சேல்ஸ்மேன் டு வெற்றித் தொழில் முனைவர்: ட்ரெய்லர் தயாரிப்பில் 40கோடி டர்ன்ஓவர்!

By YS TEAM TAMIL|23rd Mar 2021
ஜெய் கே முல்சந்தனி 2017-ம் ஆண்டு CoreB Group தொடங்கி HINDALCO ஆதரவுடன் முதல் முறையாக அலுமினியம் ட்ரெய்லர்கள் தயாரித்து துறையில் புதுமை படைத்துள்ளார்.
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

ஜெய் கே முல்சந்தனி ராஜஸ்தானின் கோட்புட்லி பகுதியைச் சேர்ந்தவர். மிகவும் இளம் வயதான 14 வயதிலேயே அப்பாவின் வணிக நடவடிக்கைகளில் உதவ ஆரம்பித்துள்ளார்.

இவர் தனது அனுபவத்தைக் கொண்டு இன்று பல கோடி ரூபாய் மதிப்புள்ள ட்ரெய்லர் மற்றும் எர்த்மூவிங் இயந்திரங்கள் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.


இவரது நிறுவனத்தின் பெயர் CoreB Group. இந்நிறுவனம் இந்தியாவிலேயே முதல் முறையாக அலுமினியம் ட்ரெய்லர்கள் மற்றும் 52 டன் ட்ரெய்லர்களை சந்தையில் அறிமுகப்படுத்தியது.

ஜெய் ஐஐடி-யில் படிக்கவேண்டும் என்பதே அவரது பெற்றோரின் கனவாக இருந்தது. நுழைவுத் தேர்வுக்குத் தயாராக கோட்டா பகுதிக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் அவர் நுழைவுத் தேர்வில் வெற்றி பெறவில்லை.


விஐடி ஜெய்ப்பூரில் மெக்கானிக்கல் பொறியியல் சேர்ந்து 2016-ம் ஆண்டு பட்டம் பெற்றார்.

ஆட்டோ தயாரிப்பு நிறுவனம் ஒன்று இவர் படித்த கல்லூரியில் கேம்பஸ் இண்டர்வியூ நடத்தியது. அதில் இரண்டு பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டார்கள். அதில் ஜெய் ஒருவர்.

1

ஜெய் கே முல்சந்தனி

“என் கால் தரையில் படவில்லை. காற்றிலேயே மிதந்தேன். அத்தனை மகிழ்ச்சி. சிறிய நகரில் இருந்து வந்து கல்லூரிப் படிப்பு படித்தேன். எனக்கு வேலை கிடைத்ததும் என் பெற்றோர் மிகவும் சந்தோஷப்பட்டார்கள்,” என்றார்.

ஆனால் தேர்ட் பார்ட்டி பேரோல்கீழ் தேர்வாகி இருந்தது பின்னரே தெரியவந்தது.

ஆரம்ப நாட்கள்

ஜோத்பூரில் உள்ள டீலர்ஷிப் யூனிட்டில் முதல் வேலையில் நியமிக்கப்பட்டார் ஜெய். ட்ரக் விற்பனை செய்ய டீலர்களுக்கு உதவவேண்டும். இதுவே அவருக்கு ஒதுக்கப்பட்ட பணி.

ட்ரக் விற்பனை செய்தால் கமிஷன் கிடைக்குமா என்று ஜெய் முதலாளியிடம் கேட்டுள்ளார். அவரும் ஒரு ட்ரக் விற்பனைக்கு 2,000 ரூபாய் கொடுக்க சம்மதித்துள்ளார்.

”முதல் மாதம் 4 ட்ரக் விற்பனை செய்தேன். வாடிக்கையாளர்களைக் கவர சாலைகளில் துண்டு பிரசுரம்கூட விநியோகித்தேன். எப்படியாவது பணம் சம்பாதித்து வீட்டுக்கு அனுப்பவேண்டும் என்பது மட்டுமே குறிக்கோளாக இருந்தது,” என்கிறார் ஜெய்.

