60 லட்ச ரூபாய் கடனில் இருந்து 3 ஆண்டுகளில் ரூ.20 கோடி விற்பனை: Superlyfe வெற்றிக் கதை!

குடும்ப பிசினஸ் இருந்தும் சுயகாலில் நிற்க முடிவெடுத்து, ரிஸ்வி மற்றும் சுல்தான் தொடங்கிய ரீடெயில் கடை மூலம் தங்களின் வெற்றிக்கதையை பதித்துள்ளனர் இந்த சகோதரர்கள்.
28 CLAPS
0

இதற்குமேல் செய்வதற்கு ஒன்றும் இல்லை என்னும் சூழலில் இறுதியாக செய்யப்படும் முயற்சியில் பலருக்கும் வெற்றி கிடைத்திருக்கிறது. அப்படி ஒரு வெற்றிதான் 'சூப்பர் லைப்' நிறுவனர்களின் கதை!

இளம் வயது முழுவதும் கஷ்டங்களாலும், சிரமங்களுடன் வாழ்ந்த சகோதரர்கள் இணைந்து உருவாக்கிய நிறுவனம் இது. அப்பா டெக்ஸ்டைலில் ஹோல்சேல் பிஸினஸ் செய்துவருகிறார். அதனை மாற்றி ரீடெய்லுக்கு கொண்டுவந்து பெரிய வெற்றியை இரண்டே ஆண்டுகளில் அடைந்திருக்கிறார்கள் இந்த சென்னை சகோதரர்கள்.

ஆரம்ப காலம்

ரிஸ்வி மன்ஸவல்லி மற்றும் சுல்தான் ஆகிய சகோதரர்கள் தொடங்கிய நிறுவனம்தான் ‘Superlyfe' 'சூப்பர் லைப்'.  இவர்களது பூர்விகம் கரூர் அருகே உள்ள பள்ளப்பபட்டி. அங்கிருந்து 1940களிலே இவர்களது குடும்பம் சென்னை வந்துவிட்டது. இவர்களின் குடும்பத்தில் பெரும்பாலும் தொழில்முனைவோர்கள்தான். தாத்தா 1940-களில் சென்னையில் மளிகைக் கடை நடத்தினார். அப்பா டெக்ஸ்டைல் மொத்த பிஸினஸில் இருக்கிறார். தமிழ்நாட்டில் உள்ள டெக்ஸ்டைல் ரீடெய்ல் கடைகளுக்கு மொத்த விலையில் விற்பனை செய்துவருகிறது இவர்களின் குடும்ப நிறுவனம். உறவினர்களும் சொந்தத் தொழில் செய்துவருகின்றனர்.

சுல்தான் ஒரு மாற்றுத்திறனாளி. இவரது எலும்புகள் மிகவும் மென்மையானவை. அதனால் குழந்தையில் இருந்தே மருத்துவமனையில் அதிக காலம் இருக்கும் சூழல் இருந்தது. உதாரணத்துக்கு சொல்ல வேண்டும் என்றால் வேகமாக தும்பல் அல்லது இருமல் வந்தால் கூட எலும்பில் முறிவு ஏற்படும். இதுவரை 200-க்கும் மேற்பட்ட முறை இதுபோல பிராக்சர் நடந்திருப்பதால் அதிகக் கவனமாக அவர் இருக்க வேண்டிய சூழல்.

தவிர குழந்தை பருவத்தில் அதிக நாள் மருத்துவமனையில் இருக்கவேண்டி இருந்ததால் வழக்கமான பள்ளிப்படிப்பு இவருக்குக் கிடைக்கவில்லை. வீட்டில் இருந்தே படிக்க வேண்டிய சூழல். பேனா பிடித்து எழுதவே முடியாது, அதனால் தேர்வுகள் கூட சுல்தானால் எழுதமுடியவில்லை. இவர் சொல்லசொல்ல மற்றவர்கள்தான் எழுத முடியும்.

