வெள்ளை கவுன் ‘வாஷிங் பவுடர் நிர்மா’ சிறுமியை மறக்க முடியுமா? - கர்சன்பாய் படேலின் வியத்தகு வெற்றிக் கதை!

By Jai s
January 06, 2023, Updated on : Fri Jan 06 2023 07:48:23 GMT+0000
வெள்ளை கவுன் ‘வாஷிங் பவுடர் நிர்மா’ சிறுமியை மறக்க முடியுமா? - கர்சன்பாய் படேலின் வியத்தகு வெற்றிக் கதை!
‘வாஷிங் பவுடர் நிர்மா’ என்ற விளம்பரப் பாடலையும், அதில் வெள்ளை கவுன் அணிந்து வந்து சுழன்று ஆடும் சிறுமியையும் மறந்திருக்க மாட்டோம். குடிசைத் தொழில் போல அந்த நிர்மா நிறுவனத்தை தொடங்கி, இன்று உலகப் பணக்காரர்கள் பட்டியலில் நீடிக்கும் கர்சன்பாய் படேலின் வெற்றிக் கதையே ஒரு பாடம்தான்.
  • +0
    Clap Icon
Share on
close
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

தரமான பொருள் வேண்டுமென்றால் அதற்கான அதிகபட்ச விலையைக் கொடுக்க வேண்டும் என்ற நியதியை உடைத்தவர் கர்சன்பாய் படேல் என்றால் மிகையாகாது. துணிச் சலவைத் துறையில் தன் நிர்மா வாஷிங் பவுடர் மூலம் புதிய புரட்சியையே செய்தவர் கர்சன்பாய் படேல்.


இன்று வரை பிரபலமாக இருக்கும் சர்ஃப் என்ற பெரும் வர்த்தக வாஷிங் பவுடரை 1980-களில், குறிப்பாக சொல்ல வேண்டுமெனில் 1985ம் ஆண்டு வாக்கில் முறியடித்து பெருமளவு சந்தையை நிர்மா பிடித்தது. இதற்குக் காரணம் கிலோ ரூ.13 விற்ற சர்ஃபிற்கு மாற்றாக ரூ.3.50 நிர்மாவை கொண்டு வந்து ‘வாஷிங் பவுடர் நிர்மா’ என்ற விளம்பரப் பாடல் மூலம் பிரபலமாக்கி ஒவ்வொரு வீட்டிலும் நிர்மா வாஷிங் பவுடர் மற்றும் நிர்மா நிறுவனத்தின் பிற சலவைப் பொருட்கள் இருப்பதை உறுதி செய்ததில் நிறுவனத்தின் உரிமையாளர் கர்சன் பாய் படேலின் மூளையும் உழைப்பும் இருந்துள்ளது.

தரமான பொருட்களுக்கு அதிக விலை அவசியமில்லை, குறைந்த விலையில் தரத்தை கொடுக்க முடியும் என்பதில் நிர்மாவை உருவாக்கிய கர்சன்பாய் படேலுக்கு முக்கியப் பங்கு உள்ளது.
nirma founder

நிர்மா நிறுவனர் கர்சன்பாய் படேல்

சிறு அறையில் தொடங்கிய நிர்மாவின் பயணம்

குஜராத் அரசின் சுரங்க மற்றும் நிலவியல் நிறுவனத்தில் ‘கெமிஸ்ட்’ ஆகப் பணிபுரிந்த கர்சன்பாய் படேல், தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு பாஸ்பேட் அல்லாத செயற்கை வாஷிங் பவுடரை தயாரித்தார். முதலில் உள்ளூரில்தான் விற்றார். தன்னுடைய வீட்டில் ஒரு சிறிய அறையில்தான் இதனை முதலில் தயாரித்தார். குஜராத் மாநிலத்தில் அவரது சொந்த ஊரான ருப்பூரில் நன்றாக விற்றது.


