70 ஆயிரம் ரூபாய் முதலீடு, 2 ஆண்டுகளில் 32 லட்ச ரூபாய் வருவாய் ஈட்டும் வணிகம்!

2017-ம் ஆண்டு மாதுரி அகர்வால் தொடங்கிய இந்நிறுவனம் இத்தகைய வெற்றியும், வளர்ச்சியும் அடைந்தது எப்படி?
909 CLAPS
0

மாதுரி அகர்வால் முதலீடு தொடர்புடைய ஆலோசனைகள் வழங்கும் வழக்கறிஞர். ’வீவ்ஸ் ஆஃப் ட்ரெடிஷன்’ (Weaves of Tradition) என்கிற நிறுவனத்தின் நிறுவனரான இவர், இந்த ஆன்லைன் போர்டலில் புடவைகள், துணி வகைகள், துப்பட்டாக்கள், ஸ்டோல், கம்பளி ஆடைகள், ஆயத்த ஆடைகள், கைவினை ஆபரணங்கள், இந்தியா முழுவதும் உள்ள கைவினைஞர்களிடமிருந்து வாங்கப்பட்ட வீட்டு அலங்காரங்களுக்கு பயன்படுத்தப்படும் துணி போன்றவற்றை விற்பனை செய்கிறார்.

மாதுரி முதலீடுகள் தொடர்புடைய வழக்கறிஞராக ஐந்தாண்டுகள் பணியாற்றிய பிறகு வணிகம், மேலாண்மை, நிதி போன்றவை குறித்து தெரிந்துகொள்ள 2014-ம் ஆண்டு எம்பிஏ படிக்கத் தொடங்கினார். பின்னர் சட்டப்படிப்பு, எம்பிஏ இரண்டும் ஒருசேர படித்திருப்பதை பெரும்பாலான நிறுவனங்கள் வரவேற்கவில்லை என்பதை உணர்ந்தார்.

”இரண்டு துறையில் ஏதோ ஒன்றில் தீவிரமாக செயல்படுவது குறித்து கேள்வியெழுந்தது. இரண்டாண்டுகள் பல முயற்சிகள் மேற்கொண்டேன். விரைவிலேயே எனக்கு பொருத்தமில்லாத ஒன்றை நோக்கி பயணித்துக்கொண்டிருப்பதை உணர்ந்தேன்,” என்றார் மாதுரி.

எனவே மாதுரி தனது இரண்டாவது திட்டமான தொழில்முனைவில் ஈடுபட தீர்மானித்தார்.

”ஃபேஷன் பிரிவில் ஆர்வத்தை வளர்த்துக்கொள்ள என்னுடைய அம்மா எனக்கு மிகப்பெரிய உந்துதலாக இருந்தார். அவர் அழகான காட்டன் மற்றும் பட்டு புடவைகளை அணிந்துகொள்வார். டிசைன் மற்றும் ஸ்டைல் மீதான அவரது ஈடுபாடு என்னை ஃபேஷன் பிரிவில் செயல்பட ஊக்குவித்தது,” என்றார்.

2017-ம் ஆண்டு மாதுரி தனக்கு ஆர்வம் அதிகமுள்ள ஃபேஷன் மற்றும் ஸ்டைலிங் பிரிவில் செயல்பட தீர்மானித்து ’வீவ்ஸ் ஆஃப் ட்ரெடிஷன்’ தொடங்கினார். 70,000 ரூபாய் பட்ஜெட்டுடனும் 50 பொருட்களுடனும் தொடங்கப்பட்டது இது. 2018-ம் ஆண்டு அதன் வலைதளம் அறிமுகப்படுத்தப்பட்டது.

கைவினைஞர்கள் மற்றும் கலைஞர்களுக்கு ஆதரவளிக்கப்பட்டது

’வீவ்ஸ் ஆஃப் ட்ரெடிஷன்’ இந்தியா முழுவதும் உருவாக்கப்படும் கைத்தறி, கலை மற்றும் கைவினைப் பொருட்களை ஊக்குவிக்கிறது. இதை சாத்தியப்படுத்தும் வணிகத்தை உருவாக்குவதே இந்த ஸ்டார்ட் அப்பின் நோக்கம். ஒவ்வொரு பொருளும் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக உள்ளது. முறையாக வாங்கப்படுகிறது. கைவினைஞர்கள் மற்றும் கலைஞர்களின் வாழ்வாதாரமே அவர்கள் உருவாக்கும் கலை சார்ந்தது. எனவே அவர்களையும் கைத்தறி மற்றும் கைவினைத் துறையின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டே ஒவ்வொரு பொருளும் தேர்வு செய்யப்படுகிறது.

தற்போது வீவ்ஸ் ஆஃப் ட்ரெடிஷன் ஃபேஷன், ஆபரணங்கள், வீட்டு அலங்காரத்திற்குப் பயன்படுத்தப்படும் துணி வகைகள், கைவினைப்பொருட்கள் போன்றவற்றை வழங்குகிறது. விரைவில் பைகள் மற்றும் ஷூக்களையும் அறிமுகப்படுத்த உள்ளது.

