YS தமிழ் Explainer | BR 03 ரஃபேல் வாட்ச்: தெரிந்ததும், தெரியாததும்!
'BR 03 ரஃபேல் வாட்ச்' குறித்து விரிவாக தெரிந்து கொள்வோம். இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் என்ன என்பதையும் அலசுவோம்
தமிழகத்தில் தற்போது கை கடிகாரத்தின் முள்ளை காட்டிலும் அதிவேகமாக ரஃபேல் வாட்ச் குறித்த டாக் சுழன்று கொண்டிருக்கிறது. சாமானியர்கள் தொடங்கி அரசியல் கட்சி அமைப்புகளின் தலைவர்கள் வரை இது குறித்த பேச்சுதான். சமூக வலைதளங்களிலும் இந்த வாட்ச் பேச்சு வைரலாகி உள்ளது.
இந்த சூழலில் அனைவரும் பேசி வரும் ‘BR 03 ரஃபேல் வாட்ச்’ (BR 03 Rafael Watch) குறித்து விரிவாக தெரிந்து கொள்வோம். இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் என்ன என்பதையும் அலசுவோம்.
‘BR 03 ரஃபேல் வாட்ச்’ சிறப்பம்சங்கள்
ரஃபேல் வாட்ச் வரலாறு
ஆதி கால மனிதர்கள் சூரியனின் நகர்வுகளை பார்த்து நேரத்தை அறிந்து கொண்டனர். அப்படியே அது நிழற்கடிகை, மணற் கடிகை (ஹவர் கிளாஸ்), பெண்டுலம் கடிகாரம் என படிப்படியான வளர்ச்சியை பெற்றது. இப்படி பல்வேறு யுக்திகளை பின்பற்றி கடிகாரம் உருவாக்கப்பட்டுள்ளது.
இன்றைய டெக்னாலஜி யுகத்தில் நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் வாட்சில் மெயில், சமூக வலைதளங்கள், தொலைபேசி அழைப்பு என கிட்டத்தட்ட நேரம் பார்ப்பதற்காக மட்டுமின்றி பல்வேறு பயன்பாட்டுக்காக கையடக்க கணினியாகவே பயன்படுத்தி வருகிறோம்.
பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் மெக்கானிக்கல் கடிகாரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அப்படியே கடந்த 16ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்த கடிகாரங்கள் போர்டபில் வடிவம் பெற்றுள்ளது. இந்த பணியை ஐரோப்பியர்கள் முன்னெடுத்தாக தகவல். இப்படித்தான் கை கடிகாரங்கள் உயிர் பெற்றுள்ளன.
ஆரம்ப காலங்களில் அது எலைட் மக்களுக்கானதாக இருந்துள்ளது. பெரிய அளவிலான உற்பத்தியினால் அது அனைவரது கைகளையும் அணைத்து கொண்டுள்ளது. தொடக்க நாட்களில் நேரத்தை அறிந்து கொள்ள உதவிய வாட்ச், பின்னர் அலங்காரப் பொருட்களில் ஒன்றாகவும் மாறியுள்ளது.
இன்று உலகில் அதிக விலை கொண்ட ஆடம்பர வாட்ச்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
BR 03 ரஃபேல் வாட்ச்
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ’பெல் & ரோஸ்’ (Bell & Ross) நிறுவனமே இந்த BR 03 ரஃபேல் வாட்ச்சை வடிவமைத்தது. இது ஒரு ஸ்பெஷல் எடிஷன் வாட்ச். உலகின் சிறந்த போர் விமானங்களில் ஒன்றான ’ரஃபேல்’ விமானத்தின் உற்பத்தியாளருக்கு Tribute செலுத்தும் வகையில் இந்த வாட்ச் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரஃபேல் விமானமும் பிரான்ஸ் தயாரிப்புதான். ஆனால், அதன் உற்பத்தியாளர் 'தசால்ட் ஏவியேஷன்' (Dassault Aviation).
