சென்னையில் தனது 100வது ஸ்டோரை திறந்தது ரூ.500 கோடி ஆண்டு வருவாயுள்ள 'Sugar Cosmetics'
2015-ம் ஆண்டு தொடங்கபட்ட இந்த நிறுவனம் தற்போது நேரடியாக 100வது ஸ்டோரை சென்னை விஆர் மாலில் தொடங்கி இருக்கிறது.
’சுகர் காஸ்மெட்டிக்ஸ்’ ‘
' நிறுவனம் 2015ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்தியா முழுதும் கிளைகளைக் கொண்டிருக்கும் இந்த நிறுவனத்தின் தனது 100வது கிளையை அண்ணாநகரில் உள்ள வி.ஆர்.மாலில் தொடங்கியுள்ளது.2015-ம் ஆண்டு தொடங்கபட்ட இந்த நிறுவனம் தற்போது நேரடியாக 100வது ஸ்டோரை தொடங்கி இருக்கிறது.
இந்த ஸ்டோரில் இவர்களுடைய பிராண்டின் அழகுசாதனப் பொருட்கள் மட்டுமே கிடைக்கும். இவர்களுடைய ஸ்டோரை தவிர இந்தியா முழுவதும் 500க்கும் மேற்பட்ட ஸ்டோர்களில் இவர்களுடைய பிராண்ட் கிடைப்பதாக நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைமைச் செயல் அதிகாரியான வினிதா சிங் தெரிவித்தார். தொடக்க விழாவில் கலந்து கொண்ட அவர் மேலும் சில விஷயங்கள் பகிர்ந்து கொண்டார்.
”ஆரம்பத்தில் நாங்கள் நேரடியாக மக்களிடையே விற்கும் பிராண்டாக இருந்தோம். 2017-ம் ஆண்டில் இருந்துதான் ஸ்டோர்கள் மூலம் விற்பனை செய்யத் தொடங்கினோம். கடந்த நான்கு ஆண்டுகளில் நேரடியாக 100 ஸ்டோர்களும், இந்தியா முழுவதும் 35,000க்கும் மேற்பட்ட மல்டி பிராண்ட் ஸ்டோர்களிலும் எங்களுடைய புராடக்ட் கிடைக்கிறது அடுத்த சில ஆண்டுகளில் நேரடி ஸ்டோர்களின் எண்ணிக்கையை 200 ஆக உயர்த்த திட்டமிட்டிருக்கிறோம். மேலும் எங்களுடைய புராடக்ட்கள் கிடைக்கும் எண்ணிக்கையையும் 60,000 கடைகளில் கிடைக்க வேண்டும் என்னும் இலக்குடன் செயல்பட்டுவருகிறோம்,” என்றார்.
நிறுவனத்தின் வருமானத்தில் சுமார் 25 சதவீதம் வரை தென் இந்தியாவில் இருந்து வருகிறது. தென் இந்தியா எங்களுக்கு முக்கியமான சந்தை. இந்தியா முழுவதும் எங்களுக்கு நேரடி ஷோரூம்கள் உள்ளன. வடகிழக்கு மாநிலங்களில் கூட இரண்டு நேரடியான ஷோரூம்கள் உள்ளன.
இன்ஃப்ளுயன்ஸர் மூலமாகவே வாடிக்கையாளர்களை சென்றடைகிறோம். மேலும், பராமரிப்பு குறித்து தொடர்ந்து கண்டெண்ட்களை உருவாக்கி வருகிறோம். இவைதான் எங்களுக்கான வாடிக்கையாளர்களை உருவாக்குகிறது. இப்போதைக்கு பெண்கள் பிரிவில் மட்டுமே கவனம் செலுத்திவருகிறோம்.
கோவிட் சமயத்தில் விற்பனை
அனைவரையும் போல கோவிட் காலத்தில் எங்களுக்கும் விற்பனை பாதித்தது. ஆனால், அதில் இருந்து மெல்ல மெல்ல விற்பனை உயர்ந்தது.
“தற்போது ஆண்டுக்கு 500 கோடி ரூபாய் என்னும் அளவில் வருவாய் இருக்கிறது. நாங்கள் வேகமாக வளர்ச்சி அடைவதால் நடப்பு நிதி ஆண்டில் 1000 கோடி ரூபாய் என்னும் வருவாயை எட்டுவோம் என்னும் நம்பிக்கை இருக்கிறது,” என்றார் வினிதா சிங்.
சில வாரங்களுக்கு முன்பு சிரீஸ் டி முதலீட்டாக 5 கோடி டாலர் நிதியை ’சுகர் காஸ்மெட்டிக்ஸ்’ பெற்றது. எலிவேஷன் கேபிடல், ஏ91 பார்ட்னர்ஸ் உள்ளிட்ட சில நிறுவனங்கள் இந்த முதலீட்டை செய்துள்ளன.
“அதனால் நிறுவனத்துக்குத் தேவையான நிதி இருக்கிறது. இப்போதைக்கு எங்களுடைய கவனம் இந்தியாதான். இந்தியாவில்தான் வளர்ச்சியை எதிர்பார்க்கிறோம்.”
ஆனால், எங்கள் மொத்த வருமானத்தில் சுமார் 5 சதவீதம் முதல் 8 சதவீதம் வரை வெளிநாடுகளில் இருந்து கிடைக்கிறது. மத்திய கிழக்கு நாடுகள், கிழக்கு ஆசியா நாடுகள் மற்றும் அமெரிக்கா ஆகியவை எங்களுக்கு முக்கியமான சந்தையாகும் என விளக்கினார்.
இப்போதைக்கு நிதி இருக்கிறது. ஐபிஓ செல்ல இரண்டு அல்லது மூன்று நிதி ஆண்டுகள் ஆகும். அதுவரை நிறுவனத்துக்குத் தேவையான நிதி இருக்கிறது. தேவைப்பட்டால் ப்ரி ஐபிஓ (Pre IPO) நிதி திரட்டுவோம் இல்லையெனில் நேரடியாக ஐபிஓதான், என்றார் வினிதா.
”எங்களுடைய செயலியை 20 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் டவுன்லோடு செய்திருக்கிறார்கள். எங்களுடைய மொத்த வருமானத்தில் சுமார் 25 சதவீதம் நேரடியாக வருகிறது. மீதமுள்ள எங்களுடைய ரீடெய்ல் மற்றும் இதர ஸ்டோர்கள் மூலம் வருகின்றன,” என வினிதா சிங் கூறினார்.
டிஜிட்டல் மூலமாகவே பெருமளவு சந்தையை ’சுகர் காஸ்மெட்டிக்ஸ்’ பிடித்திருக்கிறது. யூடியூப்,. இன்ஸ்டா உள்ளிட்ட சமூக வலைதளங்களை சிறப்பாக பயன்படுத்தி இருக்கிறது. சமீபத்தில் நிதி திரட்டி இருப்பதால் டிவி விளம்பரங்களை வெளியிடும் திட்டம் இருப்பதாகவும் வினிதா கூறினார்.