”சுற்றுச்சூழலுக்கு உகந்த பிராண்டை உருவாக்க திட்டமிட்டேன். விலை அதிகமில்லாத, முறையாக வாங்கப்பட்ட பொருட்களை வழங்க விரும்பினேன். நான் விற்பனை செய்யும் ஒவ்வொரு பொருளுக்கும் இதுவே அடிப்படையான விஷயம். வீவ்ஸ் ஆஃப் ட்ரெடிஷன் பல்வேறு விலைகளில் பொருட்களை வழங்குகிறது. ஒவ்வொரு வாடிக்கையாளரும் அவர்களது வாங்கும் திறனுக்கேற்ற பொருளை வாங்கிக்கொள்ளலாம்,” என ஹெர்ஸ்டோரி உடனான உரையாடலில் தெரிவித்தார் மாதுரி.

இந்த ஸ்டார்ட் அப் கைத்தறி நிறுவனங்கள், கைவினைஞர்கள், ஜவுளி தொழிற்சாலைகள் என இந்தியா முழுவதும் இருந்து பொருட்களை வாங்குகிறது. இதன் நெட்வொர்க்கில் சுமார் 50 நெசவாளர்கள், கைகளால் அச்சிடும் 16 பிரிண்டர்கள், எட்டு ஜவுளி உற்பத்தியாளர்கள் போன்றோர் இணைந்துள்ளனர்.

பொருட்களின் வகைகள்

இந்நிறுவனம் பொருட்களை வாங்கியதும் எம்பிராய்டரி, டாஸ்ஸல், சாயமிடுதல், பிரிண்டிங், மற்ற துணிகளுடன் இணைத்தல் போன்றவற்றை தனித்தேவைக்கேற்ப மேற்கொள்கிறது. உதாரணத்திற்கு இவர்களது 95 சதவீத புடவைகள் வெவ்வேறு பிளவுஸ் பீஸ் மற்றும் டாஸ்ஸல்களுடன் இணைக்கப்படுகிறது. இங்குதான் வீவ்ஸ் ஆஃப் ட்ரெடிஷனின் டிசைன் மற்றும் ஸ்டைல் அம்சம் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு பொருளிலும் குறைபாடுகள், கறைகள் அல்லது மற்ற பிரச்சனைகள் ஏதேனும் இருக்கிறதா என சோதனை செய்யப்படுகிறது. இறுதி தயாரிப்பின் விலை நிர்ணயிக்கப்பட்டு, புகைப்படம் எடுக்கப்பட்டு, விற்பனைக்காக பட்டியலிடப்படுகிறது.

துணியின் விலை அல்லது மற்ற கூடுதல் அம்சங்களை மட்டும் கருத்தில் கொண்டு விலை நிர்ணயிக்கப்படுவதில்லை. இறுதி தயாரிப்பை உருவாக்குவதற்காக செலவிடப்பட்ட நேரமும் உழைப்பும் கருத்தில் கொள்ளப்படுகிறது.

”பொருட்களின் மதிப்பு கூட்டப்படுவதையும் வாடிக்கையாளர்களுக்கு அது விற்பனை செய்யப்படும்போது அதற்கான மதிப்பு வழங்கப்படுவதையும் முறையாக நிர்வகிப்பது மிகவும் கடினமானது. வீவ்ஸ் ஆஃப் ட்ரெடிஷனின் ஒவ்வொரு பொருளும் தனித்துவமானது. ஏனெனில் ஒவ்வொன்றும் தனித்தேவைக்கேற்றதாகவோ அல்லது கைகளால் நெய்யப்பட்டதாகவோ அல்லது கைகளால் தயாரிக்கப்பட்டதாகவோ இருக்கும். இதனால் ஒவ்வொன்றும் தனித்துவமாக இருப்பதுடன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த மதிப்பை அளிக்கிறது,” என்றார் மாதுரி.

டிஜிட்டல் பிரிண்ட் செய்யப்படும் துப்பட்டாக்கள் போன்ற சில வகைகள் மொத்தமாக கிடைக்கும். ஏனெனில் ஒவ்வொரு டிசைனும் அதிகளவில் பிரிண்டிங் செய்யப்பட வேண்டிய அவசியம் உள்ளது.

பொருட்களின் தனித்துவம்

ஒவ்வொரு பொருளும் பல்வேறு செயல்முறைகளுக்கு உட்படுத்தப்படுகிறது. இதனால் பல்வேறு திறன் கொண்ட கலைஞர்களுக்கு வேலை வாய்ப்பும் வருவாய் ஈட்டுவதற்கான வாய்ப்பும் வழங்கப்படுகிறது. இதுவே வீவ்ஸ் ஆஃப் ட்ரெடிஷன் பொருட்களின் தனித்துவமான அம்சம். இது பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் வணிக மாதிரி அல்ல. மாறாக ஒரு பொருளை வாங்கி மேம்படுத்தி, விற்பனை செய்யும் வணிக மாதிரியில் செயல்படுகிறது.