பெல் & ரோஸ் நிறுவனம் கடந்த 1992-ல் நிறுவப்பட்ட வாட்ச் நிறுவனம். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இந்நிறுவனம் என்றாலும் சுவிட்சர்லாந்து நாட்டில்தான் இதன் வாட்ச் உற்பத்தி செய்யப்படுகிறது. சதுர வடிவிலான இந்நிறுவனத்தின் வாட்ச் உலக அளவில் ஃபேமஸ்.
விமானங்களில் உள்ள காக்பிட்டில் (விமான ஓட்டியின் அறை) காணப்படும் கருவிகளை பிரதிபலிக்கும் வகையில் வாட்ச்களை வடிவமைத்து வருகிறது பெல் & ரோஸ். ஏவியேஷன், மரைன் மற்றும் விண்டேஜ் என மூன்று வகைகளில் வாட்ச்களை தயாரித்து வருகிறது.
இதன் Hydromax 11 100 M வாட்ச், கை கடிகாரப் பிரிவில் வாட்டர் ரெசிஸ்டன்ஸுக்கான கின்னஸ் சாதனையை வைத்துள்ளது. தொழில்முறை பயன்பாட்டை பிரதானமாக வைத்து இந்நிறுவனம் வாட்ச் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது.
இந்த சூழலில் கடந்த 2015-ல் ’தசால்ட் ஏவியேஷன்’ நிறுவனத்தின் ஐம்பதாண்டு நிறைவை கொண்டாடும் வகையில் BR 03 ரஃபேல் வாட்ச் உற்பத்தியை செய்துள்ளது.
BR 03 வாட்ச், ரஃபேல் ஜெட் வடிவமைப்பின் டிசைனை அடிப்படையாகக் கொண்டு ரஃபேல் வாட்ச் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கடிகாரத்தின் கேஸ் சதுர வடிவில் இருந்தாலும் அதன் பெசல் வட்ட வடிவில் இருக்கும். வாட்ச் கேஸின் அளவு 42 மில்லிமீட்டர் மற்றும் மேட் பிளாக் நிறம். ஆட்டோமெட்டிக் மெக்கானிக்கல் மூவ்மெண்டில் இது இயங்குகிறது. போர் விமானத்தின் தோற்றத்தை பிரதிபலிக்க அதே மேட் கிரே நிறத்தில் இந்த வாட்ச் டயல் உள்ளது.
தொழில்முறை பயன்பாட்டுக்கானது என்பதால் இந்த கடிகாரத்தில் 3 இடம் பெற்றிருக்கும் இடத்தில் Small Seconds டயல் இடம் பெற்றுள்ளது. அதே போல 9 இடம் பெற்றிருக்கும் இடத்தில் 30 நிமிட Chronograph டைமரும் இடம் பெற்றுள்ளது. இதில் பெல் & ரோஸ் மற்றும் ரஃபேல் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. அதோடு, ரஃபேல் விமானத்தின் சில்ஹவுட் படமும் இடம் பெற்றுள்ளது.
இந்த வாட்ச் 100 மீட்டர் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொண்டுள்ளது. இதன் ஸ்ட்ராப் கருப்பு நிற ரப்பரினால் செய்யப்பட்டுள்ளது.
இதன் விலை 4 முதல் 4.5 லட்சம் வரை இருக்கும் என தெரிகிறது. கடந்த 2015ல் இந்த வாட்ச் அறிமுகமாகி உள்ளது. அப்போது இதன் விலை 5200 யூரோஸ்.
இது ஒரு லிமிடெட் எடிஷன் வாட்ச், அதாவது ஒரே ஒரு முறை சிறப்பு உற்பத்தியாக செய்யப்பட்ட இந்த வாட்ச் மொத்தம் 500 பீஸ்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு, அவை டிமாண்ட் காரணமாக, வெளியிட்ட உடனே வேகமாக விற்றுத்தீர்ந்ததாக அப்போது வெளியான செய்திகள் தெரிவிக்கிறது.
Google Pixel 7 மற்றும் ஸ்மார்ட்-வாட்ச் சந்தையில் அறிமுகம்: விலை, சிறப்பம்சம் என்ன?
Edited by Induja Raghunathan