ஒருமுறை ஒரு நிகழ்ச்சி நடந்தது. அதில் ஜெய் வேலை செய்த நிறுவனத்தின் போட்டியாளராக செயல்பட்ட மற்றொரு நிறுவனமும் பங்கேற்றது. அவர்கள் ஜெய் ஈடுபாடுடன் வேலை செய்வதை கவனித்துள்ளனர்.


நல்ல சம்பளத்துடன் ஜெய்க்கு வேலை வாய்ப்பையும் கொடுத்துள்ளனர். ஜெய் இங்கு வேலைக்குச் சேர்ந்தார். ஆனால் அவரால் பணியை திருப்தியுடன் தொடர முடியவில்லை. அங்கு ஊழியர்களிடையே பாலிடிக்ஸ் இருந்தது.


ராஜஸ்தானில் உள்ள பாலைவனப் பகுதிக்கு மாற்றப்பட்டார். இதுபோன்ற பகுதியில் கிளையண்டை சந்தித்து விற்பனை செய்வது கடினமாக இருந்துள்ளது. எப்படிப்பட்ட மோசமான சூழலிலும் சில நன்மைகளும் படிப்பினைகளும் இருப்பதுண்டு. அதுபோல் ஜெய் சென்ற ராஜஸ்தான் பகுதிகளில் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட பழைய ட்ரக்களின் தேவை அதிகம் இருப்பதை உணர்ந்தார்.


இந்த வாய்ப்பை பயன்படுத்திகொள்ள முடிவெடுத்தார். ட்ரக், ஸ்பேர் பார்ட்ஸ், ட்ரெய்லர்ஸ் என மூன்று வகையான தயாரிப்புகள் குறித்து யோசித்தார்.

CoreB

ஜெய் வணிகம் தொடங்க தீர்மானித்தாலும் அவரிடம் 5 லட்ச ரூபாய் மட்டுமே இருந்தது.

”ட்ரக் தயாரிப்பிற்கு அதிக முதலீடு தேவைப்படும். ஸ்பேர் பார்ட்ஸ் தயாரிப்பிற்கும் 2 முதல் 2.5 கோடி ரூபாய் வரை முதலீடு தேவைப்படும். மற்ற தயாரிப்புகளுடன் ஒப்பிடும்போது ட்ரெய்லர் தயாரிப்பிற்குக் குறைவான முதலீடு தேவைப்படும். அதனால் அதைத் தொடங்குவதே சரியாக இருக்கும் என்று தீர்மானித்தேன்,” என்கிறார்.

2017-ம் ஆண்டு தயாரிப்புப் பணிகளைத் தொடங்க கோட்புலி பகுதியில் தரிசு நிலம் ஒன்றை வாடகைக்கு எடுத்தார். 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் முறையாக ஜோத்பூரைச் சேர்ந்த ஓட்டுநர் ஒருவருக்கு ட்ரக் விற்பனை செய்யப்பட்டது. அவர் 14 லட்ச ரூபாய்க்கு வாங்கினார்.

2

CoreB தொழிற்சாலை

இப்படித் தொடங்கிய CoreB வணிகம் தற்போது எர்த்மூவிங் இயந்திரம், இரும்பு மற்றும் அலுமினியம் வர்த்தகம், வாகனங்களின் வெளிப்புற அமைப்பு தயாரிப்பு, ட்ரெய்லர் பாகங்கள் தயாரிப்பு, ப்ரீஃபேப்ரிகேடட் அமைப்புகள் போன்றவற்றைத் தயாரித்து வருகிறது.


CoreB ட்ரெய்லர்கள் பிரபலமடைந்தது. போட்டியாளர்கள் இருப்பினும் இதன் தயாரிப்பு சந்தையில் பலரைச் சென்றடைந்தது. இவற்றைப் பயன்படுத்திய பலர் மற்றவர்களுக்கு பரிந்துரை செய்யத் தொடங்கியுள்ளனர்.

“HINDALCO அந்த சமயத்தில் Aluminium Bulker அறிமுகப்படுத்தியது. அதேபோன்று குறைந்த எடையில் அதிக பேலோட் கொண்ட ட்ரெய்லர்களை உருவாக்கத் திட்டமிட்டோம்,” என்றார்.