”நான் பழைய புடவைகளையும் மறு பயன்பாட்டிற்கு உட்படுத்துகிறேன். சுற்றுச்சூழலுக்கு உகந்த ஃபேஷனுக்கான முக்கியத் தேவைகளில் ஒன்று பழைய பொருட்களை மறுபயன்பாட்டிற்கு உட்படுத்துவது. 30-40 வருடங்கள் பழமையான புடவைகள் சிறந்த தரத்திலான துணியையும் ஜரிகையையும் கொண்டிருக்கும். இவற்றை பாலீஷ் செய்து எம்பிராய்டரி, பார்டர், புதிய பிளவுஸ் போன்றவற்றுடன் மறுபயன்பாட்டிற்கு உட்படுத்துகிறேன்.

இத்தகைய பழமையான புடவைகளை அழகான ஆடைகளாக மாற்ற விரைவில் டெய்லரிங் சேவைகளை தொடங்க திட்டமிட்டுள்ளேன்,” என்றார் மாதுரி. இந்த ஸ்டார்ட் அப் அதன் சொந்த வலைதளம் தவிர அமேசான் வாயிலாகவும் விற்பனை செய்கிறது.

”போக்குவரத்தைப் பொறுத்தவரை மூன்று முதல் நான்கு லாஜிஸ்டிக்ஸ் பார்ட்னர்கள் இணைந்துள்ளனர். தனியார் நிறுவனங்கள் சேவையளிக்க முடியாத சில பகுதிகளுக்கு இந்தியா போஸ்ட் சேவையை பயன்படுத்திக்கொள்கிறேன்,” என்றார்.

16 வயதிற்கு மேற்பட்ட பெண்களை வீவ்ஸ் ஆஃப் ட்ரெடிஷன் இலக்காகக் கொண்டுள்ளது. “சிறந்த வாடிக்கையாளர்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் தொடர்ந்து வாங்குகின்றனர். வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் பொருட்களை அதிகப்படுத்தி வருகிறேன். இதனால் மேலும் சிறந்த தயாரிப்புகளை சிறப்பான விலையில் வழங்கி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வேன் என்று நம்புகிறேன்,” என்றார்.

சவால்கள்

மாதுரி தனது குழந்தைக்கு மூன்று மாதம் இருந்தபோது வீவ்ஸ் ஆஃப் ட்ரெடிஷன் தொடங்கினார்.

”அது என்னுடைய வாழ்க்கையில் கடினமான காலகட்டமாக இருந்தது. உதவிக்கு யாரும் இன்றி என்னுடைய குழந்தையை பராமரிக்கவேண்டியிருந்தது. அதே சமயம் வணிகத்தை அமைக்க வேண்டியிருந்தது. இரண்டு குழந்தைகளை ஒரே சமயத்தில் வளர்த்தெடுப்பது மகிழ்ச்சி நிறைந்த பயணமாக இருந்தது. பெரும்பாலான நாட்கள் இரவு முழுவதும் பணி புரிவேன். பகல் நேரங்களில் குழந்தையை பார்த்துக்கொள்வேன். அந்த காலகட்டத்தில் என்னுடைய கணவர் அனைத்து விதங்களிலும் எனக்கு மிகப்பெரிய பக்கபலமாக இருந்தார்,” என்றார் மாதுரி.

வளர்ச்சி மற்றும் எதிர்காலத் திட்டங்கள்

பெங்களூருவைச் சேர்ந்த இந்த நிறுவனம் சுயநிதியில் இயங்கி வருகிறது. ஆரம்பத்தில் 50 பொருட்களுடன் தொடங்கப்பட்டு இன்று 1,000 எஸ்.கே.யூ-க்களைக் கொண்டுள்ளது. துணியின் வகை, கைத்திறம், தயாரிப்பிற்கான நேரம், தயாரிப்பு முறை ஆகியவற்றின் அடிப்படையில் 200 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த இரண்டாண்டுகளில் இந்த ஸ்டார்ட் அப் ஆண்டிற்கு 250 சதவீதமும் மாதந்தோறும் 27.5 சதவீதமும் வளர்ச்சியடைந்து வருவதாக தெரிவிக்கிறது. கடந்த நிதியாண்டு 32 லட்ச ரூபாய் வருவாய் ஈட்டியுள்ள இந்த நிறுவனம் அடுத்த பத்தாண்டுகளில் ஆண்டு வருவாயாக 10 கோடி ரூபாய் ஈட்டுவதை இலக்காகக் கொண்டுள்ளது.

”வீவ்ஸ் ஆஃப் ட்ரெடிஷன் முழுமையாக சுற்றுச்சூழலுக்கு உகந்த பிராண்டாக உருவாக அதன் பொருட்களின் வகைகளையும் தேர்வுகளையும் விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளது. பழைய தயாரிப்பை மேம்படுத்தி மறுசுழற்சிக்கு உட்படுத்தி புதிய தயாரிப்பை உருவாக்குவதும் வருங்கால திட்டத்தில் பெரும் பங்கு வகிக்கும்,” என்றார் மாதுரி.

ஆங்கில கட்டுரையாளர்: சுஜாதா சங்வான் | தமிழில்: ஸ்ரீவித்யா