12 மில்லியன் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க 1 லட்சம் ஆசிரியர்களைத் தயார் செய்த Classplus

கல்விநுட்ப ஸ்டார்ட் அப்பான கிளாஸ்பிளஸ், கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில், தனது பயிற்றுனர்கள் பரப்பை 10 மடங்கி பெருக்கி கொண்டு, 400 சதவீத வருவாய் வளர்ச்சி பெற்றுள்ளது.
0 CLAPS
0

Classplus நிறுவனம் மூன்று ஆண்டுகளுக்கு முன் சிறிய அளவில் துவங்கப்பட்டது. இதன் நிறுவனர்கள் ஐஐடி ரூர்கலா பட்டதாரியான முகுல் ரஸ்தோகி மற்றும் மைக்ரோசாப்ட் கல்வி வடிவமைப்பில் பங்களிப்பு செலுத்திய பஸ்வத் அகர்வால், இதற்கு முந்தைய நிறுவன முயற்சியில் தோல்வியை தழுவியிருந்தனர்.

“நாங்கள் பள்ளி பருவம் முதல் பரஸ்பரம் அறிந்திருந்தோம், எப்போதும் சொந்தமாக ஏதாவது செய்ய விரும்பினோம். 2015ல் நாங்கள் ஒன்றிணைந்து, கல்வித்துறையில் பல சோதனைகள் செய்து பார்த்தோம். எதுவும் சரியாக வரவில்லை,” என்கிறார் முகுல் ரஸ்தோகி.

இறுதியாக 2018ல், ஒரு காலத்தில் தாங்களும் உணர்ந்திருந்த பிரச்சனைக்கானத் தீர்வை அளிக்க தீர்மானித்தனர். அப்போது அவர்கள் ஐஐடி-ஜேஇ.இ தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்த போது பயிற்சி நிறுவனம் திடிரென மூடப்பட்டது.

அந்த காலகட்டத்தில் கல்வி பயிற்சி என்பது இணையம் வழியே நடைபெறாத நிலையில், நல்ல பயிற்றுனர்களை கண்டறிவது கடினமாக இருந்தது.

2018ல் கிளாஸ்பிளஸ் துவங்கிய போது கல்வி டிஜிட்டல்மயமாகத் துவங்கியிருந்தது. இணைந்து நிறுவனர் மற்றும் சீஇஒ Mukul shares,

“ஜியோ வருகைக்கு பிறகு, பல நிறுவனங்கள் மாணவர்களை இலக்காகக் கொண்டு செயல்படத் துவங்கின. ஆனால், ஒவ்வொரு பகுதியிலும் 10 முதல் 12 பயிற்சி மையங்கள் இருக்கின்றன. இவற்றின் உரிமையாளர் முகங்களை விளம்பரப் பலைகளில் பார்க்கலாம்.

இந்தியாவின் உட்பகுதிக்குச் சென்றால், இந்த மையங்கள் அந்த அளவு உள்ளூர் சார்ந்ததாக இருக்கும். இந்த கல்வியாளர்கள் தொழில்முனைவு ஆற்றலோடு செயல்பட்டு மாணவர்களை வாய்மொழி பரிந்துரை மூலமே ஈர்க்கின்றனர், என்கிறார் இணை நிறுவனர் மற்றும் சி.இ.ஓ முகுல்.

"எனினும் இந்த பகுதி அலுப்பூட்டுவதாக கருதப்பட்டதால் எந்த ஸ்டார்ட் அப் நிறுவனமும் இதில் கவனம் செலுத்தியதில்லை. இவர்களுக்கு வளர்ச்சி என்பது சவாலாகவே இருந்தது,” என்கிறார் அவர்.

கல்விக்கான ஷாப்பிபை

தனியார் பயிற்றுனர்கள் மற்றும் பயிற்சி மையங்கள் தங்கள் பயிற்சி வகுப்புகளை ஆன்லைனில் மேற்கொள்வதற்கான மொபைல் சார்ந்த SaaS மேடையை ‘கிளாஸ்பிளஸ்’ உருவாக்கியுள்ளது.  

நொய்டாவை தலைமையமாகக் கொண்டு இயங்கும் இந்த ஸ்டார்ட் அப், பயிற்றுனர்கள் தங்கள் பகுதியை கடந்து வளர்ச்சி பெறவும், பயிற்சி, தகவல் தொடர்பு, மதிப்பீடு, பேமெண்ட், மாணவர் தொடர்பு என எல்லாவற்றையும் மொபைல் மூலம் மேற்கொள்ள வழி செய்வதன் மூலம், பெரிதாக இருந்தாலும் பிரிந்து கிடைக்கும் பயிற்சி வகுப்பு சந்தையை சீராக்க முயற்சிக்கிறது.

