25 மில்லியன் டாலர் நிதி திரட்டிய சென்னை ஸ்டார்ட்-அப் SuperOps!
புதிதாக திரட்டப்பட்டுள்ள நிதி, ஏஐ ஆய்வு மற்றும் வளர்ச்சிக்கு, சர்வதேச அளவிலான விரிவாக்கத்துடன், மத்திய சந்தை மற்றும் நிறுவனம் சார்ந்த சேவையாளர்களுக்கு (MSPs) தனது சேவைகளை விரிவாக்கவும் பயன்படுத்தப்படும்.
சென்னையைச் சேர்ந்த ஏஐ சாஸ் ஐடி நிர்வாக மேடையான 'சூப்பர்ஆப்ஸ்' (SuperOps) சி-சுற்றில் 25 மில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ளது. மார்ச் கேபிட்டல் இந்த சுற்றுக்கு தலைமை வகித்தது.
இந்த சுற்றில் ஏற்கனவே உள்ள முதலீட்டாளர்கள் அடிஷன் மற்றும் Z47 பங்கேற்றனர். இதுவரை நிறுவனம் 54.4 மில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ளது.

புதிதாக திரட்டப்பட்டுள்ள நிதி, ஏஐ ஆய்வு மற்றும் வளர்ச்சிக்கு, சர்வதேச அளவிலான விரிவாக்கத்துடன், மத்திய சந்தை மற்றும் நிறுவனம் சார்ந்த சேவையாளர்களுக்கு (MSPs) தனது சேவைகளை விரிவாக்கவும் பயன்படுத்தப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
“மூன்று முக்கியத் துறைகளில் இந்த நிதியை முதலீடு செய்ய இருக்கிறோம். மத்திய சந்தையை அணுகுவது மற்றும் அதிக மதிப்புள்ள வாடிக்கையாளர்களுக்கு விற்பது ஆகியவை இப்போது முன்னுரிமை ஆகும். யூகே மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலக சந்தை விரிவாக்கமும் இதில் அடங்கும்,” என சூப்பர் ஆப்ஸ் இணை நிறுவனர் மற்றும் சி.இ.ஓ.அரவிந்த் பார்த்திபன் யுவர்ஸ்டோரியிடம் தெரிவித்தார்.
“ஏஐ நுட்பத்தில் இரண்டாவது கவனம் அமைகிறது. ஏஐ மாதிரிகளை உருவாக்குவதில் திறன் பெற்ற குழுவை நியூசிலாந்தில் கொண்டுள்ளோம். அண்மையில் மோனிகா எனும் பெயரில் சூப்பர் பாட் துணையை அறிமுகம் செய்தோம். இதில், மேலும் வசதிகளை சேர்த்து வருகிறோம். ஏஐ நுட்பத்திலான முதலீடு, எம்.எஸ்.பிக்கள் எதிர்காலத்தில் செயல்படும் விதத்தை மாற்ற இருக்கிறது,” என்றும் அவர் கூறினார்.
கடந்த நான்கு ஆண்டுகளில் நிறுவனம், உலகம் முழுவதும் உள்ள எம்.எஸ்.பிக்களுக்கான நம்பகமான பார்ட்னராக உருவாகி இருக்கிறது. இத்தகைய ஆயிரக்கணக்கான சேவையாளர்கள் தங்கள் செயல்பாடுகளை ஏஐ மேடை மூலம் செயல்திறன் பெற வைத்திருக்கிறது.
எம்.எஸ்.பி தீர்வுகளில் உள்ள அனுபவத்தின் அடிப்படையில் நிறுவனம் ஐடி குழுக்களின் செயல்திறனை மேம்படுத்தும் எண்ட்பாயிண்ட் நிர்வாக சேவை மூலம் பரவலான ஐடி சந்தையில் நுழைகிறது. நிறுவன வாடிக்கையாளர் பரப்பில் 20 சதவீதமாக உள்ள இண்டர்னல் ஐடி குழுக்கள் இந்த தீர்வுகளை பயன்படுத்திக்கொள்ளலாம்.
"எம்.எஸ்.பி.க்களின் செயல்பாட்டில் இன்னொரு பக்கமாக எண்ட்பாயிண்ட் நிர்வாகம் அமைகிறது. அதன் வாடிக்கையாளர் பரப்பில் 20 சதவீதம் இண்டர்னல் குழுக்கள் என்பதால் இது இயல்பானதே. பெருந்தொற்றுக்கு பின் ஏற்பட்ட மாற்றம் இதற்கு முக்கியக் காரணம். பல நிறுவனங்கள் எங்களின் ஆர்.எம்.எம். சேவையை வாங்கி பயன்படுத்தினர். இதன் மேல் புதிய சேவையை உருவாக்கி இருக்கிறோம்,” என்று பார்த்திபன் கூறுகிறார்.
கார்ண்டர் அறிக்கைபடி, 2025ல் ஐடி செலவீனம் 5,.74 லட்சம் கோடி டாலராக அதிகரிக்கும், என எதிர்பார்க்கப்படுகிறது.
2020ல் பாத்திபன், ஜெயகுமார் கரும்பசலம் ஆகியோரால் துவக்கபப்ட்ட ஏஐ சார்ந்த சாஸ் ஸ்டார்ட் அப்பான சூப்பர்ஆப்ஸ், எம்.எஸ்.பிக்கள் தங்கள் ஐடி நிர்வாக செயல்முறையை எளிதாக்க ஒருங்கிணைந்த PSA-RMM மேடையை அளிக்கிறது. கடந்த ஆண்டில், நிறுவன வாடிக்கையாளர் பரப்பு மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. 104 நாடுகளில் அதன் வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது.
