5 லட்சம் முதலீட்டில் துவங்கி, ரூ.470 கோடி வருவாய் ஈட்டும் கால்நடை தீவன நிறுவனம்!

கொல்கத்தாவைச்சேர்ந்த அன்மோல் பீட்ஸ் நிறுவனம், இந்தியாவின் 20 மாநிலங்களில், கால்நடை, மீன்கள், இறால் உள்ளிட்டவற்றுக்கான பல வகை தீவணங்களை உற்பத்தி செய்கிறது.
8 CLAPS
0

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அமீத் சரோகி, பெங்களூரு ராமையா தொழில்நுட்பக் கழகத்தில் பொறியியல் பயின்றார். கோடை விடுமுறையில் குடும்ப உறுப்பினர்களைக் குறிப்பாக ராம்நகரில் உள்ள மாமாவை பார்க்க பீகார் வருவார்.

அவரது மாமா, மளிகைக் கடை நடத்தியதோடு, கோழிகளுக்கான தீவனங்களையும் விற்பனை செய்தார். ஓய்வு நேரத்தில் மாமாவுக்கு உதவிய அமீத், கால்நடை தீவனங்கள் தயாரிப்பு மற்றும் விநியோக்கத்தில் இடைவெளி இருப்பதை கவனித்தார்.

“தீவனங்கள் குறைவாகக் கிடைத்தன. அப்போது பீகார் மாநிலத்தில் தீவனங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் அதிகம் இருக்கவில்லை,” என்கிறார் அமீத்.

பொறியியல் படிப்பை முடித்ததும் பீகார் திரும்பியதும், கால்நடை தீவன தயாரிப்பு, விநியோகத்தில் உள்ள இடைவெளியை நிரப்பும் ஐடியாவில் கவனம் செலுத்தினார்.

தனது ஐடியாவை செயல்படுத்த ஒரு ஆலை இடத்தை வாடகைக்கு எடுத்துக்கொண்டார். முஸாபர்பூரில் ஒரு ஆலையை வாடகைக்கு எடுத்து, தனது தந்தையிடம் இருந்து ரூ.5 லட்சம் கடன் வாங்கி, 2000 ஆண்டில் தொழில்முனைவு பயணத்தைத் துவக்கினார்.

ஆரம்ப நாட்களில், ஆலைப் பணிகளை செய்வதில் அமீத் தயக்கம் காட்டவில்லை. பல வகையான வேலைகளைக் கற்றுக்கொண்டார். தீவனங்கள் தரம் தொடர்பாக மாமாவிடம் கேட்டுத் தெரிந்து கொள்வார்.

இப்படி தான் அன்மோல் பீட்ஸ் (Anmol Feeds) நிறுவனம் உண்டானது. இன்று நிறுவனம், பலவகையான கால்நடை, மீன்கள், இறால் தீவனங்களை உற்பத்தி செய்து விற்கிறது.

தொழில்நுட்பம் மூலம் வளர்ச்சி

டிஜிட்டல்மயமாக்கல் மூலம் தான் வர்த்தக வளர்ச்சி சாத்தியமாவதாக அடிக்கடி சொல்லப்படுகிறது. அன்மோல் நிறுவனமும் இதற்கு விதிவிலக்கல்ல. பொறியாளரான அமீத், தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தார். பெங்களூருவில் இருந்து பீகார் திரும்பிவர், தொழில்நுட்பத்தை அணுக அதிக வழியில்லாதததையும் உணர்ந்திருந்தார்.

மேலும், திறன் மிக்க ஊழியர்கள் இல்லாதது, அதிகாரிகள் அலட்சியம் ஆகிய சவால்களையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இத்தகைய பல தடைகளை எதிர்கொள்வது இன்னும் பெரிய சவாலாக இருந்தது.

இருப்பினும் அமீத் விடாமுயற்சியுடன் செயல்பட்டு, வர்த்தகத்தில் தொழில்நுட்ப பயன்பாட்டை கொண்டு வந்தார்.

தானியங்கள் மற்றும் அவற்றின் புரதம், ஆற்றலை கணக்கிட உதவும் அதிநவீன இயந்திரங்களை நிறுவனம் கொண்டிருப்பதாகவும், செயல்பாடுகளை மேம்படுத்த SAP மற்றும் ERP சாப்ட்வேர் அமைப்புகளை பயன்படுத்துவதாகவும் கூறுகிறார்.