“வலையில் நிறைய மென்பொருள்கள் இருக்கின்றன. எனினும் எங்களுக்கு இலவசச் சேவையில் நம்பிக்கை இல்லை. இந்த சந்தையில் நம்பிக்கை தான் முக்கியம். கல்வியாளர்களிடம் அவர்கள் வர்த்தகத்தை அதிகரித்து மாணவர்கள் தொடர்பை மேம்படுத்துவோம் எனக் கூறியுள்ளோம். அவர்கள் தொழில்நுட்பத்தை தங்கள் வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு செயல்திறன் சாதனமாக பயன்படுத்துகின்றனர். ஆனால் டிஜிட்டல் யுகத்தில் அவர்கள் பொருத்தமாக இருக்க வேண்டும்,” என்கிறார் நிறுவனர்.

ஆன்லைன் வாய்ப்பை வழங்குவதோடு, கல்வியாளர்கள் தங்கள் பாடத்திட்டங்கள் மற்றும் உள்ளடக்கத்தை இணையத்தில் விற்று வருவாய் ஈட்டவும் வழி செய்கிறது.

“இதில் துவக்கத்தில் முதலீடு கிடையாது. வளர்சிக்கு ஏற்ப கட்டணம் செலுத்தினால் போதும். அமேசான் மற்றும் ஷாப்பிபை இடையே போட்டி நிலவும் உலகில், கிளாஸ்பிளஸ், கல்விநுட்பத்திற்கான ஷாப்பிபையாக இருக்க விரும்புகிறது,” என்கிறார் முகுல்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை, நிறுவனம், 50க்கும் அதிகமான நகரங்களில் 3,000க்கும் அதிகமான பயிற்றுனர்களுடன் வளர்ச்சி அடைந்தது. அதன் பிறகு கொரோனா பாதிப்பு சூழலில் அபிரிமிதமான வளர்ச்சி கண்டு வருகிறது.

பெருந்தொற்றுக்கு மத்தியில் வளர்ச்சி

பயிற்சி வகுப்புகள் மூடப்பட்டதால், அதற்கேற்ப மாறும் சூழல் கிளாஸ்பிசுக்கு உண்டானது.

மாணவர்கள், தனியார் பயிற்றுனர்களிடம் இருந்து துண்டிக்கப்படும் நிலையை தவிர்க்க, 100 மணி நேரங்களில் நேரடி வகுப்பு போன்ற அம்சங்களை அறிமுகம் செய்து 5,000 புதிய பயிற்றுனர்களை தனது மேடையில் இணைத்துக்கொண்டது.

அடுத்து வந்த 12 மாதங்களில், இதன் பயிற்றுனர் பரப்பு பத்து மடங்கு அதிகரித்து, 12 மில்லியன் மாணவர்களைச் சென்றடைகிறது. நிறுவன ஊழியர்களும் 400 பேராக உயர்ந்துள்ளனர். நாட்டில் நாங்கள் வாடிக்கையாளர்களைக் கொண்டிராத தபால் இலக்கங்களே கிடையாது என்கிறார் முகுல்.

குறிப்பிட்ட விவரங்களைத் தெரிவிக்காமல், கடந்த 15 மாதங்களில் வருவாய் 400 மடங்கு அதிகரித்திருப்பதாக நிறுவனம் தெரிவிக்கிறது. இரண்டு சதவீத பயிற்றுனர்கள் சர்வதேச மாணவர்களுக்கும் பாடம் நடத்துகின்றனர்.

கிளாஸ்பிளஸ் செயலியில் பயிற்றுனர்கள், தங்கள் வகுப்புகளை நிர்வகிக்கலாம்,தேர்வு நடத்தலாம், மாணவர்களுடன் தொடர்பு கொள்ளலாம் மற்றும் வீடியோ பாடத்திட்டங்களை விற்கலாம்.

பொதுமுடக்கத்திற்கு பிறகு பயிற்றுனர்கள் ஆன்லைனுக்கு மாறிய வேகம் வியப்பை அளிகிறது.

