கும்பகோணத்தில் இருந்து Data Labelling-ல் ஆண்டுக்கு 3 கோடிக்கு மேல் ஈட்டும் பிரவீன் இளமாறன்!

எந்த ஊரில் இருந்து ஸ்டார்ட்-அப் தொடங்குகிறோம் என்பது முக்கியமல்ல, ஐடியா சரியாக இருந்தால் சிறிய ஊர்களில் இருந்தும் சாதிக்கமுடியும் என்று காட்டியுள்ளார் இந்த இளம் தொழில்முனைவர்.
25.4k CLAPS
0

எந்த ஊரில் தொழில் தொடங்குகிறோம் என்பது சில ஆண்டுகளுக்கு முன்பு முக்கியமாக இருந்தது. காரணம், பெரு நகரங்களில்தான் வாய்ப்புகள் அதிகம் இருக்கும், தரமான ஊழியர்கள் கிடைப்பார்கள். விமானப் போக்குவரத்து உள்ளிட்ட பல வசதிகள் இருக்கும் நகரங்களில்தான் தொழில் தொடங்கப்பட்டுவந்தது.

ஆனால் தற்போதைய டெக்னாலஜி யுகத்தில் தொழிலுக்கான ஐடியா, அதனை செயல்படுத்தும் திறன் மட்டுமே பிரதான காரணமாக இருக்கிறது. எந்த ஊரில் தொழில் தொடங்குகிறோம் என்பது தற்போது முக்கியமானதாகவே தெரியவில்லை. இந்த நிலையில் டெக்னாலஜி நிறுவனத்தை கும்பகோணம் நகரத்தில் இருந்து நடந்திவருகிறார் பிரவீன் இளமாறன்.

டேட்டா லேபிளிங் பிரிவில் செயல்பட்டுவரும் இவரது நிறுவனத்தில் 125-க்கும் மேற்பட்ட நபர்கள் பணியாற்றுகிறார்கள். ஆண்டுக்கு ரூ.3 கோடிக்கு மேல் இவரது நிறுவனம் வருமானம் ஈட்டுகிறது.

பிரவீன் இளமாறன், நிறுவனர் Up2datez

கும்பகோணம் சொந்த ஊர். பொறியியல் மற்றும் எம்பிஏ படித்தவர் பிரவீன் இளமாறன். படித்துமுடித்த பிறகு ஹெச்டிஎப்சி வங்கியில் வாகனப்பிரிவில் மேலாளராகும் வாய்ப்பு கிடைத்தது. சொந்தமாக நிறுவனம் தொடங்க வேண்டும் என்னும் திட்டம் இருந்தாலும், சரியான வாய்ப்பை தேடிக்கொண்டிருந்த நிலையில் விபத்து ஏற்பட்டது. அதனால் சில மாதங்களுக்கு ஓய்வெடுக்க வேண்டிய சூழல் உருவானது.

கும்பகோணத்தில் இருந்தாலும் வாகனக் கடனுக்கான ஒப்புதல் அளிக்கும் பணியை மட்டுமே செய்தால் போதும் அலுவலகத்துக்கு வரவேண்டாம் என்று ஹெச்டிஎப்சி நிறுவனம் சொன்னாலும், எதோ திருப்தி இல்லாத மனநிலையில் இருந்தார் பிரவீன். அதே சமயம் விபத்து ஏற்பட்டதால் மீண்டும் சென்னைக்கு செல்ல வேண்டாம் என குடும்பத்தினர் கருதவே, சொந்த ஊரில் தொழில் தொடங்கும் திட்டத்தை வகுத்தார்.

2017-ம் ஆண்டு வேலையை விட்டபிறகு டேட்டா எண்ட்ரி, மொழிபெயர்ப்பு, டிரான்ஸ்கிரிப்ஷன் உள்ளிட்ட சேவைகளை அடிப்படையாகக் கொண்டு கும்பகோணத்தில் நிறுவனம் தொடங்கினார் பிரவீன். தொடங்கும்போதே 18 நபர்கள் குழுவுடன் UP2DATEZ நிறுவனத்தை தொடக்கினார். ஆரம்பத்தில் மூன்று ஷிப்ட் அடிப்படையில் 24 மணிநேரமும் நிறுவனம் செயல்பட்டது.

இரண்டு ஆண்டுகளுக்கு டேட்டா லேபிளிங் பிரிவில் செயல்படும் பெரிய நிறுவனம் ஒன்று வாடிக்கையாளராகக் கிடைத்தனர். அப்போது முதல் டேட்டா லேபிளிங்கில் கவனம் செலுத்துகிறோம் என பிரவீன் தெரிவித்தார்.

நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் இதரவிஷயங்களைக் குறித்து பார்ப்பதற்கு முன்பு டேட்டா லேபிளிங் குறித்து தெரிந்துகொள்வோம்.

டேட்டா லேபிளிங்க் என்றால் என்ன?

குழந்தைகளுக்கு கை இது, கால் இது, இது தக்காளி என நாம் தொடர்ந்து சொல்லிக் கொடுத்து வரும்போது, குழந்தைகள் அதனை கற்றுக்கொள்வார்கள். கிட்டத்தட்ட இதுதான் Data Labelling.

