உங்களது மன நலம், உடல் நலம், ஆன்ம நலங்களை மேம்படுத்தும் ’Nandoo’
மும்பை மற்றும் அமெரிக்காவில் செயல்படும் Nandoo செயலி ஒருவரின் ஒட்டுமொத்த நலனில் கவனம் செலுத்துகிறது.
மக்கள் அனைத்திற்கும் இணையத்தையே சார்ந்துள்ள போக்கு அதிகரித்து வருகிறது. சமூக ரீதியாகவும் தொழில் ரீதியாகவும் இணையத்தில் தொடர்ந்து இணைந்திருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. யாரும் அதிகம் வெளியில் செல்வதில்லை. இந்த போக்குதான் 2018-ம் ஆண்டு ’நந்தூ’ (Nandoo) என்கிற ஸ்டார்ட் அப்பைத் தொடங்க மிஹிர் ஷிண்டேவிற்கு உந்துதலளித்துள்ளது.
மிஹிர் தனது மைத்துனியின் வாழ்க்கைமுறையைக் கவனித்தபோதுதான் இதற்கான எண்ணம் தோன்றியுள்ளது.
”ஒருவர் மும்பையில் பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார். மற்றொருவர் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கிறார். நேரத்தை விலைமதிப்பற்ற பொருளாகவே இவர்கள் கருதுகின்றனர். இவர்களுக்கு ஓய்வு நேரம் கிடைக்கும்போதும் மிகவும் சோர்ந்து ஊக்கமின்றி இருப்பதை கவனித்தேன். இது Nandoo உருவாக்குவதற்கான துவக்கப்புள்ளியாக அமைந்தது,” என்றார் மிஹிர்.
மிஹிர் மற்றும் யாஷிகா ஷா, ஹான் ஜீ லின் மற்றும் ஜெயிம் கஜாமர்கா ஆகியோருடன் இணைந்து 2018-ம் ஆண்டு Nandoo தொடங்கினார்கள். இந்தச் செயலி ஒருவரின் மனம், உடல், ஆன்மா என ஒட்டுமொத்த நலனில் கவனம் செலுத்துகிறது. சுயநிதியில் இயங்கும் இந்த ஸ்டார்ட் அப்பின் அலுவலகம் நியூயார்க்கிலும் மும்பையிலும் உள்ளது.
”நாங்கள் முதல் ’walk’ செயலியாக தொடங்கி விரைவில் மற்ற வடிவங்களையும் அறிமுகப்படுத்தினோம்,” என்றார் மிஹிர்.
Nandoo ஒரு நபரின் ஒட்டுமொத்த நலனில் கவனம் செலுத்துவது மட்டுமல்லாது பயனர் நடந்த அடிகளின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு ரிடீம் செய்துகொள்ளும் வகையில் அவார்டுகளையும் வழங்குகிறது. அத்துடன் இதில் தகவல்கள் நிறைந்த உள்ளடக்கமும் உள்ளது.
செயலி
இந்தச் செயலியில் மூன்று பிரிவுகள் உள்ளன – மன நலம், ஆன்ம நலம் மற்றும் உடல் நலம். இதன் மன நலம் பகுதியில் உலகில் நடப்பவற்றை நமது மனதை வலுப்படுத்தும் வகையில் வழங்கப்படுகிறது. இவை உள்ளடக்க வடிவில் வழங்கப்படுகிறது. ஆன்ம நலம் பகுதியில் மன அழுத்தத்தை சமாளிப்பதற்காக சுவாசத்தை கட்டுப்படுத்துவதற்கு இந்தச் செயலியில் வழிகாட்டப்படுகிறது.
”இந்த அம்சமானது சுவாசப் பயிற்சிக்கு மிகவும் எளிய வகையில் வழிகாட்டுகிறது,” என்றார் மிஹிர்.
உடல் நலம் சார்ந்த பகுதியில் பயனர் தினமும் தொடர்ந்து 10 நிமிடங்கள் நடக்கவேண்டும். இவர்கள் இந்தச் செயலியின் முன்னணி போட்டியாளர்களுடன் போட்டியிடவேண்டும். ”பயனர்கள் தொடர்ந்து ஊக்கத்துடன் இருக்க இத்துடன் சிறு வெகுமதிகளையும் இணைத்துள்ளோம்,” என்றார் மிஹிர்.
Nandoo
Nandoo என்கிற செயலி மன அழுத்தத்தை நிர்வகிப்பதற்காக நாம் நடக்கவும், படிக்கவும், மூச்சுப்பயிற்சி செய்யவும் தினமும் பயன்படுத்தும் செயலி மட்டுமே அல்ல. இது ’Nandoo வாழ்க்கை’ வாழ்வதற்கான முயற்சியாகும் என மிஹிர் விவரித்தார்.
இக்குழுவினர் இன்றைய நவீன வாழ்க்கைக்குப் பொருந்தும் வகையில் ஆரோக்கியத்தை மறுவரையறை செய்வதாக அவர் குறிப்பிட்டார். இன்றைய தலைமுறையினர் இந்த அனுபவத்தை உண்மையான வாழ்க்கை முறையாக மாற்றிக்கொள்ளவேண்டும் என்பதே இதன் நோக்கம். பெரும்பாலான தொழில்முனைவோர் போன்றே இந்த முயற்சியிலும் சவால்கள் இருந்தன.
”நாங்கள் சுயநிதியில் இயங்குவதால் பெரும்பாலும் எங்களது வழக்கமான பணியில் முழுநேரமாக செயல்பட்டு மாலை நேரங்களிலும் இரவு நேரங்களிலும் வார இறுதி நாட்களிலும் Nandoo பணிகளில் ஈடுபடுகிறோம். இதனால் ஓய்வு என்பது சாத்தியமில்லாமல் போகிறது,” என்றார் மிஹிர்.
