ஃபின்டெக் ஸ்டார்ட் அப்'கள் உலக வளர்ச்சி அடைய சென்னையில் மையம் மற்றும் சர்வதேச ஒப்பந்தங்கள் கையெழுத்து!
ஸ்டார்ட்-அப்களை மேம்படுத்த உதவும் என நம்பிக்கை!
இந்திய மென்பொருள் தொழில்நுட்பப் பூங்கா (STPI), ஃபின்டெக் ஸ்டார்ட்-அப்களுக்கான வழிகாட்டுதல், தொழில்நுட்பம் மற்றும் நிதி உள்ளிட்ட ஆதரவுகளை வழங்க 'சென்டர் ஆப் ஃபின்டெக் எக்ஸலன்ஸ் ' (Centre of Excellence in FinTech) என்ற ஒரு அமைப்பை இந்தியாவில் முதன்முதலில் சென்னையில் அமைத்தது. 'எஸ்டிபிஐஃபின் ப்ளூ' (STPI FinBlue) என அழைக்கப்படும் இந்த மையம், அடுத்த ஐந்து ஆண்டுகளில் 58 நிதி சார்ந்த ஸ்டார்ட்அப்’களை மேம்படுத்தும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது.
ஸ்டார்ட்-அப் ஃபின் ப்ளூ-வின் இரண்டாம் அடுக்கு துவக்க விழா, ஃபின்ப்ளூ மற்றும் சிங்கப்பூர் சேர்ந்த அஃபிந் AFIN நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம், ’ஃபின்டராக்ட் '21’ Finteract ’21 வெள்ளை அறிக்கை வெளியிடுதல் ஆகிய மூன்று நிகழ்வுகளும், நேற்று காணொளி மூலம் தமிழக ஐடி அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் நடைப்பெற்றது குறிப்பிடத்தக்கது.
STPI FinBlue சென்னை சாண்ட்பாக்ஸ் மற்றும் ஏபிஐ எக்ஸ்சேஞ்ச் அணுகலுடன் இன்குபேஷன் சென்டரை கொண்டுள்ளது மற்றும் தேவையான உதவிகளை பயிற்சி, வழிகாட்டுதல், மார்க்கெட்டிங், நிதி ஆதாரங்களுக்கான அணுகல், ஐபிஆர்/ காப்புரிமை உதவி மற்றும் இந்த டொமைனில் வேலை செய்யும் ஸ்டார்ட்-அப்களுக்கு தேவையான ஆதரவு ஆகியவற்றை வழங்குகிறது.
இந்த முயற்சியின் ஒருபகுதியாக STPI FinBlue சென்னையின் எல்லை தாண்டிய, அதாவது மற்ற பகுதிகளிலும் தங்களின் ஒத்துழைப்பை மேம்படுத்த, ஆசியான் நிதி கண்டுபிடிப்பு நெட்வொர்க் லிமிடெட் (AFIN) உடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
AFIN உடன் செய்யப்பட்டுள்ள இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம்,
சென்னையில் STPI FinBlue உதவி வரும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு 'உலகத்தரம் வாய்ந்த தயாரிப்புகளை' மேம்படுத்துவதற்கு அதிகாரம் கிடைப்பதுடன், தொழில்நுட்ப அறிவை மேம்படுத்துவதற்கான ஒத்துழைப்பையும் வலுப்படுத்த முடியும் என்று STPI தெரிவித்துள்ளது.
ஃபின் ப்ளூவின் தலைமை வழிகாட்டி அருண் ஜெயின் பேசுகையில்,
“ஆறு செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஃபின் ப்ளூ, வாங்குபவர்களின் தேவைகள், தயாரிப்பு தரவரிசை, தயாரிப்பு வணிகத்திற்கான கொள்கைகள், சுற்றுச்சூழல் நிதியுதவி, வழிகாட்டுதல் மற்றும் சர்வதேச நெட்வொர்க்கிங் ஆகியவற்றை புரிந்துகொள்ள உதவுகிறது. ஃபின்ப்ளூ ஸ்டார்ட்-அப்கள் உருவாக்கிய ஃபின்டெக் தயாரிப்புகள் 120 நாடுகளுக்கு சென்றடையும்," என்றார்.
சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் தலைமை ஃபின்டெக் அதிகாரி சோப்நேந்து மொஹந்தி கூறுகையில்,
“இந்த கூட்டணி உலக அளவில் ஃபின்டெக் துறையில் உண்மையான தாக்கத்தை ஏற்படுத்தும்" என்றார்.