வீட்டிலே இருந்ததால் கல்லூரி படிப்பு நிச்சயம் கல்லூரியில்தான் இருக்க வேண்டும் என முடிவெடுத்து லயோலாவில் சேர்ந்துள்ளார் சுல்தான். கிராபிக் டிசைனிங் படிப்பை முடித்துள்ளார். இதற்டையே, இவரது அண்ணன் ரிஸ்வி அகமதாபாத்தில் டிசைனிங் முடித்துவிட்டு சென்னையில் உள்ள பிளின்டோபாக்ஸ் நிறுவனத்தில் வேலை செய்திருக்கிறார். இதனை தொடர்ந்து ஹெச்.சி.எல் பெங்களூருவில் வேலை செய்தார்.

இவர்களது குடும்பத்தில் பெரும்பாலும் சுய தொழில் செய்பவர்கள் என்பதால் அனைவரது வீடுகளிலும் செல்வம் இருந்தாலும் ஒரு நிச்சயமற்ற தன்மை இருந்துகொண்டே இருக்கும். இதனால், நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும் என்பதை சொல்லியே வளர்க்கப்பட்டதால் வேலைக்கு சென்றிருக்கிறார் ரிஸ்வி. இருந்தாலும் தொழில் குடும்பத்தில் இருந்து வந்திருப்பதால் தொழில் தொடங்க வேண்டும் என்னும் எண்ணம் இவருக்கு வந்திருக்கிறது.

ரிஸ்வி மன்ஸவல்லி மற்றும் சுல்தான்

அதனால், தமக்கு தெரிந்த டெக்ஸ்டைல் தொழிலில் இறங்கினார். ஆண்களுக்கான பேன்ட் மொத்தமாக விற்பனை செய்வதுதான் திட்டம். இதற்காக பிரத்யேக பிராண்ட் உருவாக்கினார். இந்த பிராண்ட் பெங்களூருவில் இருந்து செயல்பட்டது. இதற்கிடையே இதே காலத்தில் சென்னையில் லஸ்ஸி நிறுவனத்தை தொடங்கினார் சுல்தான். இரு நிறுவனங்களுமே பெரிய வெற்றியை அடையமுடியவில்லை.

வேகமாக தொழில் தொடங்க வேண்டும். அதே சமயத்தில் வெற்றி அடையவில்லை என்றால் வேகமாக வெளியேறவேண்டும் என்பதுதான் இவர்களின் திட்டம். தொழிலை நிறுத்தினாலும் இரு தொழில்களிலும் சுமார் 60 லட்சம் நஷ்டம். இதில் சில லட்ச ரூபாய் ரிஸ்வியின் சேமிப்புகள் என்றாலும் பெரும்பாலும் கடன்தான். மீண்டும் வேலைக்குச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டதாக தெரிவித்தார்.

இந்த சமயத்தில் பெங்களூருவில் இருந்து ரிஸ்வி சென்னைக்கு வந்துவிட்டார். வேலைக்கு செல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கும்போது, அப்பாவிடம் 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஆடைகள் தேங்கிவிட்டன. அப்பா இதுவரை மொத்த விலை பிஸினஸில் இருந்துவிட்டார்.

நாம் ரீடெய்லில் இறங்கினால் என்ன என்னும் ஐடியாவில் அப்பாவின் குடோனை கடையாக மாற்றி அமைத்து 2019-ம் ஆண்டு அக்டோபர் 11-ம் தேதி ’சூப்பர் லைப்’ என்னும் பிராண்டினை தொடங்கி இருக்கிறார்.

”அருகில் உள்ள வீடுகளுக்கு விளம்பர பாம்ப்லெட் கொடுத்தோம். முதல் நாள் காலையில் 3 வாடிக்கையாளர்கள் வந்தார்கள். மாலையில் அவர்களே 30 நபர்களை அழைத்து வந்தார்கள். அடுத்த சில வாரத்தில் தீபாவளி என்பதால் நல்ல விற்பனை இருந்தது. தீபாவளிக்கு முந்தைய நாள் மட்டும் ரூ.15 லட்சம் விற்பனையானது,” என தங்கள் வெற்றியின் முதல் ஸ்வாசம் பற்றி உற்சாகமாகக் கூறினார் சுல்தான்.

