ஒரு வாடிக்கையாளருடன் தொடங்கி, இன்று 136% வருவாய் வளர்ச்சியை எட்டிய மீடியா உள்ளடக்க நிறுவனம்!

மீடியா தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் Amagi முழுமையான கிளவுட் சார்ந்த கட்டமைப்பை உருவாக்கி உள்ளடக்கம் உருவாக்குபவர்கள், பிராட்காஸ்ட் மற்றும் கேபிள் டிவி நெட்வொர்க், ஓடிடி தளங்கள் போன்றோருக்கு சேவையளிக்கிறது.
0 CLAPS
0

ஸ்ரீவித்யா ஸ்ரீனிவாசன், பாஸ்கர் சுப்ரமணியன், ஸ்ரீனிவாசன் கேஏ மூவரும் சேர்ந்து 2008ம் ஆண்டு ஸ்டார்ட் அப் தொடங்க திட்டமிட்டனர். உலகளவில் உள்ளடக்கம் டெலிவர் செய்யப்படும் விதத்தில் புரட்சியை ஏற்படுத்தவேண்டும் என்பதும் மீடியா துறையில் பணமாக்கவேண்டும் என்பதுமே இவர்களது விருப்பமாக இருந்தது. Amagi என்கிற பெயரில் நிறுவனத்தைத் தொடங்கினார்கள்.

“இன்று Amagi நவீன மீடியா தொழில்நுட்ப நிறுவனமாகச் செயல்பட்டு வருகிறது. கிளவுட் மூலம் நிர்வகிக்கப்படும் நேரலை மற்றும் ஆன்-டிமாண்ட் வீடியோ கட்டமைப்பை உள்ளடக்க உரிமையாளர்கள், பிராட்காஸ்ட் மற்றும் கேபிள் டிவி நெட்வொர்க், ஓடிடி தளங்கள் போன்றோருக்கு வழங்குகிறது,” என்கிறார் ஸ்ரீவித்யா.

24X7 பிராட்காஸ்ட் அல்லது கேபிள் நெட்வொர்க் சானல் உருவாக்கம், Free Ad-Supported Streaming TV (FAST) சானல் விநியோகம், விளையாட்டு மற்றும் செய்திகள் தொடர்பான நேரலை ஆர்கெஸ்ட்ரேஷன், ஓடிடி Server-Side Ad Insertion (SSAI) போன்றவற்றில் Amagi முக்கியக் கவனம் செலுத்துகிறது.

நிதி மற்றும் வளர்ச்சி

2021ம் ஆண்டில் Accel, Norwest Partners, Avataar Ventures போன்ற முன்னணி SaaS வென்சர் கேப்பிடல் நிறுவனங்கள் Amagi நிறுவனத்தில் 100 மில்லியன் டாலருக்கும் மேல் முதலீடு செய்துள்ளன. 2014-ம் ஆண்டு பிரேம்ஜி இன்வெஸ்ட் நிறுவனமும் 2008-ம் ஆண்டு Nadathur Holdings நிறுவனமும் முதலீடு செய்து தொடர்ந்து முதலீட்டாளர்களாக இருந்து வருகின்றன.

எமரால்ட் மீடியா, மேஃபீல்ட் ஃபண்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் ஆரம்பத்தில் முதலீடு செய்திருந்தபோதும் பின்னர் விலகிவிட்டன.

Amagi நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ், டொரோண்டோ, லண்டன், பாரீஸ், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் செயல்படுகின்றன. டெல்லியில் பிராட்காஸ்ட் செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. பெங்களூருவில் இன்னொவேஷன் மையம் ஒன்று செயல்படுகிறது. 400-க்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் செயல்பட்டு வரும் Amagi தொடர்ந்து பணியாளர்களை நியமித்து விரிவடைந்து வருகிறது.