ஜெய் இந்தியாவிலேயே முதல் முறையாக அலுமினியம் ட்ரெய்லர்கள் தயாரிக்க ஆர்&டி உள்ளிட்ட அம்சங்களில் HINDALCO ஆதரவளித்துள்ளது.

தனித்துவமான அம்சம்

ஜெய் உருவாக்கிய அலுமினியம் ட்ரெய்லர்கள் 17 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வழக்கமான ட்ரெய்லர்களைக் காட்டிலும் 2.5 மெட்ரிக் டன் குறைந்த எடை கொண்டுள்ளது. உலகளவில் மிகவும் எடை குறைவான ட்ரெய்லர் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.


HINDALCO உடன் இணைந்து CoreB 52 டன்னர் அலுமினிய ட்ரெய்லர்களை அறிமுகப்படுத்தியது.

தயாரிப்பை உருவாக்கி 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அதிகாரப்பூர்வமாக ட்ரெய்லர்களை சந்தையில் அறிமுகப்படுத்த திட்டமிருந்தார்.

”3.5 லட்ச யூனிட் அலுமினிய ட்ரெய்லர்களை அறிமுகப்படுத்திய மூன்றாண்டுகளில் தயாரிக்கத் திட்டமிட்டோம். கொரோனா பெருந்தொற்று காரணமாக 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு தள்ளிப்போனது,” என்கிறார்.
3

ஜெய் மற்றும் HINDALCO நிர்வாகக் குழுவினர்

2017-ம் ஆண்டு 800 ட்ரெய்லர்களாக இருந்த ஆண்டு உற்பத்தித் திறன் கடந்த நிதியாண்டில் 2,000 ஆக அதிகரித்து 40 கோடி ரூபாய் டர்ன்ஓவர் கொண்டிருந்தது. இந்த நிதியாண்டில் 100 கோடி ரூபாய் என்கிற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய ட்ரக் வடிவமைப்பு 5.5 மெட்ரிக் டன் பேலோட் கொண்டிருக்கும் வகையில் உருவாக்கி இந்திய அரசிடம் வடிவமைப்பிற்கான அனுமதி பெற்றுள்ளார்.


இது துறையில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு சேர்த்தது. CoreB நிறுவனம் உருவாக்கிய புதிய வடிவமைப்பிற்கு ஈடுகொடுக்கும் வகையில் முன்னணி ஆட்டோ உற்பத்தியாளர்களும் ட்ரக் டிசைன்களை மாற்றியமைக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

சவால்கள் மற்றும் வருங்கால திட்டங்கள்

தயாரிப்பை சரியான நேரத்தில் டெலிவர் செய்வதும் சிறந்த தரத்தை உறுதிசெய்வதும் மிகப்பெரிய சவால் என்கிறார் ஜெய்.

“எங்கள் வணிகத்தில் திறன்மிக்க தொழிலாளர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். இவர்களைப் பெறுவது மிகப்பெரிய சவால். இதை சமாளிக்க திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்தும் பயிற்சி மையங்களில் முதலீடு செய்யத் திட்டமிட்டோம்,” என்கிறார் ஜெய்.

இந்தியாவின் ஒட்டுமொத்த ட்ரெய்லர் மற்றும் டிப்பர் துறையில் 40 சதவீத அளவைக் கைப்பற்றும் வகையில் உற்பத்தித் திறனை மேம்படுத்தும் வகையில் CoreB Gram என்கிற தயாரிப்பு தொழிற்சாலை அமைப்பதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் ஜெய் குறிப்பிட்டார்.


போக்குவரத்து தொடர்பான ஒட்டுமொத்த தேவைகளையும் ஒரே இடத்தில் பூர்த்தி செய்யும் திட்டங்களையும் வகுத்து வருகிறார்.


ஆங்கில கட்டுரையாளர்: பாலக் அகர்வால் | தமிழில்: ஸ்ரீவித்யா