விரைவில் நிஜ ‘ஸ்க்விட் கேம்’ ரியாலிட்டி ஷோ: Netflix அளிக்கும் 4.56 மில்லியன் டாலர்கள் பரிசு!
நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் ஸ்க்விட் கேமை மையாம வைத்து புதிய ரியாலிட்டி ஷோவை உருவாக்கப் போவதாக அறிவித்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு $4.56 மில்லியன் ரொக்கப் பரிசு கிடைக்கும் என்றும், ரியாலிட்டி ஷோக்களிலேயே மிகப்பெரிய பரிசு தொகையாக இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் ’ஸ்க்விட் கேமை’ மையமாக வைத்து புதிய ரியாலிட்டி ஷோவை உருவாக்கப் போவதாக அறிவித்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு $4.56 மில்லியன் டாலர் ரொக்கப் பரிசு கிடைக்கும் என்றும், ரியாலிட்டி ஷோக்களிலேயே மிகப்பெரிய பரிசுத் தொகையாக இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மிரட்டும் த்ரில்லர் கதை அம்சத்துடன் நெட் ஃபிளிக்ஸில் வெளியாகி ஹிட்டடித்த கொரியன் வெப் தொடர் ‘ஸ்க்விட் கேம்’. இந்த வெப் சீரிஸ் உலகம் முழுவதும் நிலவும் வர்க்க முரண்பாடு, சமூக ஏற்றத்தாழ்வு, சுயநலம், சமத்துவமின்மை ஆகிய விஷயங்களை, குழந்தையாக இருக்கும் போது கொரிய மக்கள் விளையாடிய விளையாட்டுடன் இணைத்து நெற்றிப் போட்டில் அடித்தது போல் பேசியது.
குழந்தைகள் விளையாடக்கூடிய சாதாரண விளையாட்டில் வென்றால் மில்லியன் கணக்கில் பணம், தோற்றால் உடனடி மரணம் என்பதே வெப் சீரிஸின் கான்செப்ட்.
2021ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி வெளியான இந்த வெப் சீரிஸுக்கு உலகம் முழுவதும் பில்லியன் கணக்கில் ரசிகர்கள் உண்டு. இதன் இரண்டாவது சீசன் எப்போது வெளியாகும் என உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். கடந்த ஜனவரி மாதம் கூட நெட்ஃபிக்ஸ் இணை தலைமை நிர்வாக அதிகாரி டெட் சரண்டோஸ் விரைவில் ‘Squid Game 2’ வெளியாக வாய்ப்புள்ளது போல் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, கடந்த 12ம் தேதி அன்று நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஸ்கிவிட் கேம் வெப் சீரிஸின் 2ம் பாகத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. அது மட்டுமின்றி ஸ்க்விட் கேமின் எழுத்தாளர், இயக்குனர் மற்றும் நிர்வாக தயாரிப்பாளர் ஹ்வாங் டோங்-ஹ்யுகின் ’ஸ்க்விட் கேம்' முதல் சீசனை தயாரிக்க தனக்கு 12 ஆண்டுகள் ஆனதாகவும், ஆனால் 'ஸ்க்விட் கேம்' மிகவும் பிரபலமான நெட்ஃபிக்ஸ் தொடராக மாற 12 நாட்கள் மட்டுமே ஆனது.
“எழுத்தாளராக, 'ஸ்க்விட் கேம்' ஐ எழுதி இயக்கி வெளியிட்டதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். உலகெங்கிலும் உள்ள ரசிகர்களுக்கு எங்கள் நிகழ்ச்சியை பார்த்து நேசித்ததற்கு நன்றி,” என பதிவிட்டிருந்தார்.
அனைவரும் ஸ்க்விட் கேம் வெப் தொடரின் 2வது சீசனைக் காண காத்திருக்கும் நிலையில், நெட்ஃபிக்ஸ் ஸ்க்விட் கேமை அடிப்படையாகக் கொண்ட ஒரு ரியாலிட்டி ஷோவை உருவாக்கப் போவதாக அறிவித்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு $4.56 மில்லியன் ரொக்கப் பரிசு கிடைக்கும், இது ஒரு ரியாலிட்டி ஷோவிற்கான மிகப்பெரிய மொத்தப் பரிசாக இருக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஸ்க்விட் கேம் வெப் சீரிஸ் முழுக்க முழுக்க கொரிய மொழியில் உருவாக்கப்பட்டது. இதனை நெட் ஃபிளிக்ஸ் பல மொழிகளில் டப் செய்து வெளியிட்டதை அடுத்து, கொரிய மொழியில் இப்படியொரு வெப் தொடரா? என அனைவரும் ஆச்சர்யப்படும் வண்ணம் பிரபலமானது. இந்த வெப்சீரிஸ் நெட்ஃபிளிக்ஸில் ஒளிபரப்பாக ஆரம்பமான முதல் 28 நாட்களில் 1.65 பில்லியனுக்கும் அதிகமான மணிநேரம் பார்க்கப்பட்டது.
இப்படி உலகம் முழுவதும் ஸ்க்விட் கேம் வெப் சீரிஸுக்கு வெறித்தனமான ரசிகர்கள் இருப்பதால், நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது. “Squid Game: The Challenge” என்று பெயரில் 10 எபிசோட்களைக் கொண்ட புதிய ரியாலிட்டி ஷோவை லண்டனில் படமாக்க திட்டமிட்டுள்ளதாக பிரபல செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
ஸ்க்விட் கேம் வெப் சீரிஸைப் போல் தோல்வி அடையும் நபர்களுக்கு மரண தண்டனை கிடைக்காது என்றும், அதில் உள்ள சவால்களுடன் பல புதிய விஷயங்களை இணைந்து ரியாலிட்டி ஷோவை ஒளிபரப்பவும் நெட்ஃபிளிக்ஸ் திட்டமிட்டுள்ளது.
ஆங்கிலத்தில் - தருதர் மல்ஹோத்ரா | தமிழில் - கனிமொழி