“சூப்பர்ஆப்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சியில் பங்கேற்பதில் உற்சாகம் கொள்கிறோம். இந்த மேடை உலக அளவில் எம்.எஸ்.பி.க்கள் வர்த்தகத்தை மேம்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட குழுவின் அணுகுமுறை மற்றும் ஏஐ மேம்பாடுகள் என்னை வியக்க வைக்கின்றன. சூப்பர் ஆப்ஸ், போட்டி நிறுவனங்களை மிஞ்சி, ஐடி சேவையாளர்களுக்கு அதிக மதிப்பை உண்டாக்கித்தரும் என நம்புகிறேன்,” என்று Z47 நிர்வாக இயக்குனர் தருண் டாவ்டா கூறியுள்ளார்.
நிறுவனம் ஏஐ நுட்பத்தில் அதிக நம்பிக்கை கொண்டுள்ளது. கடந்த ஆண்டு, மோனிகா எனும் அதி சூழல் திறன் கொண்ட ஏஐ ஏஜெண்டை அறிமுகம் செய்தது. எம்.எஸ்.பிக்களின் தரவுகளை அலசி ஆராய்ந்து, தனிப்பட்ட உள்ளொளிகள் அளிக்க, வழக்கமான செயல்களை தானியங்கிமயமாக்க, முடிவெடுத்தலில் உதவ என வழிகாட்டியாக இது செயல்படுகிறது. மோனிகா மூலம், எம்.எஸ்.பிக்கள் மற்றும் ஐடி குழுக்கள் செயல்முறைகளை 30 சதவீதம் மேம்படுத்தலாம்.
தற்போது 104 நாடுகளில் பல சர்வதேச ஐடி நிறுவனங்கள் தங்களை செயல்முறையை எளிதாக்கி, வர்த்தக வளர்ச்சிக்கு ஆதரவாக இந்த மேடையை பயன்படுத்துகின்றன.
“அமெரிக்கா, யூகே, ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியா எங்களுக்கு அதிக வருவாய் அளிக்கும் பகுதிகளாக இருக்கின்றன. வட அமெரிக்காவில் இருந்து 70 சதவீத வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்த ஆண்டு ஆங்கிலம் பேசாத சந்தையில் குறிப்பாக ஐரோப்பா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் கவனம் செலுத்த உள்ளோம். இந்த பகுதிகளில் பார்ட்னர் சேனல்களில் மேலும் கவனம் செலுத்தி, அவர்களுடன் இணைந்து உலக அளவில் விற்பனை செய்ய இருக்கிறோம்,” என்று பார்த்திபன் மேலும் கூறினார்.
நிறுவனம் கடந்த 2023ல் பி சுற்றில் 12.4 மில்லியன் டாலர் நிதி திரட்டியது. மார்ச் கேபிடல் மற்றும் அடிஷன் தலைமையிலான சுற்றில், மேட்ரிக்ஸ் பாட்னர்ஸ் இந்தியாவும் பங்கேற்றது.
“எம்.எஸ்.பி தொழில்நுட்ப சந்தையில் மாற்றத்தை கொண்டு வரும் திறனை சூப்பர்ஆப்ஸ் நிருபித்துள்ளது. சேவைகள் மேம்பாடு மற்றும் உலக சந்தையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி மூலம், நிறுவனம் முக்கிய ஒன்றாகி இருக்கிறது. நிறுவனத்தின் ஏஐ மேடை விரிவாக்கம் மற்றும் அதன் சேவைகளை பெரிய எம்.எஸ்.பி.க்கள் மற்றும் இண்டர்னல் குழுக்களுக்கு விரிவாக்கம் செய்வதில் உதவுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்,” என மார்ச் கேபிடல் துணை தலைவர் ரவி ராஜாமணி கூறினார்.
கடந்த மாதம், பிரெஷ்வொர்க்ஸ் முன்னாள் செயல் அதிகாரி ஜவ்னீத் அகமதுவை நிறுவனம் விற்பனை துணைத்தலைவராக நியமிக்க இருப்பதை யுவர்ஸ்டோரி பிரத்யேகமாக வெளியிட்டது.
"அதிகரிக்கும் போட்டிமிக்க சந்தையில், ஐடி சேவையாளர்கள் தங்கள் செயல்பாட்டை விரிவாக்கி, சீராக்கி, செழித்து வளர உதவும் சூப்பர் ஆப்ஸ் நிறுவன நோக்கம் உற்சாகம் அளிக்கிறது,“ என அடிஷன் நிறுவனத்தின் டாட் ஆர்ப்மன் கூறினார்.
கடந்த ஆண்டு நிறுவனம் 250 சதவீத வளர்ச்சி கண்டது என்றும் இந்த ஆண்டு 100 சதவீதத்திற்கு மேல் வளர்ச்சி தொடரும், என்றும் பார்த்திபன் கூறினார்.
“பார்ட்னர் சார்ந்த ஜிடிஎம் உத்தியுடம், எஸ்.எம்.பி மற்றும் மத்திய சந்தை வாடிக்கையாளர்கள் எனும் இரட்டை வளர்ச்சி மாதிரி நல்ல பலன் அளிக்கிறது. அடுத்த 203 ஆண்டுகளில் 200-300 சதவீத வளர்ச்சியை தக்க வைப்பதே இலக்கு,” என்கிறார்.
ஆங்கிலத்தில்: புவனா காமத், தமிழில்: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan