிசையில் செய்திருக்கிறார் எஸ்பிபி.

‘கேளடி கண்மனி’யில் ‘மண்ணில் இந்தக் காதல் இன்றி...’ பாடலும், அமர்க்களம் படத்தில் ‘சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்...’ பாடலும் மூச்சு விடாமல் எஸ்.பி.பி. பாடிய பாடல்கள். இன்றளவும் மிக ஆச்சர்யமான முயற்சியாகப் பேசப்படுகின்றன இவை.

விருதுகள்:

இசை உலகையே தன் குரலால் கட்டி ஆண்ட எஸ்பிபி வாங்கிய விருதுகள் ஏராளம். அவற்றில் குறிப்பிடத்தக்க சில..

  • ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருது பெற்றுள்ளார்.
  • தேசிய விருதினை நான்கு மொழிகளுக்குப் பெற்ற ஒரே திரைப்படப் பின்னணிப் பாடகர் இவர் ஒருவரே.
  • பிலிம்பேர் விருதினை ஒரு முறையும், பிலிம்பேர் விருது (தெற்கு) மூன்று முறையும் பெற்றுள்ளார்.
  • தமிழக மற்றும் கர்நாடக அரசுகளின் பல மாநில விருதுகளையும், ஆந்திர அரசின் நந்தி விருதினையும் 25 முறை பெற்றுள்ளார்.
  • 1981ம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருதைப் பெற்றார்.
  • 2001ம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதும், 2011ல் பத்மபூஷண் விருதும் பெற்றார்.
  • 2016ம் ஆண்டு 47வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய திரைப்பட பிரமுகர் விருது வழங்கப்பட்டது.
  • 2015ம் ஆண்டு மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்திற்கு ஆந்திரமாநிலத்தின் தூதராக நியமிக்கப்பட்டிருந்தார்.
  • மதங்களை கடந்து பக்திப்பாடல்கள் பல பாடியுள்ளார்  எஸ்பிபி. இதற்காக 2015ஆம் ஆண்டுக்கான கேரள அரசின் ‘ஹரிவராசனம்’ விருது தரப்பட்டது.

பன்முகத் திறமையாளர்

திரைப்பட பாடகராக மட்டுமில்லாமல் இசை அமைப்பாளர், தயாரிப்பாளர், நடிகர், பின்னணி குரல் தருபவர் என திரையுலகில் பன்முகத் திறமையாளராக விளங்கினார்.

பல நடிகர்களுக்கு பின்னணிக்குரல் கொடுத்துள்ளார் எஸ்பிபி. குறிப்பாக 120 தெலுங்கு திரைப்படங்களில் நடிகர் கமலுக்கு பின்னணிக்குரல் தந்துள்ளார். கமலின் தசாவதாரம் படம் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்ட போது, மொத்தமுள்ள பத்து கதாபாத்திரங்களில் ஏழு கதாபாத்திரங்களுக்கு (பெண் கதாப்பாத்திரம் உட்பட) பின்னணி கொடுத்தது எஸ்பிபி தான்.

இதனாலேயே சிறந்த பாடகராக மட்டுமின்றி சிறந்த பின்னணிக்குரல் கொடுப்பவருக்கான நந்தி விருதினை அன்னமயா மற்றும் ஸ்ரீ சாய் மகிமா திரைப்படத்திற்கும் பெற்றுள்ளார். 2012 ஆம் ஆண்டு வெளிவந்த ஸ்ரீ ராம ராஜ்ஜியம் (தமிழ்) படத்திற்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவுக்காக பின்னணிக்குரல் கொடுத்துள்ளார்.

நடிகராகவும் தனி முத்திரைப் பதித்தவர் எஸ்பிபி. தென்னிந்திய மொழிகளில் எழுபதுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் சிகரம், கேளடி கண்மணி, காதலன், மின்சாரக்கனவு, திருடா திருடா போன்ற படங்கள் அவரது நடிப்புத்திறமையை பறைசாற்றுவதாக அமைந்தது.

முதல் மரியாதை படத்தில் சிவாஜிக்குப் பதிலாக நடித்திருக்க வேண்டியவர் எஸ்பிபி தானாம். பாரதிராஜா வற்புறுத்தியும் கடைசி நேரத்தில் எஸ்.பி.பி மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் நடிகராகவும், இசை நிகழ்ச்சிகள் நடத்தியும் தனி முத்திரை பதித்தவர் எஸ்பிபி.  

சிறுவயதில் இருந்தே இசைக் கருவிகளை இசைப்பதிலும் நன்கு தேர்ச்சி பெற்றிருந்ததால், இசையமைப்பாளராகவும் சிறந்து விளங்கினார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என நான்கு மொழிகளில் நாற்பத்தைந்து திரைப்படத்திற்கு மேல் இசையமைத்துள்ளார்.

உணவுப் பழக்கம்

சுத்தமான சைவ உணவுப் பழக்கம் கொண்டவர் எஸ்பிபி. ஐந்தே நிமிடத்தில் தனது உணவை சாப்பிட்டு முடித்து மற்றவர்களை ஆச்சர்யப்பட வைத்து விடுவார். தயிர் சாதமே எஸ்பிபி-ன் இஷ்ட உணவு. மற்றபடி தன் குரலைப் பாதுகாக்க என எந்தச் சிறப்புக் கவனமும் அவர் மேற்கொண்டது இல்லை. குளிர்ந்த நீர், ஐஸ்கிரீம், இனிப்பு என எல்லாம் சாப்பிடுவாராம்.

கிரிக்கெட் ரசிகர்

கிரிக்கெட் விளையாட்டின் மீதும் ஆர்வம் அதிகம் எஸ்பிபிக்கு. சச்சின் இவரது ஆர்வத்தைப் பார்த்துவிட்டு, தன் கையெழுத்திட்ட பேட் பரிசு அளித்திருக்கிறார். ஓவியம் வரைவதிலும் எஸ்பிபிக்கு ஆர்வம் அதிகம்.

குடும்ப வாழ்க்கை

எஸ்பிபியின் மனைவி பெயர் சாவித்ரி. இந்தத் தம்பதிக்கு பல்லவி என்ற மகளும், சரண் என்ற மகனும் உள்ளனர். இவர்களில் சரண் பின்னணி பாடகர், நடிகர், சின்னத்திரை தொடர் நடிகர், தயாரிப்பாளர் என தந்தையைப் போலவே பன்முகத் திறமையாளராக திரையுலகில் வலம் வருகிறார்.

பாடும் நிலா எஸ்பிபி தற்போது இறைவனிடம் ஓய்வெடுக்கச் சென்று விட்டாலும், அவர் நமக்காக விட்டுச் சென்ற பாடல்கள் அடுத்து வரும் தலைமுறைகளையும் நிச்சயம் மகிழ்ச்சி படுத்தும் என்பது மறுக்கமுடியாத உண்மை.

“உந்தன் மூச்சும்.. உந்தன் பாட்டும்.. அணையா விளக்கே.. என்றும் (எங்கள் மனங்களில்) வாழ்வாய் பூ மனமே...”

Latest

Updates from around the world