Brands
YS TV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ஃப்ரெஷ் விளைச்சல்களுக்கான விநியோகச் சங்கிலி அமைப்பை தொழில்நுட்ப உதவியுடன் உருவாக்கியுள்ள ஸ்டார்ட் அப்!

விவசாயத் தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்பான 'Ninjacart' உடன் இணைந்துள்ள விவசாயிகளின் விளைச்சல்களுக்கு நியாயமான விலை கிடைக்கிறது. அத்துடன் இந்நிறுவனம் விரைவில் அழுகக்கூடிய பொருட்களைக் கையாள சிறப்பான விநியோக சங்கிலி அமைப்பை தொழில்நுட்ப உதவியுடன் உருவாக்கியுள்ளது.

ஃப்ரெஷ் விளைச்சல்களுக்கான விநியோகச் சங்கிலி அமைப்பை தொழில்நுட்ப உதவியுடன் உருவாக்கியுள்ள ஸ்டார்ட் அப்!

Tuesday March 26, 2019 , 5 min Read

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் உள்ள சில்லறை வர்த்தக கடைகளுக்கு தினமும் சுமார் 500 டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் வெறும் இரண்டரை மணி நேரத்திலேயே விநியோகம் செய்யப்படுகிறது. நிஞ்சாகார்ட் (Ninjacart) என்கிற ஸ்டார்ட் அப்பின் செயல்பாடுகளால் இது சாத்தியமாகியுள்ளது. ஒரு நாள்கூடத் தவறாமல் தினமும் 99.88 சதவீதம் துல்லியத்தன்மையுடன் விநியோகம் செய்கிறது.

பல ஆண்டு கடின உழைப்பு, சந்தை குறித்த ஆழ்ந்த புரிதல், தொழில்நுட்பத்தை புதுமையான முறையில் பயன்படுத்துதல் போன்றவற்றின் காரணமாகவே இந்நிறுவனத்தால் இத்தகைய துல்லியத்தன்மையுடன் பெரியளவில் செயல்படமுடிகிறது. திறனை மேம்படுத்தவேண்டும் என்பதும் சிறு திருட்டுகளைத் தடுக்கவேண்டும் என்பதுமே இந்நிறுவனத்தின் நோக்கமாகும்.

பெங்களூருவில் தலைமையகத்தைக் கொண்டுள்ள இந்த ஸ்டார்ட் அப் நான்காண்டுகளாக செயல்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் பி2சி பிரிவில் கவனம் செலுத்தத் துவங்கியது. ஆனால் வணிக கண்ணோட்டத்தில் நீண்ட கால அடிப்படையில் இது உகந்ததல்ல என்பதை உணர்ந்து பி2பி மாதிரியில் கவனம் செலுத்தியது. இதில் விவசாயிகளின் விளைச்சலையும் சில்லறை வர்த்தக கடைகளையும் எந்தவித தடையும் இன்றி இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டது.

நிஞ்சாகார்ட் இணை நிறுவனர் வாசுதேவன் சின்னதம்பி கூறுகையில்,

“விநியோக சங்கிலி தடைபட்டிருப்பதையும் அதை எங்களால் இணைக்கமுடியும் என்பதையும் நாங்கள் உணர்ந்தோம். நாங்கள் தற்போது செயல்படும் மாதிரி சிறப்பாக இருக்கும் என்பதைக் கண்டறிய சுமார் ஓராண்டு எடுத்துக்கொண்டது என்றாலும் இதில் வாய்ப்புகள் அதிகமாகவே இருந்தது,” என்றார்.

நிஞ்சாகார்ட் துல்லியமாக விநியோகம் செய்யும் செயல்முறையானது மிகச்சரியான கணிப்புகளுடன் துவங்குகிறது. “வாடிக்கையாளர் நாளைய விநியோகத்திற்கு இன்று ஆர்டர் செய்கிறார். அதாவது கொள்முதலும் விற்பனையும் ஒரே நாளில் நடக்கிறது,” என்றார் இணை நிறுவனர் மற்றும் சிஇஓ திருக்குமரன் நாகராஜன்.

விவசாயி அறுவடை செய்வது குறித்த தகவல்களைப் பெறுவதும் புரிந்துகொள்வதுமே முதல்கட்ட நடவடிக்கையாகும். ஒவ்வொரு காலத்திலும் கிடைக்கும் காய்கறிகள் மற்றும் பழங்கள் குறித்த கண்ணோட்டத்தை இது குழுவினருக்கு வழங்குகிறது. இதனால் நிஞ்சாகார்ட் தேவை மற்றும் விநியோகத்தை தெரிந்துகொண்டு விவசாயிகள் தரப்பிலிருந்து பெறவேண்டியதை ஒரு வாரத்திற்கு முன்பே தெரிவித்துவிடுகிறது. அடுத்ததாக என்ன தேவை என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம். இதற்கு வாடிக்கையாளர்கள் முன்பு என்ன ஆர்டர் செய்தார்கள், எந்த இடைவெளியில் ஆர்டர் செய்கிறார்கள் போன்ற முழுமையான தகவல்களை இந்நிறுவனம் பெற்றுக்கொண்டது. எவற்றை கொள்முதல் செய்யலாம் என்பதைத் தெரிந்துகொள்ள இது உதவுகிறது.