கர்சன்பாய் படேலின் மகள் பெயர் நிருபமா. அந்தப் பெயரைத்தான் அவர் ‘நிர்மா’ என்று மாற்றி தன் வர்த்தகப் பெயராகச் சூட்டினார். தான் அலுவலகத்திற்கு சைக்கிளில் செல்லும்போது ஒரு நாளைக்கு 10-15 பாக்கெட்டுகள் விற்பனை செய்வார்.


1969ல் இது குடிசைத்தொழில் போல் தொடங்கியது. 1985ல் சர்ஃபை காலி செய்து பெரும்பாலான இந்தியச் சந்தையை தன் வசமாக்கியது. வீட்டுக்கு வீடு விற்பனையிலிருந்து தொடங்கி பலதரப்பட்ட வீட்டு உபயோக சலவைப் பொருட்களை பல்வேறு வடிவங்களில் கொண்டு வந்த பெரு நிறுவனமானது ‘நிர்மா’.


இன்று கர்சன்பாய் படேலின் சொத்து மதிப்பு ஃபோர்ப்ஸ் தகவலின் படி, 4.1 பில்லியன் டாலர்களாகும். 90-களில் இளையராஜாவின் அதியற்புதமான மெலடிகளைக் கேட்ட அதே காதுகள் ‘வாஷிங் பவுடர் நிர்மா’ என்ற விளம்பரப் பாடலையும் அதில் வெள்ளை கவுன் அணிந்து வந்து சுழன்று ஆடும் சிறுமியையும் மறக்க முடியாது.

கர்சன்பாய் படேலின் பின்னணி

1945ல் குஜராத் ருப்பூரில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்தான் கர்சன்பாய் படேல். 21 வயதில் ரசாயனத்தில் பட்டப்படிப்பை முடித்தார். நியூ காட்டன் மில்சில் வேலை பார்த்தார். பிறகு, குஜராத் சுரங்கம் மற்றும் நிலவியல் துறையில் பணியில் சேர்ந்தார். இப்படி ஒரு சாதாரணமான வாழ்க்கையாகச் சென்று கொண்டிருந்த கர்சன்பாய் வாழ்வில் 1969ம் ஆண்டு பெரும் திருப்பம் ஏற்பட்டது.

ரசாயன மாணவர் என்பதால் சோடா ஆஷையும் அதனுடன் வேறு சில ரசாயனங்களையும் சேர்த்து சோதனை செய்து பார்த்ததன் முடிவில் அருமையான ஒரு டிடெர்ஜென்ட் பவுடர் அவருக்குக் கிடைத்தது. தன் வீட்டுக்குப் பின்னால் ஒரு சிறிய இடத்தில் வாஷிங் பவுடரை உற்பத்தி செய்யத் தொடங்கினார்.

கர்சன்பாய் படேலின் வாழ்க்கையில் அனைத்தும் சுமுகமாகச் சென்று கொண்டிருந்தபோது விதி அவர் வாழ்க்கையில் விளையாடியது. அவரது செல்ல மகள் கார் விபத்தில் பலியாகி குடும்பத்தையே சோகத்தில் ஆழ்த்தியது. மகளை இழந்த துக்கத்திலேயே உழலாமல் மகளை வேறு வடிவில் மீண்டும் வாழ்க்கையில் கொண்டு வருவது என முயற்சி செய்தார்.

Nirma

அவரது முயற்சியும் செயலுறுதியும் காலன் பறித்துக் கொண்ட அவளது மகளை புத்துயிர்ப்பு செய்தது. இந்தியா முழுதும் நிருபமா நிர்மாவாக வளையவரத் தொடங்கினாள்.


முதலில் சைக்கிளில் வீடு வீடாக சென்று விற்றார். கிலோ ரூ.3.50 தான். அப்போது விற்ற மற்ற சலவை சோப் மற்றும் பவுடர்களின் விலையை ஒப்பிடும்போது மூன்றில் ஒரு பங்குதான் நிர்மாவின் விலை.