சூப்பர் லைப் சிறப்பம்சம்

Superlyfe முதல் கடையை சென்னை விருகம்பாக்கத்தில் இவர்கள் தொடங்கினர். இந்தக் கடையை தொடங்கும்போதே ரூ.9 ரூபாய் முதல் ரூ.399 வரை மட்டுமே ஆடைகள் இருக்க வேண்டும் என முடிவெடுத்தோம். (பின்னர் ரூ.499 ஆக உயர்த்தப்பட்டது). மொத்த விலையில் இருப்பதால் எங்களுக்கு அடக்க விலை தெரியும். அதனால் குறைந்த லாபம் கிடைத்தால் போதும் என நினைத்தோம். இதற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது.

அப்பா மொத்த விலை பிஸினஸில் இருப்பதால் 120 நாட்களுக்குப் பிறகுதான் பேமண்ட் கிடைக்கும். ஆனால், நாங்கள் ரீடெய்லில் இறங்கினால் பணம் கொடுத்து மக்கள் வாங்குவதால் நான்கு மாதத்துக்கு பிறகு பணம் கிடைப்பதை விட இப்போதே குறைந்த லாபம் கிடைப்பது போதுமானது என நினைத்தோம்.

இருந்தாலும் ரீடெய்லில் இருந்து கொண்டு மற்ற நிறுவனங்களை விட நீங்கள் எப்படி குறைவாக கொடுக்க முடிகிறது என பலர் கேட்கிறார்கள்.

மற்ற ரீடெய்ல் நிறுவனங்கள் முக்கிய இடத்தில் கடையை அமைக்கிறார்கள், அலங்காரத்துக்கு அதிக செலவு செய்கிறார்கள், விளம்பரச் செலவு இருக்கிறது, மின்சாரக் கட்டணம் இருக்கிறது. ஆனால் இதையெல்லாம் நாங்கள் செய்வதில்லை. நாங்கள் வீடுகள் அதிகம் இருக்கும் இடங்களில்தான் கடையை அமைக்கிறோம்.

அதனால் சராசரியாக சதுர அடிக்கு ரூ.22 வாடகை என்னும் அளவில்தான் எங்கள் வாடகை இருக்கிறது. மற்ற நிறுவனங்களுக்கு ரூ.75 சதுர அடிக்கு செலவாகிறது. சில இடங்களில் ரூ.100 கூட செலவாகிறது.

அதேபோல, நாங்கள் ஏசி வைப்பதில்லை. ஏசிக்கு மூலதனம் மட்டுமல்லாமல் மின்சார கட்டணமும் செலுத்த வேண்டும். சமூக வலைதளங்களை தவிர நாங்கள் வேறு வழியில் விளம்பரம் செய்வதில்லை. எங்கள் வாடிக்கையாளர்கள் எங்களுக்காக பரிந்துரை செய்வதுதான் மிகப்பெரிய விளம்பரம் என ரிஸ்வி தெரிவித்தார்.

மற்றொரு முக்கிய விஷயத்தை சுல்தான் பகிர்ந்தார். டெக்ஸ்டைல் நிறுவனங்கள் சதவீத அடிப்படையில் லாபத்தை நிர்ணம் செய்வார்கள். உதாரணத்துக்கு ஒரு ஆடை ரூ.100 என்றால் 40 சதவீதம் என லாபத்தை நிர்ணயம் செய்வார்கள். ஆனால் நாங்கள் ரூபாய் அடிப்படையில் லாபத்தை நிர்ணயம் செய்கிறோம்.

ரூ.2, ரூ.5, ரூ10, ரு,25 என ரூபாய் அடிப்படையிலே நாங்கள் லாபத்தை நிர்ணயம் செய்கிறோம். செலவுகள் மற்றும் லாபத்தை குறைக்கும்போது எங்களால் இந்த விலையில் கொடுக்க முடிகிறது. அதே சமயத்தில் நாங்கள் பேஷன் ஆடைகளை விற்பனை செய்வதில்லை. அன்றாட பயன்பாட்டுக்கான ஆடைகளை விற்பனை செய்வதால் ஒரு பொருள் கடையில் தங்கும் காலம் என்பது மிகக் குறைவு.

