விவசாயிகளின் தங்க மகள்; இந்தியாவின் மிகப்பெரிய சக்கரை ஆலைக்கு சொந்தக்காரி!

77 CLAPS
0

1944ம் ஆண்டு அலகாபாத்தில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர் மீனாட்சி. தனது 20வது வயதில் கல்லூரிப் படிப்பை முடித்த கையுடன், கொல்கத்தாவுக்கு இடம்மாறினார். அங்கேயே தொழிலதிபர் கமல் நயா சரயோகியை திருமணம் செய்துகொண்டு தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.

கமல் நயா சரயோகி பல்வேறு தொழில்களைச் செய்து வருபவர். அவர் செய்யும் தொழிலில் ஒன்று தான் சர்க்கரை ஆலை. மேற்கு வங்கத்தில் உள்ள பல்ராம்பூரில் அவர்களுக்கென சொந்தமாக சர்க்கரை ஆலை ஒன்று இருந்தது. மீனாட்சி திருமணமாகி 13 ஆண்டுகள் வரை மற்ற பெண்களைப்போல இல்லத்தரசியாகவே இருந்தார்.

பெரிய அளவில் வீட்டை விட்டு வெளியில் செல்லாதவர். கரும்பு அரவை காலத்தில் மட்டும் குழந்தைகள், கணவருடன் இணைந்து பல்ராம்பூர் செல்வது வழக்கம். இதுதான் மீனாட்சியின் வெளியுலக பயணம். இதனிடையே 1982ம் ஆண்டு அவர் மனதில் ஒரு யோசனை தோன்றியது, அதன்படி, சுகர் இன்டஸ்ட்ரியில் தன்னையும் இணைத்துக்கொள்ளுமாறு கணவரிடம் மீனாட்சி தெரிவிக்க, கணவர் அவரை ஊக்குவித்து சேர்த்துக்கொண்டார்.

முன்னதாக தொழில் பார்க்கும்போது, தனது குழந்தைகளை கவனித்துக்கொள்ள சிரமமாக இருக்கும் எனக் கூறி, தனது இரண்டு குழந்தைகளையும் தாய் வீட்டுக்கு அனுப்பிவிட்டார் மீனாட்சி. பல்ராம்பூரில் தங்கிய அவர், தொழிலை நேரடியாகக் கவனிக்க ஆரம்பித்தார்.

தனது கடின உழைப்பின் சாதரணமாக இருந்த சர்க்கரை ஆலையை மிகப்பெரிய ஆலையாக மாற்றினார். தொடர் உழைப்பு, அர்பணிப்பு காரணமாக ஒரு கட்டத்தில் தனது சர்க்கரை ஆலையை இந்தியாவிலேயே மிகப்பெரிய சர்க்கரை ஆலையாக மாற்றி, தொழிலில் 2-வது இடத்தை பிடித்து சாதனை படைத்தார்.

ஒரு நாளைக்கு 800 டன் அரவை மட்டுமே இருந்து வந்தநிலையில் அதனை, தினசரி 76,500 டன் என்ற அளவுக்கு உயர்த்தினார். இந்தியாவின் 100 சதவிகிதம் நம்பகத்தன்மையுள்ள சர்க்கரை ஆலையாக பல்ராம்பூர் சர்க்கரை ஆலையை வளர்த்தெடுத்தனர்.

கடந்த 2019-20 காலகட்டத்தில் இந்த நிறுவனம் ரூ.609 கோடி லாபம் சம்பாதித்துள்ளது. இவர்களின் வளர்ச்சிக்கு நம்பகத்தன்மை தான் காரணம் என்கின்றனர். குறிப்பாக கரும்பு கொள்முதலுக்கு உடனடியாக பணத்தை கொடுத்துவிடும் வழக்கத்தை கொண்டுள்ளனர். கடந்த 40 ஆண்டுகளில் கரும்பு விவசாயிகளிடமிருந்து கிட்டத்தட்ட ரூ. 50ஆயிரம் கோடிக்கு மேல் பரிவர்த்தனை செய்துள்ளனர்.

பல்ராம்பூரை பொறுத்தவரை, அது மேற்கவங்காளத்தில் மிகவும் பின்தங்கிய பகுதி. அதனை வளம் மிக்க பகுதியாக அடையாளப்படுத்தக் காரணம் மீனாட்சி தான். களப்பணியினால், பல்ராம்பூரில் பெரிய தொழிற்சாலைகள், வேலைவாய்ப்புகள் அதிகம் கிடைக்க வழிவகுத்தார். விவசாயிகளுக்கு பக்க பலமாக இருந்து, விவசாயிகளுக்கு கல்வி அறிவு, உரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

தொடக்கத்தில் விவசாயிகளுக்கு போதுமான ஆதார விலை கிடைக்கவில்லை. இதனால் கரும்பு பயிரிட விவசாயிகள் தயக்கம் தெரிவித்தனர். அப்போது மீனாட்சி, அவர்களின் வீடுகளுக்குச் சென்று பேசினார். அவர்களை சமாதானப்படுத்தினார்.

”கரும்பு பயிரிடுங்கள், உரிய விலை தருகிறேன், என உறுதியளித்தார். உங்களின் ஒரு கரும்பு கூட வீணாகாது; நானே வாங்கிக்கொள்கிறேன் என்று கூறி அதன்படியே விவசாயிகளின் கரும்புகளை வாங்கிக்கொண்டார். இன்றுவரை, பல்ராம்பூர் சின்னி சர்க்கரை ஆலை இந்த வாக்குறுதியை கடைபிடித்து வருவதாக நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார்கள் அப்பகுதி விவசாயிகள்.”

பயிர்களை கொள்முதல் செய்யும்போது, விவசாயிகளின் கையில் பயிருக்கான உரிய தொகை கிடைக்கச்செய்தவர்.

“அவர்களுக்கு வேறு தொழில் தெரியாது. தெரிந்த ஒரே தொழில் விவசாயம் தான். விவசாயமே அவர்களின் பிரதானமான தொழில். அப்படிப்பட்டச் சூழலில் அவர்களின் உழைப்பு வீணாகுவதை என்னால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது,” என கூறியவர் மீனாட்சி.

Latest

Updates from around the world