மகளின் இறப்பின் துக்கத்தை, பாசத்தை ஈடுகட்ட முடியாத இழப்பையே நிர்மா மூலம் இழப்பீடாக உருவாக்கி பன்னாட்டு நிறுவனமான ஹிந்துஸ்தான் லீவரின் சர்ஃபிற்கு பெரும் தலைவலியை உருவாக்கினார் கர்சன்பாய் படேல்.

நிர்மா பிராண்டின் மதிப்பு

கர்சன்பாய் படேலை பொறுத்தவரை இது வெறும் உற்பத்திப் பொருள் அல்ல. லாப நோக்கிற்கான பொருள் அல்ல. அவரது இருதயத்திற்கு நெருக்கமான மகளைப் போன்றது. அவருடைய இன்னொரு மகள்தான் நிர்மா.


1995-ம் ஆண்டு நிர்மாவுக்கு ஒரு புதிய அடையாளத்தை உருவாக்கினார் கர்சன்பாய். அகமதாபாத்தில் நிர்மா தொழில்நுட்ப நிறுவனத்தைத் தொடங்கினார். 2003-ல் நிர்மா பலகலைக் கழகம் உருவானது.

இவருக்காகவே குஜராத் மாநில அரசு புதிய சட்டத்தையே இயற்றியது என்றால் நிர்மா என்ற பிராண்டின் மதிப்பு என்னவென்பதை ஊகித்துக் கொள்ளலாம்.

2004-ம் ஆண்டு ஃபோர்ப்ஸ் கணக்கீட்டின்படி, நிர்மாவின் விற்பனை சுமார் 8 லட்சம் டன்களாகும். தன் வீட்டின் பின்புறத்தில் இந்த உற்பத்தியைத் தொடங்கி பெரும்புள்ளியான கர்சன்பாய் படேல், உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 775-வது இடத்தில் இருக்கிறார். இந்திய செல்வந்தர்களில் 39-வது இடத்தில் இருக்கிறார். இப்போது வெற்றியடைந்த வர்த்தகத்தை அவரது மகன்கள் ராகேஷ் படேல், ஹிரன் பாய் படேல் ஆகியோர் நிர்வகித்து வருகின்றனர்.

Nirma karsanbhai Patel

2007ல் நிர்மா நிறுவனம் அமெரிக்க நிறுவனமான சேர்ல்ஸ் வேலி மினரல்ஸ் நிறுவனத்தை வாங்கியது. இதன் மூலம் சோடா ஆஷ் உற்பத்தியில் டாப் 7 நிறுவனங்களில் ஒன்றாக உயர்ந்தது நிர்மா. இதோடு 2014ல் நிர்மா சிமென்ட் உற்பத்தியில் இறங்கியது. 2016-ம் ஆண்டு லாஃபார்ஜ் என்ற பிரெஞ்சு சிமென்ட் மற்றும் கட்டுமான பொருள் உற்பத்தி நிறுவனத்தையும் 1.4 பில்லியன் டாலர்களுக்கு வாங்கியது. பிப்ரவரி 2020-ல் இமாமி சிமென்ட் நிறுவனத்தையும் நிர்மா வாங்கியது.


2010ல் கர்சன்பாய் படேலுக்கு பத்மஸ்ரீ விருது அளிக்கப்பட்டது. 1969ல் வீட்டின் பின்னால் குடிசைத்தொழில் போன்று தொடங்கி ஹிந்துஸ்தான் லீவர் போன்ற ராட்சத பன்னாட்டு நிறுவனங்களுக்குப் போட்டியாக எழுச்சி பெற்று இன்று வரை நிலைத்து மென்மேலும் வளர்ந்து வருகிறது என்றால் கர்சன்பாய் படேல் என்ற குஜராத்தியின் ரத்தத்தில் ஊறிய வர்த்தகக் குணம் என்றால் மிகையாகாது.


அரசு வேலையையும் பன்னாட்டு நிறுவன வேலையையும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் இன்றைய இந்திய இளைஞர்களுக்கு ஒரு பாடமாகத் திகழ்கிறார் கர்சன்பாய் படேல்.


Edited by Induja Raghunathan