வல்லம் - வடகால் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்கு ரூ.706.50 கோடி செலவில் அதிநவீன குடியிருப்பு வசதி!
ஸ்ரீபெரும்புதூர் வல்லம் வடகால் தொழிற்பூங்காவில் 20 ஏக்கர்கள் பரப்பில் இந்த வசதி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கான மொத்த செலவு ரூ.706.50 கோடி.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் (சிப்காட்) சார்பில் காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் வட்டம், வல்லம் - வடகால் கிராமத்தில் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்காக 706.50 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 18,720 படுக்கைகள் கொண்ட சிப்காட் மெகா குடியிருப்பு வளாகத்தை திறந்து வைத்தார்.
இந்த தொழிற் பூங்காவில் அதிநவீன தொழில்துறை குடியிருப்பு வசதிகள் நிறுவப்பட்டுள்ளது. இந்த மைல்கல் திட்டம், Foxconn மற்றும் பிற தொழில்துறைகளின் ஊழியர்கள் உட்பட தொழில்துறை பணியாளர்களுக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான வீடுகளை வழங்க வடிவமைக்கப்பட்ட முன்னோடி முயற்சியாகும்.
ஸ்ரீபெரும்புதூர் வல்லம் வடகால் தொழிற்பூங்காவில் 20 ஏக்கர்கள் பரப்பில் இந்த வசதி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கான மொத்த செலவு ரூ.706.50 கோடி. இந்தக் குடியிருப்பில் மொத்தம் 13 பிளாக்குகளில் 18,720 பணியாளர்கள் தங்கலாம். ஒவ்வொன்றும் ஸ்டில்ட் பிளஸ் 10 தளங்களைக் கொண்ட தொகுதிகள். ஒவ்வொரு தங்குமிடம் அறையிலும் 6 படுக்கைகள் உள்ளன, ஒரு தொகுதிக்கு மொத்தம் 240 அறைகள் உள்ளன.
ஒவ்வொரு பிரிவிலும் 3 மின் தூக்கிகள் என மொத்தம் 39 லிப்ட்கள் மற்றும் ஒவ்வொரு பிரிவிலும் தலா ஒரு ஜெனரேட்டர் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சமையலறை, உணவுக்கூடம், திறந்தவெளி பொழுதுபொக்கு மையத்துடன் கூடிய மரங்கள், செயற்கை நீரூற்று அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன.
இந்த திட்டத்துக்கு பாரத ஸ்டேட் வங்கி 498 கோடி ரூபாய் நிதியுதவியும், ஒன்றிய அரசின் சார்பில் ரூ.37.44 கோடி நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தங்கும் விடுதி, ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் பணியாளர்கள் தங்குவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
திருப்பெரும்புதூர் சிப்காட் தொழிற்பூங்காவில் அமைந்துள்ள ஃபாக்ஸ்கான் நிறுவனமானது சுமார் 2,000 கோடி ரூபாய் முதலீட்டில் கைபேசி, நெட்வொர்க் சாதங்கள், தனிக்கணினி இணைத்தல் மற்றும் உதிரிப்பாகங்கள் தயாரிப்பில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்ற 41,000 பணியாளர்களில் 35,000 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
குடியிருப்பின் பிற வசதிகள், அம்சங்கள் வருமாறு:
* உள்ளரங்க விளையாட்டுகள் மற்றும் வெளிப்புற விளையாட்டு பகுதி, மைதானம்
* அனைத்து 13 தொகுதிகளுக்கும் சோலார் வாட்டர் ஹீட்டர் ஏற்பாடு - மேற்கூரை சூரிய மின் நிலையம்-1 மெகாவாட்
* சானிட்டரி நாப்கின் எரியூட்டி - 5
* அனைத்து அறைகளுக்கும் கொசு வலை
* பசுமை இயற்கைக் காட்சி அமைப்புகள்
* சமையலறை கட்டிடம்
* 4 ஆயிரம் உணவு அருந்தும் டைனிங் அறைகள்
* RO ஆலை - 13 எண்கள்
* மழைநீர் சேகரிப்பு
* கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்
* திடக்கழிவு மேலாண்மை
* வாட்டர் டிஸ்பென்சர் - 130 எண்கள் (கட்டிடத்தின் ஒவ்வொரு தளத்திலும்)
* 13 தொகுதிகள் மற்றும் சுற்றளவுக்கான CCTV ஏற்பாடுகள் (மொத்தம் 1170 எண்கள்)