“தனியார் பயிற்றுனர்கள் மோசமாக பாதிக்கப்பட்டனர். அவர்கள் தங்கள் முதன்மை வருவாயை இழந்தனர். எனவே நிலைமைக்கு ஏற்ப மாறுவதை தவிர வேறுவழியில்லை,” என்கிறார் முகுல்.
“கடந்த ஆறு மாதங்களில் பலரும், கல்வி மற்றும் விருப்பப் பிரிவுகளில் ஆன்லைன் பயிற்சியை துவங்கியுள்ளனர்,” என்கிறார் அவர்.

கிளாஸ்பிளஸ் கல்வியாளர்கள், கடந்த 12 மாதங்களில் 1.5 மில்லியன் நேரடி வகுப்புகளை நடத்தியுள்ளனர் மற்றும் அவர்கள் வருமானம் 5 முதல் 6 மடங்கு அதிகரித்திருக்கிறது. 82 சதவீத பயிற்சி மையங்கள் லாபம் ஈட்டியுள்ளன.

மாணவர்கள் தரப்பிலான ஈடுபாடும் அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் மாணவர்கள் மூன்று பில்லியன் நிமிடங்கள் வீடியோ உள்ளடக்கத்தை இந்த செயலி மூலம் பார்த்துள்ளனர்.

“மேலும், பல நிறுவனங்கள் வந்திருப்பதால் இந்த பிரிவு வளர்ச்சி கண்டுள்ளது. பெரும்பாலான ஆசிரியர்கள் இன்னமும் ஆப்லைன் வகுப்புகளை விரும்பினாலும், இந்த பிரிவு வளர்ந்திருக்கிறது. தொழில்நுட்ப பயன்பாட்டில் கோவிட்-19 முக்கியமாக அமைந்துள்ளது.”

கிளஸ்பிளஸ் நிறுவனம் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் கங்குலியை தனது விளம்பரத் தூதராக கொண்டுள்ளது.

எதிர்காலத் திட்டம்

கடந்த ஆண்டு, Classplus மூன்று சுற்று நிதி திரட்டியது. பிப்ரவரியில் செக்கோயா தலைமையில் ஏ சுற்றுக்கு முன்னதாக 2.5 மில்லியன் டாலர் நிதி திரட்டியது. கிரெட் நிறுவனர் குணால் ஷா உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். பின்னர் மே மாதம் ஆர்டிபி குளோபல் தலைமையில் 9 மில்லியன் டாலர் ஏ சுற்று நிதி திரட்டியது. செப்டம்பரில் பி சுற்றுக்கு முன்னதாக 10.2 மில்லியன் டாலர் நிதி திரட்டியது.

இதன் தொடர்ச்சியாக, கிளஸ்பிளஸ் சந்தை மதிப்பு 82 சதவீதம் அதிகரித்தது. இதற்கு முன் கடந்த 2019ம் ஆண்டில் நிறுவனம் 1.6 மில்லியன் நிதி திரட்டியது.

“பல நிறுவனங்கள் ஆன்லைனில் மாணவர்களுக்கு பாடங்களை வழங்குவதில் செயல்பட்டாலும். கிளாஸ்பிளஸ் ஆசிரியர்களுக்கு தொழில்நுட்பம் மூலம் உதவ தீர்மானித்திருப்பது வளர்ச்சி வாய்ப்புள்ள வர்த்தக மாதிரி,” என அப்போதைய நிதிச் சுற்றில் பங்கேற்ற ஸ்பைரல் வென்சர்ஸ் நிறுவன பாட்னர் ஹாசுஹிரோ சியோ கூறியிருந்தார்.

சந்தை ஆய்வுபடி இந்தியா தனியார் வகுப்பிற்காக 70 மில்லியன் மாணவர்களைக் கொண்டுள்ளது. நாட்டில் 7.5 லட்சம் பயிற்சி மையங்கள் உள்ளன. இந்த துறை ஆண்டுக்கு 21 பில்லியன் டாலர் பணப்புழக்கம் கொண்டுள்ளது.

இந்தத் துறையில், பிராக்டர், எஜுஜில்லா, ஸ்கூலாப் ஆகிய நிறுவனங்கள் கிளாஸ்பிளசுக்கு போட்டியாக உள்ளன.

“இணைய வசதி அதிகரிப்பு மற்றும் ஸ்மார்ட்போன் வசதி ஆகியவை, பயிற்றுனர் வழிகாட்டும், தொழில்நுட்பம் சார்ந்த கற்றலுக்கான வாய்ப்பை பெரிதாக திறந்துவிட்டுள்ளது,” என்கிறார் முகுல்.

ஆங்கில கட்டுரையாளர்: சோஹினி மிட்டர் | தமிழில்: சைபர் சிம்மன்

Latest

Updates from around the world