டெலிவரி வாகனங்களைக் கவனிப்பதற்கான சொந்த மென்பொருளையும் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

“நம்முடைய நாட்டில் லாஜிஸ்டிக்ஸ் செலவு 14 சதவீதமாக இருக்கிறது. உலகின் மற்ற நாடுகளில் இது 8 சதவீதமாக இருக்கிறது. உலகுடன் ஒப்பிடும் போது நாம் 6 சதவீதம் செயல்திறன் இல்லாமல் இருக்கிறோம்,” என்கிறார் அமீத்.

தாங்கள் உருவாக்கியுள்ள ‘e-Parivahan’ மென்பொருள் லாஜிஸ்டிக் செலவுகளை குறைக்க உதவினாலும், இன்னும் நிறைய செய்ய வேண்டியிருக்கிறது என்கிறார்.

நிறுவனம் 2004ல் கொல்கத்தாவில் வர்த்தக அலுவலகத்தை அமைத்தது. உத்திரபிரதேச, பீகார், மேற்குவங்கம், ஜார்கண்ட், ஹரியானா மற்றும் ஜம்மூ-காஷ்மீரில் உற்பத்தி ஆலைகள் கொண்டுள்ளது.

மேலும், 2014 ல் Nutri Choice எனும் பெயரில் பல வகை தயாரிப்புகளையும் அறிமுகம் செய்தது.

நிறுவனம் திரட்டிய நிதி தொடர்பான தகவல்களை தெரிவிக்காவிட்டாலும், இடையே டெர்ம் லோன் பெற்றதாகக் கூறுகிறார். தற்போது நிறுவனம் கடன் இல்லாமல் இருப்பதாகவும் கூறுகிறார்.

எஸ்.எம்.பிஸ்டோரி அணுகக் கிடைத்த நிறுவன நிதி நிலை விவரங்கள் படி, 2020 நிதியாண்டில் ரூ.470 கோடி வருவாய் ஈட்டியது. நிறுவனம், சரோகி அக்ரோவேர் மற்றும் ஹெர்பல் இண்டஸ்டிரிஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய Nouriture குழுமத்தின் அங்கமாக இருக்கிறது. இவற்றின் மொத்த விற்றுமுதல் ரூ.600 கோடியாக இருக்கிறது.

கோவிட்-19 சவால்

மற்ற நிறுவனங்கள் போலவே இத்துறைக்கும் கோவிட்-19 பெரும் சவாலாக அமைந்துள்ளது.

டிஜிட்டலின் அருமையை மற்றும் தொழிலில் தாக்குபிடித்து வளர தொழில்நுட்பத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்பதை உணர்ந்துள்ளோம் என்கிறார் அமீத்.

மேலும், இரண்டாம் மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்களில் உள்ளூர் பொருளாதாரம் வளரும் போக்கும் உருவாகி இருக்கிறது. இருப்பிடன் என்பது இனியும் முக்கியம் இல்லை என்கிறார் அமீத்.

சிறிய நகரங்கள் பெரும் நகரங்களுக்கு ஈடானவை மற்றும் அதே போன்ற வசதிகளைக் கொண்டிருக்கும் வாய்ப்புள்ளவை என்கிறார். கடந்த 2 மாதங்களாக அலுவலகம் செல்லவில்லை என்றாலும் அதனால் எந்த பாதிப்பும் இல்லை என்கிறார்.

வரும் ஆண்டுகளில் தொழில்நுட்ப நிறுவனமாக உருவாக விரும்புவதாகக் கூறுகிறார். நிறுவன இணையதளத்தை வலுவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவிக்கிறார். பீகார் மற்றும் மேற்கு வங்கத்தில் ஆலைகள் அமைப்பதோடு, தண்ணீர் தீவனத் தயாரிப்புகளை விரிவாக்கவும் திட்டமிட்டிருப்பதாகக் கூறுகிறார்.

ஆங்கிலத்தில்: பவ்யா கவுசல் | தமிழில்: சைபர் சிம்மன்

Latest

Updates from around the world