தொழில்நுட்பம்

விவசாயிகள் தரமான விளைச்சலை வழங்குவது குறித்து நிஞ்சாகார்ட் அவர்களுக்கு விளக்குகிறது. அதன் பிறகு சேகரிப்பு மையங்களில் விளைச்சல்கள் அனைத்தும் பெட்டிகளில் பேக் செய்யப்படுகிறது. பெங்களூருவில் மட்டும் 22 சேகரிப்பு மையங்கள் உள்ளன.

இந்த ஸ்டார்ட் அப்பின் தளத்தின் சுமார் 7,000 விவசாயிகள் இணைந்துள்ளனர். ஆனால் ஒரு மாதத்திற்கு சராசரியாக 2,000 பேர் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். தினமும் விளைச்சல்கள் காலை 4 மணி முதல் 6 மணி வரை பெறப்படும். சில விவசாயிகள் விளைச்சலைக் கொண்டு சேர்க்க 400 கிமீ வரை பயணம் செய்கின்றனர்.

”விளைச்சல் எடை பார்க்கப்பட்டு டேக் செய்யப்பட்டதும் செயலி வாயிலாக விநியோகிக்கப்படும் அளவு மற்றும் விலை குறித்த தகவல் அனுப்பப்பட்டு  அடுத்த நாளே விவசாயியின் வங்கி கணக்கில் தொகை செலுத்தப்படும்,” என்றார் திருக்குமரன்.

பொருட்களை சேமித்து வைத்து விநியோகிக்கும் மையங்களுக்கு நிஞ்சாகார்ட் பெட்டிகளை அனுப்பிவிடும். இந்த ஸ்டார்ட் அப் பொருட்களை நகர்த்த புதுமையான முறையில் டாலியைப் பயன்படுத்தப்படுகிறது. பொருட்களை ஏற்றி இறக்குவதற்கு வழக்கமாகப் பின்பற்றப்படும் முறையைக் காட்டிலும் வேகமாக ஏற்றவும் இறக்கவும் இந்த டாலி உதவுகிறது.

நிறுவனத்திற்குள்ளாகவே உருவாக்கப்பட்ட செயலி வாயிலாக ஒட்டுமொத்த செயல்முறையும் கண்காணிக்கப்படுகிறது. அத்துடன் குழுவினர் விரைவாக விநியோகம் செய்யும் விதத்தில் பெட்டிகள் முறையாக வரிசைப்படுத்தி வைக்கப்படவும் இந்த செயலி உதவுகிறது.

”இதற்குக் காரணம் எங்களது அதிநவீன விநியோகச் சங்கிலி அல்காரிதம்,” என்றார் வாசுதேவன்.

விநியோகச் சங்கிலி இயக்கவியல்

நிஞ்சாகார்ட் மற்ற லாஜிஸ்டிக்ஸ் வணிகங்கள் போல செயல்படுவதில்லை. வழக்கமான வகைப்படுத்தும் முறையை இந்நிறுவனம் பின்பற்றுவதில்லை. ”அனைத்தும் செயலி வாயிலாகவே இயக்கப்படுவதால் வகைப்படுத்தி பிரித்துவைக்கும் செயல்பாடுகள் இல்லை. மற்ற மின்வணிக நிறுவனங்களில் இருந்து நாங்கள் பணியிலமர்த்திய விநியோக சங்கிலி நிபுணர்கள் இதைக் கண்டு வியந்தனர்,” என்றார் திருக்குமரன்.

திறனை மேம்படுத்திய விதம் குறித்து ஒரு உதாரணத்தை வாசுதேவன் சுட்டிக்காட்டினார்.

“எங்கள் கிடங்கிற்கு வரும் தக்காளிகளை வகைப்படுத்த வழக்கமாக ஒரு மணி நேரம் ஆகும். ஆனால் தற்போது 12 நிமிடங்கள் மட்டுமே தேவைப்படுகிறது,” என்றார்.

அதன்பிறகு விநியோக மையங்களில் இந்தப் பெட்டிகள் டெலிவரிக்காக வாகனங்களில் ஏற்றப்படும். தினமும் காலை 2 மணிக்கு டெலிவரி பணி ஆரம்பமாகும். அனைத்தும் செயலி வாயிலாகவே இயக்கப்படுவதால் பெட்டிகளில் பெயர் எழுதப்படுவதில்லை. ஒவ்வொரு பெட்டியிலும் ஆர்எஃப்ஐடி அட்டைகள் இருக்கும். எந்த காய்கறிகள் மற்றும் பழங்கள் டெலிவர் செய்யப்படுகிறது என்பதை நிறுவனம் இதன் மூலமாகவே தெரிந்துகொள்ளலாம்.