இதேபோல மெஷின்களுக்கு பல விஷயங்களை நாம் கற்றுக்கொடுக்க வேண்டும். மெஷின்கள் தகவல்களைச் சரியாகப் புரிந்துகொண்டால்தான் அந்த மெஷின்களை அடுத்தகட்டத்துக்கு பயன்படுத்தமுடியும்.

”உதாரணத்துக்கு டிரைவர் இல்லாத கார் இருக்கிறது என்றால், எதிரில் வருவது வாகனமா, மனிதர்களா, டிவைடரா, ரெட் சிக்னலா, கிரீன் சிக்னலா என்பதை மெஷினுக்கு அடையாளம் காணச் சொல்லிக் கொடுத்தால்தான் அதனை வைத்து அந்த மெஷினை அடுத்தகட்டமாக பயன்படுத்த முடியும். இது போல மெஷின்களுக்கு தகவல்களைப் பரிமாற்றும் வேலைதான் டேட்டா லேபிளிங்,” என இந்தத் துறை எப்படி செயல்படுகிறது என்பதை நம்மிடம் பிரவீன் விளக்கினார்.

 இந்த நிறுவனத்தை பெரு நகரங்களில் தொடங்கி இருந்தால் இன்னும் பெரிய வளர்ச்சி அடைந்திருக்கலாமே என்று கேட்டபோது,

“பெரு நகரங்களில் தொடங்கி இருந்தால் வளர்ச்சி அடைந்திருக்க முடியும். அதில் மாற் கருத்து இல்லை. ஆனால் நான் வேறு விதமாக யோசித்தேன். நான் படித்து முடிக்கும் சமயத்தில் இதுபோன்ற நிறுவனம் கும்பகோணத்தில் இருந்திருந்தால் சென்னை செல்லும் சூழலே எனக்கு இருந்திருக்காது. அதனால் கும்பகோணத்தில் நிறுவனம் அமைக்கும்போது சென்னை செல்ல வாய்ப்பு இல்லாதவர்களை பயன்படுத்திக் கொள்கிறோம்,” என்றார்.

அதே சமயத்தில் பணியாளர்களை நமக்கு ஏற்றதுபோல தயார் செய்ய வேண்டி இருக்கிறது. பெரு நகரங்களில் உடனடி பயன்பாட்டுக்கு ஆட்கள் கிடைப்பார்கள். ஆனால் இங்கு ஊழியர்களை வேலைக்கு எடுத்து சில வாரங்கள் பயிற்சி கொடுத்தால் மட்டுமே அவர்களை நிறுவனத்துக்கு ஏற்ற வகையில் பயன்படுத்திக்கொள்ள முடியும். இந்த சிக்கல் இருக்கவே செய்கிறது.

அதே சமயம் இங்கு நிறுவனத்தை நடத்தும்போது பெரிய செலவுகள் இல்லை. அதனால் பணியாளர்களுக்கு நல்ல சம்பளமும் வழங்க முடிகிறது. அதிகபட்சமாக ரூ.50,000 கூட சிலருக்கு வழங்குகிறோம்.

இதற்குக் காரணம், எங்களுக்கு முன்பாக டெக்னாலஜி பிரிவில் செயல்படும் நிறுவனம் கும்பகோணத்தில் இல்லை. அதனால் இந்தப் பிரிவில் உள்ள பணியாளர்கள் பெங்களூரு அல்லது சென்னைக்கு சென்றுகொண்டிருந்தனர். தற்போது நாங்கள் தொடங்கி இருக்கிறோம். வேறு சிலரும் இங்கேயே தொடங்கினால் கும்பகோணத்திலே தரமான ஊழியர்களை உருவாக்க முடியும் என்றார்.

அடுத்தகட்ட திட்டம் குறித்த கேள்விக்கு, தற்போது வெவ்வேறு நிறுவனங்களிடம் இருந்து புதிய ஆர்டர்கள் வருகின்றன. நிறுவனங்களின் தேவைக்கு ஏற்ப வேறு ஒரு நகரத்தில் புதிய கிளையை தொடங்க திட்டமிட்டிருக்கிறோம்.

எங்களுக்கு கிடைக்கும் ஆர்டருக்கு ஏற்ப, திருச்சி, சென்னை அல்லது பெங்களூருவில் புதிய அலுவலகத்தைத் தொடங்க இருக்கிறோம். மேலும் இதுவரை நாங்கள் பிடுபி பிரிவில் செயல்பட்டோம். அதாவது வேறு ஒரு நிறுவனத்துக்கான சேவையில் இருந்தோம். ஆனால் விரைவில் பி2சி பிரிவில் புதிய சேவையை கொடுக்க இருக்கிறோம், என்றார் பிரவீன்.

ஆனால் அந்த புதிய சேவை, டேட்டா லேபிளிங் பிரிவில் இருக்காது. வேறு ஒரு விஷயத்தை திட்டமிட்டுவருகிறோம். விரைவில் இது தொடர்பான அறிவிப்பு இருக்கும் எனத் தெரிவித்தார்.

ஸ்டார்ட்-அப் தொடங்கவேண்டும் என்ற எண்ணம் உடையவர்களுக்கு இருக்கும் இடத்தையும் சொர்கமாக மாற்றும் திறமையும் இருக்கும் என்பதற்கு பிரவீன் இளமாறன் ஒரு எடுத்துக்காட்டு.

Latest

Updates from around the world