நிதி சார்ந்த தகவல்கள்

ஒரு கிளையில் தொடங்கி இப்போது இவர்களுக்கு விருகம்பாக்கம் பூந்தமல்லி, பெரம்பூர், மடிப்பாக்கம் என நான்கு கடைகள் சென்னையில் உள்ளன. பெரும்பாலும் நடுத்தர வர்கத்தை குறிவைத்து இயங்கும் சூப்பர் லைப், சாமானிய மக்களுக்கு ஏற்ற விலையில் ஆடைகள் கிடைப்பதால் அதிகக்கூட்டம் வருவதாக தெரிவிக்கிறார்கள் இதன் நிறுவனர்கள்.

ஒரு கடைக்கு ஒரு நாளைக்கு சராசரியாக 300 நபர்கள் வருகிறார்கள். சராசரி பில் மதிப்பு ரூ.950 முதல் ரூ.1050 வரை இருக்கும். கடந்த நிதி ஆண்டில் ரூ.20 கோடி விற்பனை செய்திருக்கிறோம்,” என்றனர்.

499 ரூபாய் என விற்பனை செய்வதற்கு பதிலாக ரூ.750 என விற்பனை செய்தாலும் மக்கள் வாங்குவார்களே. ஏன் லாபத்தை இழக்கிறீர்கள் எனக் கேட்டதற்கு.

”முதலில் நாங்கள் நஷ்டத்துக்கு விற்பதில்லை. குறைந்த லாபத்தில் விற்பதால் எங்களால் பணத்தை ரொட்டேட் செய்ய முடியும். எங்களிடம் பொருட்கள் தங்குவதில்லை. அதை விட முக்கியம் சி.கே.பிரகலாத் சொல்வதுபோல, ‘பாட்டம் ஆப் த பிரமிட்’ மக்கள்தான் இந்தியாவில் அதிகம் இருக்கிறார்கள். அவர்களுக்கான தேவை இருக்கிறது. இவர்களின் தேவையை பூர்த்தி செய்வதற்கே பல காலம் ஆகும் என்பதால் இதே மாடலில் செயல்படவே விரும்புகிறோம்,” எனத் தெரிவித்தனர்.

சென்னையில் ஒரு கோடி பேருக்கு மேல் இருக்கிறார்கள். இந்த இரு ஆண்டுகளில் இரண்டு லட்சம் வாடிக்கையாளர்கள் எங்களிடம் இருந்திருக்கிறார்கள். அதனால் இந்த மாடலுக்கு நிறைய தேவை இருக்கிறது. 2025-ம் ஆண்டுக்குள் 30 கடைகளாவது சென்னைக்குள் அமைக்க வேண்டும் எனத் திட்டமிட்டுள்ளதாக சகோதரர்கள் நம்பிக்கையுடன் தெரிவித்தனர்.

கடைகளை அமைக்கும்போது கூட மார்க்கெட் ஸ்டடி என எதையும் செய்வதில்லை. சமூக வலைதளங்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். எந்த பகுதியில் இருந்து அதிக கோரிக்கை வருகிறதோ அங்கு நல்ல இடமாக பார்த்து அமைக்க இருக்கிறோம். அடுத்து வேளச்சேரி, ஊரப்பாக்கம் அல்லது தென் சென்னையில் கடைகள் அமைக்க இருக்கிறோம் எனக் கூறினர்.

60 லட்ச ரூபாய் கடனில் இருந்து அடுத்த மூன்று ஆண்டுகளில் ரூ.20கோடி  விற்பனை என்பது பெரிய சாதனை. இருவருமே தனித்தனியாக தோல்வியடைந்து கடனில் இருந்திருக்கிறார்கள். அப்போது இவர்களின் அப்பா கூறியது இவர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து தொழில் முனைவோர்களுக்கும் பொருத்தமானதுதான்.

“இதைவிட பெரிய தோல்விகளையும், அவமானங்களையும், விரக்தியையும் நான் சந்தித்திருக்கிறேன். லட்சக்கணக்கில் பணம் வர வேண்டி இருக்கும். ஆனால் டி குடிக்க காசு இருக்காது. தொழிலில் ஏற்ற இறக்கம் இருக்கும், தொழிலை விடாதீர்கள் எனக் கூறினார். இதன் பிறகே சூப்பர் லைப் தொடங்கப்பட்டு பெரும் வெற்றி பெற்றிருக்கிறது.

Latest

Updates from around the world