இத்தனை ஆண்டுகளில் நிஞ்சாகார்ட் அதன் செயல்பாடுகளை விரிவடையச் செய்து வளர்ச்சியடைந்துள்ளது. 2016-ம் ஆண்டில் இந்நிறுவனம் ஒரு நாளைக்கு ஏழு டன் அளவு மட்டுமே நிர்வகித்தது. இன்று தினமும் 500 டன் வரை நிர்வகித்து வருகிறது. தற்போது பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், டெல்லி, மும்பை ஆகிய பகுதிகளில் இந்த ஸ்டார்ட் அப் செயல்பட்டு வருவதால் இந்த அளவு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. சமீபத்தில் புனே மற்றும் அஹமதாபாத்திலும் இந்நிறுவனம் அதன் செயல்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்நிறுவனம் கையாளும் பொருட்களின் அளவு அதிகரித்து வரும் நிலையில் சேகரிக்கும் பொருட்களின் வகைகள் அதிகரித்திருப்பது, சரியான நேரத்தில் வாகனங்களை அனுப்புவது, கிடங்கின் சேமிப்புத் திறன் உள்ளிட்ட பகுதிகளில் சிக்கல்களை சந்திக்கிறது. இந்த பயணத்தில் இக்குழுவினர் அதிகம் தெரிந்துகொண்டுள்ளனர்.

உதாரணத்திற்கு டெலிவரி முடிந்ததும் குழுவினர் பெட்டி காலியாகும் வரை காத்திருக்காமல் திரும்பும்போது அவற்றை சேகரிக்கின்றனர். டெலிவர் செய்யப்படும் இடத்திலிருந்து வாகனங்கள் துல்லியமான நேரத்தில் கிளம்புகிறது. ஏனெனில் ஒட்டுமொத்த டெலிவரி செயல்முறையும் காலை 6 மணி முதல் 8.30 மணிக்குள் முடிந்துவிடவேண்டும்.

தீர்வுகாணவேண்டிய சவால்கள்

நிஞ்சாகர்ட் அதன் செயல்பாடுகளின் திறனை மேம்படுத்த பல்வேறு சவால்களை எதிர்கொள்ளவேண்டியுள்ளது. கடை உரிமையாளர்களிடமிருந்து பணம் பெறுவதை உறுதி செய்தல், சரியான பாதையைக் கண்டறிதல், திருட்டுகளைத் தவிர்க்கத் தேவையான பாதுகாப்பு வழங்குதல் போன்றவை இந்த சவால்களில் அடங்கும். உதாரணத்திற்கு இந்தப் பெட்டிகள் திறக்க முடியாதவாறு இதில் டேக் இணைக்கப்பட்டிருக்கும். தகவல் பெற்ற பிறகுதான் இதைத் திறக்கமுடியும். ஓட்டுநருக்கு கட்டணம் செலுத்த ஒவ்வொரு கடை உரிமையாளருக்கும் ஒரு ஓடிபி அனுப்பப்படும்.

முக்கியமாக காலியான பெட்டிகள் அதே சேகரிப்பு மையத்திற்கு எடுத்துசெல்லப்படவேண்டிய கட்டாயம் இல்லை. விநியோக சங்கிலி திறம்பட இருப்பதை நிஞ்சாகார்ட் தொழில்நுட்பம் உறுதிசெய்கிறது.

”அடிப்படையான சிறியளவிலான புதுமைகள் பெரியளவில் செயல்படுத்தப்படுகிறது,” என்றார் திருக்குமரன். இதனால் செயல்பாடுகள் லாபகரமாக உள்ளது.

முன்பு நிஞ்சாகார்ட் நிறுவனத்திற்கு பெங்களூரு போன்ற பகுதியில் ஒரு கிலோவிற்கு இரண்டு ரூபாய் இழப்பு ஏற்பட்டது. ஆனால் இன்று தொழில்நுட்பம் சார்ந்த விநியோக சங்கிலி காரணமாக ஒரு கிலோவிற்கு ஒரு ரூபாய் லாபம் ஈட்டுகிறது.

2016-ம் ஆண்டில் 150 ஆக இருந்த வாடிக்கையாளர்கள் தொகுப்பு இன்று தினசரி சுமார் 5,000 விநியோகங்களுடன் 8,500 ஆக உயர்ந்துள்ளது. ”பெரியளவில் செயல்படும் சில்லறை விற்பனையாளருக்கு ஒரு பெரிய ட்ரக்கை நிரப்பி அனுப்புவது சுலபம். ஆனால் ஆயிரம் சிறிய கடைகளுக்கு விநியோகிப்பது சவால் நிறைந்தது,” என்கின்றனர் நிறுவனர்கள்.