குழு
ஃபோர்ப்ஸ் டெக் ஃபெலோவான மிஹிர் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். இந்த முயற்சியைத் தொடங்குவதற்கு முன்பு B&H Video Pro நிறுவனத்தில் மொபைல் செயலி பிரிவின் தலைமைப்பொறுப்பில் இருந்தார். அமெரிக்காவில் செயல்படும் இந்நிறுவனம் ஃபோட்டோகிராபி மற்றும் வீடியோ சாதனங்களின் மிகப்பெரிய சில்லறை வர்த்தக நிறுவனமாகும்.
”மொபைல் செயலி உருவாக்குவதிலும் நிர்வகிப்பதிலும் அனுபவம் பெற்றுள்ளேன்,” என்றார் மிஹிர்.
யஷிகா ஷா முதலீட்டு வங்கி மற்றும் ஸ்ட்ராடெஜி சார்ந்த பின்னணி கொண்டவர். நிதிச்சேவை பிரிவில் பணிபுரிந்துள்ளார்.
ஹான் ஜீ லின் Nandoo தளத்தின் ஃப்ரண்ட் என்ட் முயற்சிகள் அனைத்திற்கும் தலைமை வகிக்கிறார். இவர் கூகுளின் மெட்டீரியல் டிசைன் ஃபோரம் மூலம் பல்வேறு விருதுகளை வென்றுள்ளார். வேடிக்கையான, சுவாரஸ்யமான விளம்பரங்களை உருவாக்கி பல்வேறு காப்புரிமைகளையும் பெற்றுள்ளார்.
ஜேமி கஜாமர்கா Nandoo செயலியின் பேக் என்ட் முயற்சிகளுக்கு தலைமை வகிக்கிறார். செயலி 24X7 இயங்குவதை உறுதிசெய்கிறார். இவர் செயலி உருவாக்குவதில் நிபுணத்துவம் பெற்றவர். இதற்கு முன்பு, நெட்ஃப்ளிக்ஸ் முன்னாள் இணை நிறுவனர் நிறுவிய அமெரிக்க நிறுவனமான Moviepass பேக் என்ட் தலைவராக இருந்தார்.
சந்தை மற்றும் வருவாய்
உடல் மற்றும் மன நலம் சார்ந்த செயலிகள் ஆரோக்கியம் மேம்பட உதவும் நிலையில் வணிக ரீதியாகவும் சிறப்பாக உள்ளது. ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு சார்ந்த செயலிகளுக்கான தேவை கடந்த மூன்றாண்டுகளில் 330 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் 25 சதவீத பயனர்கள் தங்களது செயலியை ஒரு வாரத்திற்கு பத்து முறைக்கும் அதிகமான பயன்படுத்துவதாகவும் ’ஃப்ளரி அனாலிடிக்ஸ்’ சமீயத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
நடப்பதற்கு வெகுமதிகளை வழங்கும், சுயநிதியில் இயங்கும் StepSetGo போன்றவை இந்தப் பிரிவில் செயல்படும் முக்கிய நிறுவனங்களாகும். மேலும் Step Tracker, Pedometer போன்றவை இந்தப் பகுதியில் செயல்படும் மற்ற நிறுவனங்களாகும்.
தற்போது முகேஷ் பன்சல் மற்றும் அன்சால் நகோரியின் Curefit மிகப்பெரிய போட்டியாளராகும். இந்நிறுவனம் சமீபத்தில் 45 மில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ளது.
Nandoo ஆரோக்கியத்தில் முழுமையான கவனத்துடன் செயல்படுவதே அதை வேறுபடுத்திக் காட்டுகிறது. இந்நிறுவனம் நிதி திரட்டவும் திட்டமிட்டுள்ளது.
வருவாய் ஈட்டுவதற்கு முந்தைய நிலையில் இருப்பதாகவும் இந்தச் செயலியில் 2,18,000 பயனர்கள் இணைந்திருப்பதாகவும் குழுவினர் தெரிவிக்கின்றனர். தற்போது பயனர்கள் இந்தச் செயலியை ஏற்றுக்கொள்ளவைப்பதில் குழுவினர் கவனம் செலுத்துவதாக மிஹிர் தெரிவிக்கிறார். எனினும் பி2பி வருவாய் மாதிரியில் செயல்பட இக்குழு திட்டமிட்டுள்ளது.
”விளம்பரங்களைப் பொறுத்தவரை கார்ப்பரேட் மூலம் வருவாய் ஈட்டப்படும். சந்தாக்களைப் பொறுத்தவரை வாடிக்கையாளர் கட்டணம் மூலம் வருவாய் ஈட்டப்படும். தற்போது இரண்டு வகையிலும் வருவாய் ஈட்ட குழுவினர் கவனம் செலுத்தி வருகின்றனர்,” என்றார் மிஹிர்.
வருங்கால திட்டம் குறித்து அவர் கூறும்போது,
”Nandoo சமூகத்தை இரட்டிப்பாக்கும் முயற்சியில் உள்ளோம். மன நலம், உடல் நலம், ஆன்ம நலம் தொடர்பான சுவாரஸ்யமான அம்சங்களை இணைத்து பயனர்கள் விரும்பும் வகையில் உருவாக்கி வருகிறோம்,” என்றார்.
ஆங்கில கட்டுரையாளர்: சிந்து கஷ்யப் | தமிழில்: ஸ்ரீவித்யா