“துறையில் சிறந்து விளங்கும் நிறுவனங்களுடன் பிரேம்ஜி இன்வெஸ்ட் இணைந்துகொள்வது வழக்கம். Amagi ஆரம்பத்திலிருந்தே கிளவுட் செயல்பாடுகளில் தனித்துவமாகவும் நவீன் தொழில்நுட்பத்துடனும் கட்டமைப்புடனும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. Amagi அதன் வாடிக்கையாளர்களுக்கு நீண்ட கால அடிப்படையில் மதிப்பை உருவாக்கிக் கொடுக்கும் அம்சமே அதன் வளர்ச்சிக்குக் காரணம்,” என்கிறார் பிரேம்ஜி இன்வெஸ்ட் நிறுவனத்தின் அதுல் குப்தா.

Amagi தொடக்கம்

ஸ்ரீவித்யா ஸ்ரீனிவாசன், பாஸ்கர் சுப்ரமணியன், ஸ்ரீனிவாசன் கேஏ மூவரும் கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் படித்த நாட்களில் இருந்தே நண்பர்கள். இவர்கள் ஒன்றிணைந்து முதலில் Impulsesoft என்கிற நிறுவனத்தைத் தொடங்கினார்கள். அதை SiRF நிறுவனம் வாங்கிக்கொண்டது. அதைத் தொடர்ந்து 2008-ம் ஆண்டு Amagi நிறுவியுள்ளனர்.

”மூன்று முக்கிய நோக்கங்களை முன்னிறுத்தியே அடுத்த நிறுவனத்தை உருவாக்கினோம். புரட்சிகரமான தொழில்நுட்பமாக இருக்கவேண்டும்; பில்லியன் டாலர் மதிப்புடைய நிறுவனமாக இருக்கவேண்டும்; புதுமையான முறையில் மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும். இந்த மூன்றும் எங்களது நோக்கமாக இருந்தது,” என்கிறார் ஸ்ரீவித்யா.

பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் முன்னணி பிராட்காஸ்டர் மற்றும் விளம்பரதாரர்களுக்கு, குறிப்பிட்ட தேவை சார்ந்த விளம்பரங்களை (Targeted Advertising) வழங்கும் பிரிவில் செயல்படத் தீர்மானித்தனர்.

Amagi தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முதல் விளம்பரம் 2009ம் ஆண்டு வெளியிடப்பட்டது. அடுத்த இரண்டாண்டுகளில் 100க்கும் மேற்பட்ட இந்திய நகரங்களில் விரிவடைந்தது.

தயாரிப்பு உருவாக்கம்

தொழில்நுட்பப் பயன்பாடு குறித்து நிறுவனர்கள் ஆய்வு செய்தனர். மற்ற நாடுகளில் உள்ள ஒளிபரப்பு அமைப்பை ஆய்வு செய்தனர். அவை விலையுயர்ந்தவையாக இருந்தன. இந்தியாவில் வெற்றிகரமாக செயல்பட தொழில்நுட்பம் குறைந்த விலையிலும் வளர்ச்சியடையும் வகையிலும் இருக்கவேண்டும் என நினைத்தனர்.

இதுபோன்ற தொழில்நுட்பத்தை ஆரம்பகட்டத்திலிருந்து உருவாக்கி 3,000 நகரங்களில் விரிவடையத் தீர்மானித்தனர். குறிப்பிட்ட இடங்களில் செயற்கைக்கோள் சிக்னல்களைப் பிரித்து புதிய விளம்பரங்களை இணைக்கும் வகையில் கட்டமைப்பை உருவாக்க முடிவு செய்தனர்.

“விளம்பரதாரர்கள் குறிப்பிட்ட இடங்களைத் தாங்களே தேர்வு செய்துகொள்ளலாம். தேசிய டிவி விளம்பர ஸ்லாட்டைக் காட்டிலும் குறைந்த கட்டணத்தில் பலரின் கவனத்தை ஈர்க்க முடியும்,” என்கிறார் ஸ்ரீவித்யா.

செயல்பாடுகள் மற்றும் பிராடக்ட்

குறிப்பிட்ட தேவை சார்ந்த விளம்பரங்களை வழங்குவதில் இருந்து படிப்படியாக இந்நிறுவனம் கிளவுட் செயல்பாடுகளுக்கு மாறியது.