”அதிகளவிலான பொருட்களை குறைந்த நேரத்தில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு அனுப்பி வைக்கும் விநியோகச் சங்கிலி மென்பொருள் உலகில் எங்கும் இல்லை,” என்கிறார் திருக்குமரன்.

உதாரணத்திற்கு வளர்ச்சியடைந்த சந்தைகளில் வெப்பநிலை கட்டுப்படுத்தப்படும் சூழலில் காய்கறிகளும் பழங்களும் அனுப்பிவைக்கப்படுகிறது. ஆனால் இங்கு அத்தகைய ஆடம்பர வசதிகள் இல்லை.

எதிர்காலத் திட்டங்கள்

எதிர்காலத்தில் தரவுகள் சார்ந்து கணிப்புடன்கூடிய மாதிரியில் இந்த ஸ்டார்ட் அப் செயல்பட தயாராகி வருகிறது. ”வருகை, விநியோகம், விலை என 40 வெவ்வேறு சந்தைகள் குறித்த தகவல்கள் எங்களிடம் உள்ளது. எதிர்காலத்தில் காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை, உற்பத்தி அளவு போன்றவற்றை எங்களால் கணிக்கமுடியும். தற்சமயம் எங்களிடம் அதிக தரவுகள் இல்லை. ஆனால் எதிர்காலத்திற்காக அவற்றை உருவாக்கி வருகிறோம்,” என்றார் திருக்குமரன்.

பழங்களையும் காய்கறிகளையும் சேமித்து வைக்கும் வசதியையும் நிஞ்சாகார்ட் முயற்சித்துப் பார்த்தது. சோதனை முயற்சியாக நீண்ட நாட்கள் நீடித்திருக்கும் உருளைக்கிழங்கு, வெங்காயம் போன்ற காய்கறிகளை சேமித்து வைத்து அதன் விலையை துல்லியமாக கணித்து லாபத்துடன் விற்பனை செய்தது. ஆனால் இந்த நடவடிக்கையை நிறுத்திக்கொண்டது.

”இது ட்ரேடிங் போல் மாறிவிடும். எங்களது முக்கிய நிபுணத்துவம் இதில் இல்லை. விவசாயிகளுக்கு நியாயமான விலையை கொடுக்கவே விரும்புகிறோம்,” என்றார் இந்நிறுவனத்தின் சிஇஓ.

இந்நிறுவனத்தின் தொழில்நுட்ப வலிமையை வைத்துப் பார்க்கும்போது நிஞ்சாகார்ட் போட்டியாளர்கள் சுலபமாக இவர்களை எதிர்த்து நின்று வெற்றியடைய முடியாது என நிறுவனர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். ”இதேபோன்ற செயல்பாடுகளை உருவாக்க விரும்பும் எவரும் குறைந்தபட்சம் இரண்டாண்டுகள் பாடுபடவேண்டும். இது மிகவும் கடினமானது,” என்றார் திருக்குமரன். இவை அனைத்தும் 30 பேர் அடங்கிய தொழில்நுட்பக் குழுவால் சாத்தியமானது.

”எங்களது தொழில்நுட்பத் தளம் வளர்ச்சியடையக்கூடியது. எளிதாக மாற்றியமைக்கூடியது. பெங்களூரு போன்ற பெருநகரங்களிலும் செயல்படுத்தலாம் அதேசமயம் சூரத் அல்லது வதோதரா போன்ற பகுதியிலும் செயல்படுத்தலாம்,” என்றார் வாசுதேவன்.

வணிக ரீதியாக இது சாத்தியப்படுவதற்கான காரணம் இந்தச் சந்தையானது 180 பில்லியன் டாலர் மதிப்புடையது. ஆண்டிற்கு 9 சதவீதம் வளர்ச்சியடைந்து வருகிறது. அத்தியாவசிய பொருள் என்பதால் சந்தையின் நிலைத்தன்மையும் அதிகம்.

விவசாயிகளிடமிருந்து விளைச்சலை பெற்றுக்கொள்ளும் நேரம் முதல் கடைகளில் விநியோகிக்கப்பட்டு காலியான பெட்டிகள் கிராமங்களைச் சென்றைடைவது வரை அனைத்தும் 36 மணி நேரத்திற்குள் முடிந்துவிடுகிறது.

“எங்கள் கடை மூடப்படுவதே இல்லை,” என்கிறார் திருக்குமரன்.

ஆங்கில கட்டுரையாளர் : திம்மையா பூஜரி | தமிழில் : ஸ்ரீவித்யா