ஊரடங்கு சமயத்தில் ஒளிபரப்பாளர்களின் on-premise வேலைகள் தடைபட்ட சமயத்தில் Amagi வழங்கிய கிளவுட் தீர்வுகள் இதை சமாளிக்க உதவியுள்ளது.

Amagi முக்கிய பிராடக்டான CLOUDPORT 2012-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இது சானல் உருவாக்கம் மற்றும் விநியோகத்திற்காக உருவாக்கப்பட்டது.

2016-ம் ஆண்டு முழுமையான கிளவுட் பிளே-அவுட் தீர்வாக மாறியது. அதைத் தொடர்ந்து நேரலை ஒளிபரப்பு, உள்ளடக்க ஏற்பாடு என விரிவடைந்தது.

Amagi THUNDERSTORM ஓடிடி-யில் விளம்பரங்களைச் சேர்ப்பதற்கான தீர்வுகளை வழங்குவதற்காக சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இது மேலும் வலுப்படுத்தப்பட்டு மதிப்பாய்வு செய்வதற்கான அம்சமும் சேர்க்கப்பட்டது. இதனால் பார்வையாளர்கள் உள்ளடக்கத்தை அணுகும் முறையைப் பற்றிய தரவுகள் உள்ளடக்க உரிமையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

சவால்களும் வளர்ச்சியும்

“எங்கள் தொழில்நுட்பத்தைப் புரிந்துகொள்ள முடியாத கேபிள் ஆபரேட்டர்களுடன் இணைந்து செயல்படுவது ஆரம்பத்தில் சவாலாக இருந்தது. இதன் நன்மைகளைப் புரியவைத்து இணைத்துக்கொள்வது மிகப்பெரிய சவாலாக இருந்தது,” என்கிறார் ஸ்ரீவித்யா.

அடுத்ததாக சானல்களுடன் பேசி அவர்களது உள்ளடக்கங்களுக்கிடையில் விளம்பரங்களை சேர்ப்பதற்கு சம்மதிக்க வைப்பது சவாலாக இருந்தது. இந்த வணிக மாதிரி பரிச்சயமில்லாததாக இருந்ததால் எளிதில் ஏற்றுக்கொள்ளவில்லை.

இணை நிறுவனர் பாஸ்கர் சுப்ரமணியன்

நிறுவனத்திற்குள்ளேயே விளம்பர விற்பனைக் குழுவை உருவாக்கி இதை சமாளித்துள்ளனர்.

2021 நிதியாண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் 136 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த மூன்றாண்டுகளில் வருவாயை இரட்டிப்பாக்கியுள்ளோம். இந்தப் போக்கு தொடரும் என நம்புகிறோம்,” என்கிறார் ஸ்ரீவித்யா.

வணிக மாதிரி மற்றும் வருங்காலத் திட்டங்கள்

SaaS, Bring your own license, Fully Managed Service என வாடிக்கையாளர்கள் தேர்வு செய்ய மூன்று வணிக மாதிரிகளை வழங்குகிறது. விளம்பரங்களை சேர்த்து உள்ளடக்க உரிமையாளர்கள் மற்றும் தளங்களுடன் வருவாயைப் பகிர்ந்துகொள்ளும் வணிக மாதிரியும் உள்ளது.

தற்போதுள்ள உள்ளடக்கம் வழங்குவோர் மற்றும் தளங்களின் வளர்ச்சிக்கு உதவிடும் வகையில் கிளவுட் சார்ந்த புதுமையான பிராடக்டுகளை வழங்கவேண்டும் என்பதே இந்த ஸ்டார்ட் அப்பின் திட்டம்.

வாடிக்கையாளர்கள் அனைத்து பிராடக்டுகளையும் அணுகும் வகையில் சுய சேவை போர்டலை அறிமுகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. உள்ளடக்கம் உருவாக்குபவர்கள் தங்கள் பார்வையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்க உதவும் வகையில் குறைந்த விலை பிளேஅவுட் ஆப்ஷனையும் வழங்குகிறது.

ஆங்கில கட்டுரையாளர்: சிந்து காஷ்யப் | தமிழில்: ஸ்ரீவித்யா

Latest

Updates from around the world